Juni 20, 2024

சத்தியப்பிரமாணம் சம்பிரதாயம்! உரிமைக்குரல் பிறப்புச் சுதந்திரம்! பனங்காட்டான்

நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்வதென்பது வெறும் சம்பிரதாயம். மக்கள் வழங்கிய ஆணையின் அடிப்படையில் உரிமைக்குக் குரல் கொடுப்பது மனிதப்பிறப்பின் அடிப்படைச் சுதந்திரம். கூட்டமைப்பின் பேச்சாளர், முதற்கோலாசான் (கொறடா) பதவிகளைக் கேட்கும் பங்காளிக் கட்சிகளான ரெலோவுக்கும் புளொட்டுக்கும் மறுப்புக் கூறும் தமிழரசு தங்களுக்கே பத்தில் ஆறு எம்.பி.கள் இருப்பதை பெரும்பான்மை சிறுபான்மை என்று காரணம் கூறுகிறது. சிங்களப் பெரும்பான்மையினம் தமிழரைச் சிறுபான்மையினர் எனக்கூறி அவர்களின் உரிமைகளை மறுப்பதற்கும், கூட்டமைப்பு உட்கட்சி மோதலில் அதே ஆயுதத்தை பயன்படுத்துவதற்குமிடையில் வித்தியாசம் எதனையும் காணமுடியவில்லை.

இருபத்தியிரண்டிலிருந்து பதினாறாகி, இப்போது பத்தாகிவிட்ட எம்.பி.களுடனுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தமிழர் தாயக உறுப்பினர் எண்ணிக்கையைப் பொறுத்தளவில் இன்னமும் பெரிய கட்சியாக காட்சி கொடுப்பது எண்கணித முறைமையில் உண்மை.

ஆனால், இக்கூட்டமைப்பிலுள்ள மூன்று கட்சிகள் இப்போது இரண்டு ஒன்றாகவும், ஒன்று இரண்டாகவும் பிளவுபட்டிருக்கின்றன.

தேர்தல் காலத்தில் விருப்பு வாக்கு வியாபாரம் தமிழரசுக் கட்சிக்குள் போட்டியிட்டவர்களை இரண்டாக்கியது. உண்மையில் இவர்களை ஒருவருக்கொருவர் பரம எதிரிகளாக்கியது.

ஒரு லட்சம் வாக்குகளுக்குக் கனவு கண்டு அதில் நான்கிலொன்றை மட்டும் பெற்ற சுமந்திரனும், ஐந்தாண்டுகளுக்கு முன்னைய தேர்தலில் பெற்ற விருப்பு வாக்குகளில் இப்போது ஐம்பது வீதத்தை மட்டுமே பெற்ற சிறீதரனும் இணையராகக் களத்தில் நின்றனர்.

தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் யாழ். உதயன் பத்திரிகை உரிமையாளர் சரவணபவன் ஆகியோர் மற்றொரு அணியாக நின்றனர். இவர்கள் இருவரும் தோல்வியைத் தழுவியதற்கு சுமா – சிறீ இணையரின் சூழ்ச்சியே காரணமாயிற்று.

வவுனியாவில் ப.சத்தியலிங்கம் தோல்வி கண்டதற்குக் காரணம் அவர் சுமந்திரன் பக்கம் சென்றது. மட்டக்களப்பில் 2015ம் ஆண்டுத் தேர்தலில் அதிகூடிய பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்ற சிறிநேசன் இம்முறை தேர்தலில் கூட்டமைப்பு இங்கு தோற்றதற்கு சுமந்திரனின் தான்தோன்றித்தனமான செயற்பாடே காரணமென பகிரங்கமாகச் சாடியுள்ளார்.

