Mai 4, 2024

முல்லையில் புயல் தாண்டி ஒதியமலை படுகொலை நினைவேந்தல்!

முல்லைத்தீவு ஒதியமலைப்பகுதியில் 1984 ஆண்டு இதே நாளில் சிறீலங்கா அரச பேரினவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட 32 தமிழ் பொதுமக்களின் நினைவுநாள் கொட்டும் மழை,புயல் அபாயத்தின் மத்தியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது..

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஒதியமலை என்ற கிராமத்தில் இலங்கைப் படைத்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட படுகொலையில் அப்பாவி பொதுமக்கள் 32பேர் உயிரிழந்திருந்தனர்.அதிகாலையில் பதவியா இராணுவ முகாமில் இருந்து நெடுங்கேணிக்கு 5 கிமீ தூரத்தில் அமைந்துள்ள ஒதியமலைக் கிராமத்திற்குள் புகுந்த கிட்டத்தட்ட 30 இராணுவத்தினர் அக்கிராமத்திலுள்ள வீடுகளில் இருந்த ஆண்களை மட்டும் தனியான ஓர் இடத்திற்கு கூட்டிச் சென்று சுட்டுப் படுகொலை செய்தனர். இவ்வாறு 27 ஆண்கள் கொல்லப்பட்டனர். மேலும் 5 ஆண்களைத் தம்முடன் கூட்டிச் சென்றனர். ஆனாலும், இவர்கள் பின்னர் வீடு திரும்பவில்லை

பன்னாட்டு மன்னிப்பு அவையின் அறிக்கையில், நிகழ்வை நேரில் கண்ட சாட்சியங்கள் பதியப்பட்டுள்ளன.நள்ளிரவில் 30 இற்கும் 40 இற்கும் இடைப்பட்ட இராணுவத்தினர் கிராமத்துள் புகுந்து, அங்குள்ள மலைக்காடு கோவிலில் தங்கியிருந்தனர். அதிகாலை குடிமனைகளுக்குள் புகுந்து ஒவ்வொரு வீட்டிலும் இருந்த ஆண்களை அவர்களது கண்களையும் கைகளையும் கட்டி இழுத்துச் சென்றனர். இவர்களில் பெரும்பாலானோர் 15 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள். இவர்கள் அங்கிருந்த சனசமூக நிலையக் கட்ட்டடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். இவர்களில் 27 பேர் அங்கேயே சுட்டுக் கொல்லப்பட்டனர். ஐவர் (50 வயதானவர்கள்) 25 சிறீ 6511 என்ற இலக்கத்தகடு கொண்ட இழுவை இயந்திரம் ஒன்றில் ஏற்றிச் செல்லப்பட்டனர். இவர்கள ஐவரும் பின்னர் வீடு திரும்பவில்லை. இவர்களில் இருவரது எரிந்த உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. அவர்களின் உடுப்புகளைக் கொண்டு பின்னர் அடையாளம் காணப்பட்டனர

இதே நாளில் இராணுவத்தினரின் இன்னும் ஒரு குழு செம்மலை என்ற தமிழ்க் கிராமம் ஒன்றுக்கு சென்றது. ஆனால், அவர்கள் அங்கு வருமுன்னரே கிராமத்தவர்கள் தமது வீடுகளில் இருந்து வெளியேறி முல்லைத்தீவுக்குச் சென்று விட்டதால் தப்பித்திருந்தனர்.