April 26, 2024

கிளிநொச்சியில் சட்டவிரோத செயற்பாடு- அழியும் விவசாயம்!

கிளிநொச்சி மாவட்டத்தின் உமையாள்புரம் பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால், வாள்வெட்டு உள்ளிட்ட குற்றச்சம்பவங்களும் அதிகரித்துள்ளதாக உமையாள்புரம் மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், ஏற்கனவே, கிளிநொச்சி மாவட்டத்தின் உருத்திரபுரம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மண் அகழப்படுவதால் எதிர்காலத்தில் விவசாயம் முற்றாக அழிந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் தற்போது உமையாள்புரம் பிரதேசம் ஆணையிறவு கடல் நீரேரிக்கு அருகில் உள்ள கிராமத்திலும், சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு இடம்பெறுவதாக பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

உழவு இயந்திரங்கள் மூலம் அகழப்படும் மணல் கரைச்சி பிரதேச சபையின் கழிவு அகற்றும் பகுதியில் சேமிக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து டிப்பர்களில் எடுத்துச் செல்லப்படுவதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோத மணல் அகழ்வு காரணமாக வாள்வெட்டு சம்பவங்களும், குழு மோதல்களும் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டும் அவர்கள், பொறுப்பு வாய்ந்த தரப்பினர் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.

எனவே உமையாள்புரம் கிராமத்தை பாதுகாக்க தவறும் பட்சத்தில், முழு கிராமமும் உவர் நிலமாக மாறிவிடும் அபாயம் காணப்படுவதாகவும் பிரதேச மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.