இலங்கை படைகள்: திருட்டு படைகள் – சிவாஜி

விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகளை தேடி திரிவதாக சொல்லும் இலங்கை படைகள் தற்போது திருட்டுப்படைகளாக தொழிலை

மாற்றியிருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் மேலும் தெரிவிக்கையில் வடக்கில் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளை படையினர் தேடி வருகின்றனர்.

தமது குடும்ப வாழ்விற்கு திரும்பியுள்ள அவர்களை எதற்காக தேடுகின்றனரென தெரியவில்லை.

அண்மையில் தொண்டமனாறு பகுதியிலுள்ள முன்னாள் போராளியொருவரது வீட்டிற்கு சிவிலில் சென்ற படையினர் சுமார் ஏழு இலட்சம் பெறுமதியான தங்க நகைகளை திருடி சென்றுள்ளனர்.

இது தொடர்பில் வல்வெட்டித்துறை காவல்நிலையத்தில் முறையிடச்சென்ற போதும் முறைப்பாட்டை ஏற்கமறுத்துள்ளனர்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகளோ இரண்டு வாரங்கடந்து வர சொல்லியிருக்கின்றார்கள்.

முன்னாள் போராகளையோ அவர்களது குடும்பங்களையோ நிம்மதியாக வாழவிடாத அரசும் அதன் படைகளும் இப்போது அவர்களது சொத்துக்களை கொள்ளையிட தொடங்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.