Mai 5, 2024

ஈழத் தமிழர்களுக்கு ரூ4000 நிதி வழங்கிய தமிழ்நாடு முதல்வர் –

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை தீவிரமடைந்ததால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மக்களின் நலன் கருதி, அரிசி அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணமாக 4000 ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி மே மாதம் முதற்கட்டமாக 2000 ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது. இதையடுத்து 14 வகை பொருட்களுடன் கூடிய மளிகைத் தொகுப்பும், இரண்டாம் தவணையாக 2000 ரூபாயும் ஜூன் 15- ம் திகதி முதல் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிவாரண பணம் மற்றும் மளிகை பொருட்கள் முகாம் வாழ் இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டு முகாமிற்கு வெளியேயும் இலங்கைத் தமிழர்கள் பலர் பல்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர். இந்த கொரோனா பெருந்தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் இவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படைந்தது

இந்நிலையில், முதல் முறையாக முகாமிற்கு வெளியே வாழும் 13,553 இலங்கை தமிழ்க் குடும்பங்களுக்கு தலா 4000 ரூபாய் வீதம் மொத்தம் 5 கோடியே 42 இலட்சத்து 12 ஆயிரம் ரூபாய் கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை செயல்படுத்திட முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசாணை வெளியிட்டார்.

அதன்படி, கொரோனா நிவாரண நிதியாக 4,000 ரூபாய் வழங்கும் திட்டத்தினை, 5 இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.

இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், தமிழ்நாட்டில் முகாம்களுக்கு வெளியே வாழும் 13,553  ஈழத்தமிழர் குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக, தலா ரூ.4000 வழங்கும் திட்டத்தைத் தலைமைச் செயலகத்தில் இன்று தொடங்கி வைத்தேன்.

அனைத்துத் தரப்பு மக்களையும் ஒருதாய் மக்களென அரவணைத்துத் தி.மு.க. அரசு காக்கும் என்று தெரிவித்துள்ளார்.