திருமலை மாவட்டத்தில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஒருவாறு வென்றாராயினும், அதற்குள் ஒரு தோல்வி புதைந்துள்ளது. இங்கு கூட்டமைப்புக்குக் கிடைத்த மொத்த வாக்குகள் 39,570. இதில் சம்பந்தனுக்குக் கிடைத்த விருப்பு வாக்குகள் 21,422 மட்டுமே. கூட்டமைப்புக்கு வாக்களித்தவர்களில் 18,148 பேர் ஏன் சம்பந்தனுக்கு விருப்பு வாக்கைக் கொடுக்கவில்லை. தனிமையிலிருந்து சம்பந்தன் சிந்திக்க வேண்டிய விடயம்.

தேர்தலின் பின்னர் தேசியப் பட்டியல் நியமனத்தில் உருவான உட்கட்சி முரண் நீள்கிறது. திருமலைக்கு ஓடோடிச் சென்ற சுமா – சிறீ இணையர் சம்பந்தனுக்கு மந்திராபோதேசம் செய்து, மட்டக்களப்பிலிருந்த கட்சிச் செயலர் துரைராஜசிங்கத்தை அழைத்து அவசரம் அவசரமாக அம்பாறை கலையரசனை அந்த இடத்துக்கு நியமித்தனர்.

இந்தச் சம்பவங்களின் தொடர் நிகழ்வுகளே இப்போது பகிரங்கமாக மேடையேறி நாற்றமடிக்கிறது. சுமந்திரனின் ஊடகப் பேச்சாளர் பதவியையும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற முதற்கோலாசான் (கொறடா) பதவியையும் தங்களுக்குத் தருமாறு அதன் பங்காளிக் கட்சிகளான ரெலோவும் புளொட்டும் கேட்டுள்ளன.

கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உட்பட பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஆறு பேர் தமிழரசுக் கட்சியினர். மூவர் ரெலோவினர். ஒருவர் புளொட். எண்ணிக்கையில் ரெலோவும் புளொட்டும் தமிழரசிலும் பார்க்க இரண்டு குறைவு. இதனை ஒரு காரணமாக்கி, தமிழரசே பெரும்பான்மை என்பதால் அப்பதவிகளைத் தரமுடியாதென தமிழரசுத் தரப்பினர் கூறி வருகின்றனர்.

இங்கு பெரும்பான்மை சிறுபான்மை என்பவையே அவர்களின் உரிமையைத் தீர்மானிக்கின்றனவென்றால், சிங்களவர் தங்கள் பெரும்பான்மையை முன்னிறுத்தி சிறுபான்மையினரான தமிழருக்குரிய உரிமைகளை வழங்க மறுப்பதற்கு தமிழரசுக் கட்சியினரிடம் என்ன பதிலுண்டு? இதற்குப் பின்னரும் சிறுபான்மையினர் உரிமைகளை பெரும்பான்மையின சிங்களவர் தர மறுக்கின்றனரென கூறுவதற்கு இவர்களுக்குத் தகுதியுண்டா?

ஜனநாயகம் என்பது நாடளாவிய அரசியலுக்கு மட்டுமன்றி உட்கட்சி அரசியலுக்கும் அல்லது கூட்டு அரசியலுக்கும் அவசியமென்பது உணரப்படாதவரை அதற்குள் பிளவு ஏற்படுவது தவிர்க்க முடியாது போய்விடும். ரெலோவும் புளொட்டும் சிலவேளை தாங்கள் நாடாளுமன்றத்தில் தனிக்குழுவாக இயங்க வேண்டி நேரிடலாம் என்று விடுத்திருக்கும் அறிவிப்பு ஒரு முன்னெச்சரிக்கை. (இவர்கள் அவ்வாறு செயற்படுவார்களென்பது சந்தேகம்).

தமிழரசுக் கட்சியின் துரைராஜசிங்கத்தை அப்பதவியிலிருந்து நீக்கவும் ஒரு பிரேரணை வந்துள்ளது. விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்தபோது அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை அப்போதைய ஆளுனரிடம் கையளித்த சி.வி.கே.சிவஞானமே இப்போது இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை விடயத்துக்கும் தலைமை தாங்குகிறார்.

