April 26, 2024

சர்ச்சைக்குள்ளான பகுதியில் ராணுவத்தை குவித்த சீனா..!!

சர்ச்சைக்குள்ளான பகுதியில் ராணுவத்தை குவித்த சீனா..!!

உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவை எதிர்கொள்ள தத்தளித்து வரும் நிலையில், சர்ச்சைக்குள்ளான பகுதியில் தமது ராணுவ பலத்தை ரகசியமாக அதிகரித்துள்ளது சீனா.

கொரோனா காலகட்டத்தை சாதகமாக பயன்படுத்தி, சீனா முன்னெடுத்த இந்த நடவடிக்கைக்கு டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் உடனடி பதிலளித்துள்ளது.

சர்ச்சைக்குள்ளான பகுதியில் சீனா திட்டமிட்டு ராணுவத்தை குவித்துள்ள நிலையில், அமெரிக்கா உடனடியாக 3 போர்க் கப்பல்களை அப்பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளது.

சர்வதேச சட்டங்களை புறந்தள்ளிவரும் சீனா சர்ச்சைக்குள்ளான தென் சீன கடற்பகுதியில், தமது ராணுவ பலத்தை அதிகரித்துள்ளதுடன், எண்ணெய் மற்றும் கனிம வயல்களை சுரண்டவும் திட்டமிட்டுள்ளது,

மேலும் இப்பகுதியில் அணு உலைகளை உருவாக்கலாம் எனவும் சீனா நம்பி வருகிறது. கடந்த பத்தாண்டுக்கும் மேலாக தென் சீன கடற்பகுதியை நோட்டமிட்டுள்ள சீனா,

இந்த விவகாரம் தொடர்பில் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுடன் போருக்கும் செல்ல வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் கணிக்கின்றனர்.

இதன்பொருட்டு அமெரிக்காவுடன் போர் நடந்தால் தங்களது நாடு கடைசி மூச்சிருக்கும் மட்டும் போராடும் என்று சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வீ ஃபெங் கூறியுள்ளார்.

சீனாவின் இந்த கடும்போக்கால் அண்டை நாடுகளான மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், தைவான் மற்றும் புருனே ஆகிய நாடுகளும் நெருக்கடியில் சிக்கியுள்ளன.

தென் சீன கடற்பகுதியானது உலகப் பொருளாதாரத்திற்கு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது இப்பகுதி உலகின் மிகவும் இலாபகரமான கப்பல் பாதைகளைக் கொண்டுள்ளது.

இப்பகுதி வழியாக ஆண்டுக்கு 3.4 டிரில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள வர்த்தகம் முன்னெடுக்கப்படுகிறது.

பிரித்தானியாவின் கடல்வழி வர்த்தகத்தில் 12 சதவீதம் – ஆண்டுக்கு 97 பில்லியன் பவுண்டுகள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி – இப்பகுதி வழியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

1947 ஆம் ஆண்டு முதல் தென் சீன கடற்பகுதியில் 90 சதவீதமும் தங்களுக்கு மட்டுமே சொந்தம் என சீனா உரிமை கொண்டாடி வருகிறது.

பசிபிக் பெருங்கடலின் ஒரு பகுதியாக திகழ்கிற தென்சீனக்கடல், 35 லட்சம் ச.கி.மீ. பரப்பளவிலானது.

உலகின் 3-ல் ஒரு பங்கு கப்பல் போக்குவரத்து இந்தக் கடல் வழியே நடைபெறுகிறது. மட்டுமின்றி, இந்தக் கடலின் அடியில் ஏராளமான எண்ணெய், இயற்கை எரிவாயு வளம் உள்ளது.

இதன் காரணமாக இந்த கடல் முக்கியத்துவம் பெற்று உள்ளது. இருப்பினும் இந்த கடலின் சர்ச்சைக்குரிய பகுதிகள் மீது சீனாவுடன் வியட்நாம், பிலிப்பைன்ஸ், தைவான், மலேசியா போன்ற நாடுகள் உரிமை கொண்டாடி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.