Mai 10, 2024

மட்டக்களப்பில் இலங்கை காவல்துறை சண்டித்தனம்!

மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் அமைக்கப்பட்டிருந்த உண்ணாவிரதப் பந்தலை அகற்றி பொலீசார் அட்டகாசம் செய்வதாக பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கம் தெரிவித்துள்ளது.

சட்டத்தை மதித்து வீதி ஓரத்தில் யாருக்கும் எந்த வித பாதிப்பும் இன்றி அகிம்சை ரீதியாக முன்னெடுக்கப்படும் போராட்டத்தை அச்சுறுத்தும் வகையில் தொடர்ச்சியாக மட்டக்களப்பு மாவட்ட பொலீசார் செயற்பட்டு வருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்ட மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் நடைபெற்று வரும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை முடக்கும் நோக்கில் தொடர்ச்சியாக நீதிமன்ற தடை உத்தரவுகளை பெற்று வந்த மட்டக்களப்பு மாவட்ட பொலீசார்  இரவோடு இரவாக உண்ணாவிரதப் போராட்டம் இருந்து வந்த பந்தலை அகற்றி அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு பொலீசாரிடம் பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் கிழக்கு மாகாண பிரதிநிதிகள் முறைப்பாடு செய்யச் சென்ற போது நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் உண்ணாவிரதப் பந்தலை அகற்றியதாக பொலீசார் தெரிவித்துள்ளனர்.

தமிழ் மக்களின் அகிம்சை ரீதியான ஜனநாயக போராட்டங்களை முடக்கும் செயற்பாடுகள் தீவிரமடைந்து வருகிறது.

சட்டத்தை தவறாக வழிநடத்தும் பொலீசார் தமிழ் மக்களின் அகிம்சை ரீதியான ஜனநாயக போராட்டங்களை மாத்திரம் இலக்கு வைத்து தடைசெய்து வருகின்றனர். ஆனால் தென்னிலங்கையில் நடைபெறும் எந்த போராட்டங்களையும் முடக்குவதற்கு இலங்கை பொலீசார் நீதிமன்றத்தை இதுவரை நாடவில்லை. எனவே இந்த நாட்டில் அரசியல் அதிகாரமற்ற நீதி மறுக்கப்பட்ட சமூகமாக தமிழர்கள் அடக்கி ஆள படுகின்றார்கள் என்பதையே பொலீசாரின் இந்த  செயற்பாடுகள் மீண்டும் மீண்டும் நிறுபித்துக் கொண்டிருக்கின்றன.

எந்த தடை வந்தாலும் தமிழ் மக்களின் நீதிக்காண போராட்டம் தொடரும் எனவும் அடக்குமுறைகளை தகர்த்தெறிந்து தமிழ் மக்களின் நீதிக்கான அகிம்சை போராட்டத்திற்கு தமிழ் மக்கள் அலை அலை என திரண்டு வந்து ஆதரவு வழங்குமாறு p2p மக்கள் பேரெழுச்சி இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.