ஆனால், ஒரு வித்தியாசம். கட்சித் தலைவர் மாவைக்குத் தெரியாது மறைத்து தேசியப் பட்டியல் நியமனத்தை மேற்கொண்ட செயலர் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டியவரே.

கூட்டமைப்பின் இந்த விவகாரங்களை விவரமாகக் குறிப்பிடுவதற்கு முக்கிய காரணமுண்டு. தங்களை மக்கள் எதற்காக தெரிவு செய்தார்களென்பதை மறந்து தங்களுக்குள் பதவிப் பித்தலாட்டத்தில் இவர்கள் மோதுவதால் வாக்காளப் பெருமக்கள் ஒரு சில வாரங்களுக்குள்ளேயே ஏமாற்றமடைந்து விட்டனர்.

இம்முறை உண்மையான மாற்றம் வேண்டி மக்களால் நாடாளுமன்றம் அனுப்பப்பட்ட கஜேந்திரகுமார், விக்னேஸ்வரன், கஜேந்திரன் ஆகிய மூவரும் தங்களுக்கு மக்கள் வழங்கிய ஆணையை முதல் நாளிலிருந்தே எதிர்பார்த்தவாறு செயற்பட ஆரம்பித்துள்ளனர். இவர்கள் மூவரதும் நாடாளுமன்ற முதல் உரைகள் அங்கு களேபரத்தையும், கலவரத்தையும் உண்டுபண்ணியுள்ளது. இருப்பினும்; உரைகள் நாடாளுமன்ற அதிகார அறிக்கையில் (ஹான்சார்ட்) இடம்பெற்றுவிட்டன.

‚தமிழினம் உலகின் தொன்மையான குடிகளில் ஒன்று, இவர்கள் இலங்கையின் பூர்வீக குடிகள், இவர்களுக்கு இலங்கைத் தீவில் இறையாண்மையுண்டு“ என்று விக்னேஸ்வரன் தெரிவித்த கூற்று, சிங்களத்தால் ஜீரணிக்க முடியாதது.

கொதிப்படைந்துள்ள சிங்கள் தேசம் செய்வதறியாது தலைவிரித்து சுழன்றாடுகிறது. இந்த உரைக்கு எதிராக முதற்குரல் கொடுத்தவர் சஜித் பிரேமதாச அணியைச் சேர்ந்த மனுச நாணயக்கார. விக்னேஸ்வரனின் உரை ஹான்சார்ட்டிலிருந்து நீக்கப்பட வேண்டுமெனவும் அவர் கூறினார். அமைச்சர்கள் உட்பட அரசாங்கத் தரப்பினரும் இவரது வாலைப்பிடித்தனர். பிரதமர் மகிந்தவும் தன் பங்குக்கு உள்ளும் புறமும் நின்று இதற்கு ஆதரவுக் குரல் கொடுத்தார். மொத்தத்தில் விக்னேஸ்வரனின் உரையை இனவாதமாக்க இவர்கள் முனைந்தனர்.

அதற்கு முன்னரே இநத உரையும் அதன் உள்ளார்ந்த அர்த்தமும் சர்வதேசத்தின் காதுகளுக்குப் போய்விட்டதுடன் ஹன்சார்ட்டிலும் பதிவாகிவிட்டது. இந்த உரையை ஹன்சார்ட்டிலிருந்து நீக்க முடியாதென்று தீர்ப்பளித்த சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன ஒவ்வொரு உறுப்பினருக்கும் தமது கருத்தைக் கூற சுதந்திரம் உண்டென்று தெரிவித்ததை சிங்களத் தரப்பால் மனதார ஒப்புக்கொள்ள முடியவில்லை.

