Mai 22, 2024

திருகோணமலை உயர் தொழில்நுட்ப நிறுவனத்தின் மீது மாணவர்கள் முறைப்பாடு

திருகோணமலை உயர் தொழில்நுட்ப நிறுவனத்தில் (ATI) உயர் தேசிய டிப்ளோமா தகவல் தொழில்நுட்பம் (HNDIT) துறை நிறுத்தப்பட்டுள்ளதால் தமது எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாக மாணவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

திருகோணமலை உயர் தொழில்நுட்ப நிறுவனத்தில் (ATI) கணக்கியலுக்கான உயர் தேசிய டிப்ளோமா, ஆங்கிலத்திற்கான உயர் தேசிய டிப்ளோமா,  சுற்றுலாத்துறைக்கான உயர் தேசிய டிப்ளோமா கற்கைநெறிகளுடன் சேர்த்து தகவல் தொழில்நுட்ப உயர் தேசிய டிப்ளோமா கற்கைநெறியும் கற்பிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் தகவல் தொழில்நுட்ப கற்கைநெறிக்கான விரிவுரையாளர் இல்லாத காரணத்தினால் தகவல் தொழில்நுட்ப கற்கைநெறி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

அத்துடன் இணையத்தளத்திலும் குறித்த கற்கைநெறிக்கான விண்ணப்பம் தடை செய்யப்பட்டுள்ளதுடன் இனிவரும் காலங்களில் தகவல் தொழில்நுட்ப கற்கைநெறியினை திருகோணமலை உயர் தொழில்நுட்ப நிறுவனத்தில் கற்க முடியாத சூழல் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

இணையத்தளம் ஊடாக அடுத்த பிரிவினருக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு எதிர்வரும் 27ஆம் திகதி முடிவுத் திகதியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திருகோணமலையில் உள்ள கல்வி நிறுவனத்தில் தகவல் தொழில்நுட்ப துறைக்கான மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் மாணவர்களினுடைய எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாகவும் மாணவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

திருகோணமலை மாவட்ட மாணவர்கள் மாத்திரமன்றி தம்புள்ளை, ஹொரவப்பொத்தான போன்ற பகுதிகளைச் சேர்ந்த மூவின மாணவர்களும் திருகோணமலை கல்வி நிறுவனத்தின் ஊடாக பயனடைந்து வருகின்றார்கள்.

அந்த வகையில் தகவல் தொழில்நுட்ப துறைக்காக ஒவ்வொரு வருடமும் நூறிற்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்தும் வருகின்றார்கள்.

இது ஒரு பொதுவான துறையாக இருக்கின்ற காரணத்தினால் அதிகமானவர்கள் விருப்பத்துடன் விண்ணப்பித்து கற்று வருவதாகவும் இதன்மூலம் அதிக வேலைவாய்ப்பினை பெற்று வருவதாகவும் கல்வியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான நிலையில் திருகோணமலை உயர் தொழில்நுட்ப நிறுவனத்தில் உயர் தேசிய டிப்ளோமா தகவல் தொழில்நுட்ப பிரிவானது நிறுத்தப்படுமானால் அது எதிர்கால இளைஞர்கள் மத்தியில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே குறித்த கற்கைநெறியை தொடர்ந்தும் நடத்துவதற்கான நடவடிக்கைகளை எதிர்வரும் 27ஆம் திகதிக்கு முன்னர் மேற்கொண்டு மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கு இடமளிக்க வேண்டும் எனவும் பலரும் கோரிக்கை விடுக்கின்றனர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert