Mai 9, 2024

மட்டக்களப்பில் மணல், கசிப்பு வியாபாரி உட்பட நால்வர் கைது!

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸாரின் விசேட நடவடிக்கையில்  சில்லுக்கொடியாற்றுப்  பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை நேற்று புதன்கிழமை (16) நள்ளிரவில் முற்றுகையிட்டு கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர், கசிப்பு வியாபாரி மற்றும் கஞ்சாவுடன் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் உட்பட 4 பேரை கைது செய்துள்ளனர்.

அத்துடன் 75 லீற்றர் கசிப்பு 3400 லீற்றர் கோடா, கசிப்பு உற்பத்தி உபகரணங்கள்,  மோட்டர்சைக்கிள், உழவுஇயந்திரம் என்பன மீட்கப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

விசேட புலனாய்வு பிரிவின் தகவலுக்கமைய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனைக்கமைய வவுணதீவு பொலிஸ் பொறுப்பதிகாரி  தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசேட முற்றுகை நடவடிக்கை ஒன்றை சம்பவதினமான நேற்று இரவு 9 மணிக்கு  ஆரம்பித்தனர்.

இதன்போது பன்சேனை சில்லுக்கொடியாறு ஆற்றுப்பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்டபோது அங்கு கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்ததுடன் 17 பெரல்களில், 3400 லீற்றர் கோடா மற்றும் கசிப்பு உற்பத்தி உகரணங்களையும் மீட்டனர்.

அதேவேளை கசிப்பு உற்பத்தி நிலையத்தில் இருந்து  3 கான்களில் 75 லீற்றர் கசிப்பை மோட்டர்சைக்கிளில் எடுத்துச் சென்ற கசிப்பு வியாபாரி ஒருவரை கைது செய்ததுடன் 75 லீற்றர் கசிப்பு மற்றும் மோட்டாசைக்கிள் ஒன்றையும் மீட்டுக்கொண்டு அங்கிருந்து வெளியேறும் போது சட்டவிரோதமாக ஆற்றில் உழவு இயந்திர்தில் மண் அகழ்வில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்ததுடன் உழவு இயந்திரத்தை மணலுடன் மீட்டனர்.

இதனைத் தொடர்ந்து பரித்திச்சேனையில் 2 ஆயிரம் மில்லிக்கிராம் கஞ்சாவுடன் 19 வயது இளைஞர் ஒருவர் உட்பட 4 பேரை இந்த விசேட நடவடிக்கையில் கைது செய்துள்ளதாகவும் நேற்று இரவு 9 மணியில் இருந்து ஆரம்பித்த இந்த விசேட நடவடிக்கை இன்று பகல் 1 மணிவரை இடம்பெற்றுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.