September 16, 2024

தேசியப்பட்டியல்: குகதாசனிற்கு – தொங்குகிறார் துரை?

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு கிடைத்த தேசியப்பட்டியல் ஆசனத்தை குகதாசனிற்கு கொடுத்துவிட சம்பந்தன் விடாப்பிடியாக நிற்க தனக்கு வழங்குமாறு, தமிழ் அரசு கட்சியின் செயலாளர் கி.துரைராசசிங்கம், கூட்டமைப்பின் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இம்முறை தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 2 ஆசனங்களை மட்டுமே கைப்பற்றியது. கல்குடா தொகுதியை சேர்ந்த கட்சியின் செயலாளர் கி.துரைராசசிங்கம், முன்னாள் எம்.பி சீ.யோகேஸ்வரன் ஆகியோர் தோல்வியடைந்தனர்.இலங்கை தமிழ் அரசு கட்சியின் இளைஞர் அணி தலைவர் கி.சேயோனும் கல்குடா தொகுதிதான். ஆனால், கல்குடா தொகுதியை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கைப்பற்றினர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு தேர்தல் முடிவு வந்ததும், நேற்று காலை இரா.சம்பந்தனின் திருகோணமலை இல்லத்திற்கு கி.துரைராசசிங்கம் சென்றார். நேற்று காலை 6 மணிக்கே அவர் சென்று விட்டார்.

அவர் சென்றபோது இரா.சம்பந்தன் தூக்கத்திலிருந்தார். சம்பந்தன் தூங்கிக் கொண்டிருக்கும் விடயம் சொல்லப்பட்டபோது, அவருக்காக காத்திருப்பதாக கூறிய துரைராசசிங்கம், நீண்டநேரம் காத்திருந்து, இரா.சம்பந்தனை சந்தித்தார்.கல்குடா தொகுதிக்கு ஒரு ஆசனம் அவசியம் என கூறிய செயலாளர், அதை தனக்கு வழங்குமாறு கேட்டுக் கொண்டதாக செய்திகள் வெளியாகியிருந்தது.

எனினும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட படி குகதாசனிற்கு அந்த ஆசனத்தை வழங்குவதில் சம்பந்தன் விடாப்பிடியாக உள்ளதாக சொல்லப்படுகின்றது.