Mai 3, 2024

தமிழகத்தில் தொற்று குறைந்த மாவட்டங்களில் தேநீர் கடைகளை திறக்க அனுமதி

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 10ம் தேதி முதல் 21ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்தது, அதன் பின்னர் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இதனையடுத்து தொற்று எண்ணிக்கை ஓரளவு குறையத்தொடங்கியதை அடுத்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியது. இந்நிலையில் நாளை காலை 4 மணியுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில் கூடுதல் தளர்வுகள் அளித்த தமிழக அரசு ஊரடங்கை மே 21ம் தேதி வரை நீட்டித்தது.

தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறப்பது, வாடகை வாகனங்களில் இ-பதிவுடன் மக்கள் பயணிக்க அனுமதி, குறிப்பிட்ட அளவு பணியாளர்களுடன் அலுவலக செயல்பாட்டுக்கு அனுமதி என பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் தேநீர் கடைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில் நாளை முதல் தேநீர் கடைகளும் இயங்கலாம் என தமிழக அரசு தளர்வு அறிவித்துள்ளது. தொற்று பாதிப்பு குறைந்த 27 மாவட்டங்களில் மட்டும் தேநீர் கடைகளை திறக்கலாம் எனவும் தேநீர் கடைகளில் பார்சல் சேவை மட்டும் வழங்கலாம் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதே போல காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே பார்சல் சேவையுடன் தேநீர் கடைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் தேநீர் கடைகள் திறக்க அனுமதி இல்லை எனவும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.