Mai 8, 2024

‘ஒன்றிய அரசு’ என்று அழைப்பது குறித்து மு.க. ஸ்டாலின் சட்டமன்றப் பேரவையில் விளக்கம்

முதலமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ‘ஒன்றிய அரசு’ என்று சொல்வதை, ஏதோ சமூகக் குற்றம் போல யாரும் நினைக்க வேண்டாம். அப்படி சிலர் கருதிக் கொண்டிருக்கிறார்கள். அது உள்ளபடியே முழுக்க முழுக்க தவறு. சட்டத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ, அதைத்தான் நாங்கள்சொல்கிறோம்.

நமது அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் வரி, “இந்தியா, அதாவது பாரதம் – மாநிலங்களைக் கொண்ட ஓர் ஒன்றியமாய் இருக்கும்” என்று தான்உள்ளது. India, that is Bharat, shall be a Union of States” என்று தான் இருக்கிறது. அதைத்தான்பயன்படுத்துகிறோமே தவிர, சட்டத்தில் இல்லாததைநாங்கள் பயன்படுத்தவில்லை. ‘ஒன்றியம்’ என்பதுதவறான சொல் அல்ல; ‘மாநிலங்கள் ஒன்றுசேர்ந்தது’ என்பதுதான் அதனுடைய பொருள். இன்னும் சிலர் பேரறிஞர் அண்ணா அவர்கள் சொல்லாததை, எங்கள் தலைவர் கலைஞர் அவர்கள்சொல்லாததை நாங்கள் சொல்லி வருவதாகக் குறிப்பிட்டு, அதை விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய 1957ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையிலேயே ‘இந்திய யூனியன்’ என்று தான்அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது.  1963 ஜனவரி  25, நாடாளுமன்ற மாநிலங்களவையில், பேரறிஞர்அண்ணா அவர்கள் பேசுகிறபோது, குறிப்பிட்டார்கள் – “அரசினுடைய இறைமை என்பதற்கு நாம்மேற்கொள்ளும் பொருள் என்ன? அரசியல் இறைமையானது, பொது மக்களிடம் நிலைத்துள்ளதுஎன அரசியலமைப்பின் முகவுரை கூறுகிறது. சட்டம்சார்ந்த இறைமையானது, கூட்டாட்சி ஒன்றியத்துக்கும், அதன் அங்கங்களுக்கும் இடையே- அதாவது மாநிலங்கள் பிரித்துத் தரப்பட்டுள்ளது” என்றுதான் பேசியிருக்கிறார்.

‘சமஷ்டி’ என்ற வார்த்தையை மரியாதைக்குரியம.பொ.சி. அவர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள். ‘வெளியேறுக மிகுதியான அதிகாரக் குவிப்பு – வருக உண்மையான கூட்டாட்சி’ என்று மூதறிஞர் ராஜாஜி அவர்களே எழுதியிருக்கிறார்கள். எனவே, ஒன்றியம் என்ற வார்த்தையைப் பார்த்து யாரும் மிரளத்தேவையில்லை. (மேசையைத் தட்டும் ஒலி) அந்த ஒரு வார்த்தையில் கூட்டாட்சித் தத்துவம் அடங்கியிருக்கிறது. அதற்காகத்தான் அதை நாங்கள் பயன்படுத்துகிறோம் – பயன்படுத்துவோம் – பயன்படுத்திக் கொண்டேயிருப்போம்