März 29, 2024

யாழில் பாதுகாப்பு எனும் போர்வையில் மக்களின் காணிகளில் இராணுவம் விவசாயம்!

பல பத்து வருடங்களாக இழந்த வாழ்விடத்தை மீட்டுத்தரக் கோரி தமிழ் மக்கள் போராடிவரும் வேளை பாதுகாப்பு எனும் போர்வையில் பிடித்து வைத்திருக்கும் மக்களின் காணிகளில் விவசாயம் செய்வருவது மக்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

யாழ்.பாதுகாப்பு படைத்தலைமையகத்தை சூழவுள்ள பொதுமக்களின் பெருமளவான நிலப்பரப்பினை இராணுவத்தினர் கையகப்படுத்தி உயர் பாதுகாப்பபு வலயமாக அறிவித்துள்ளனர்.

அப்பகுதிகளில் வாழ்ந்த மக்கள் சுமார் 32 வருட காலங்களுக்கு மேலாக இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்கள், உறவினர் வீடுகள் , வாடகை வீடுகளில் தங்கியுள்ளனர்.

தம்மை சொந்த இடங்களில் மீள் குடியேற்றுமாறு கோரி கடந்த 11 வருடங்களுக்கு மேலாக போராட்டங்களை நடாத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பொதுமக்களின் காணிகளை , தேசிய பாதுகாப்பு என கூறி , இராணுவத்தினர் கையகப்படுத்தி அதனை உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தி வைத்த்துள்ளனர்.

குறித்த காணியில் இராணுவத்தினர் விவசாய பண்ணைகள் , கால்நடை பண்ணைகள் என்பவற்றை அமைத்துள்ளனர்.

இன்று விவசாய பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்ட மிளகாய்களை உள்ளூர் சந்தைகளில் விநியோகித்துள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பல இலட்சங்களை ஊதியமாக பெறும் இராணுவத்தினரால் செய்கை பண்ணப்படும் மரக்கறிகள் உள்ளுர் சந்தைகளில் விற்பதன் ஊடாக விலைத்தளம்பலை ஏற்படுத்தி விவசாயிகளின் வருமானத்தில் பாதிப்பை சிறிலங்கா இராணுவம் ஏற்படுத்துவதும் குறிப்பிடத்தக்கது.