வருங்காலத்தில் சபாநாயகர் எவ்வாறு நடந்து கொள்வாரோ தெரியாது – இப்போது துணிகரமாக முடிவெடுத்தமைக்கு அவரைப் பாராட்டலாம்.

இவ்விடயத்தில் தமிழர் தரப்பின் மற்றைய கட்சிகளின் உறுப்பினர்கள் நடந்துகொண்ட முறை வெட்கக் கேடானது. இதனை காட்டிக் கொடுப்பதற்கு ஒத்ததாகவும் பார்க்கலாம்.

தேர்தல் முடிவுகள் வெளிவந்த மறுநாளே விக்னேஸ்வரன் மற்றும் கஜேநத்திரகுமார் தரப்பினரை தங்களுடன் சேர்ந்து இயங்க வருமாறு அழைப்பு விடுத்தவர் வேறு யாருமல்ல – கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன்தான்.

அதன்பின்னர், எல்லோரும் இணைந்து செயற்படுவோமென்று ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் தங்கள் பெருந்தன்மையைக் காட்டுவதுபோல அறிக்கை மூலம் அழைப்பு விடுத்தனர்.

ஆனால், தமிழரின் பாரம்பரியம், இறையாண்மை பற்றி விக்னேஸ்வரனும், தமிழர்கள் தங்களுக்கு வழங்கிய ஆணை பற்றி கஜேந்திரகுமாரும் ஆற்றிய உரைகளுக்கு எதிர்ப்புக் கிளம்பியபோது ஒற்றுமை பற்றிப் பேசிய கூட்டமைப்பினர் எங்கே போனார்கள்? எதற்காக ஒளித்து விளையாட வேண்டும். ஏன் இந்தக் கள்ள மௌனம்?

ஒற்றையாட்சியில் சத்தியப்பிரமாணம் செய்துவிட்டு நாடாளுமன்றத்தில் இவ்வாறு விக்னேஸ்வரன் உரையாற்றுவதால் எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லையென்று கூறுகிறார் டக்ளஸ் தேவானந்தா. இந்த உரையால் எந்த நன்மையும் கிடையாது என்றால் சும்மா இருப்பதைவிட ஏன் அதனை நையாண்டி செய்ய வேண்டும்?

கிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமை செயலணிக்கு பன்னிரண்டு சிங்களவரை (அநேகமானோர் பிக்குகள்) கோதபாய இரு மாதங்களுக்கு முன்னர் நியமித்தார். கோதபாயவைச் சந்தித்து உரையாடிய டக்ளஸ் தேவானந்தா இந்தச் செயலணியில் தமிழர் ஒருவரையும் இஸ்லாமியர் ஒருவரையும் சேர்த்து நியமிக்க அவர் தமக்கு உறுதியளித்துள்ளதாக ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

இதுவரை அது நடைபெறவில்லை. மாறாக, மேலும் நான்கு பிக்குகளை இக்குழுவுக்கு கோதபாய நியமித்துள்ளார். இதற்குப் பதிலளிக்க வேண்டிய கடப்பாடிலுள்ள டக்ளஸ் தேவானந்தா அதனை மறந்து விக்னேஸ்வரன் உரையைக் கண்டித்து சிங்களத்துக்கு ஆதரவாக செயற்படுவது அவசியம்தானா?

முடிவில் ஒரு விடயத்தை இங்கு சுட்டிக் கூறவேண்டிய தேவையேற்பட்டுள்ளது. நாடாளுமன்ற சத்தியப்பிரமாணம் என்பது வெறும் சம்பிரதாயம். நாடாளுமன்றத்தில் உரிமைக்குக் குரல் கொடுப்பது ஒவ்வொருவரதும் பிறப்புச் சுதந்திரம்.

இந்த ஆணையையே விக்கி – கஜன் தரப்பினருக்கு தாயக மக்கள் கடந்த மாதத் தேர்தலில் வழங்கினர். அது நன்றாகவே நடைபெறுகிறது.