Oktober 7, 2024

தேசிய தலைவரை நினைவு கூர்ந்த இந்திய முன்னாள் அதிகாரி?

இலங்கையில் தான் தூதரக அதிகாரியாக இருந்தபோது தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இந்திய மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளான நேற்று முன்தினம் அந்த பதிவை அவர் இட்டுள்ளார்.
1987 ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள இலங்கைக்கான இந்தியத் தூதரகத்தில் நான் இள நிலை அதிகாரியாக இருந்தபோது இலங்கையில் அரச படைகளுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் உள்ளிட்ட அமைப்பினருக்கும் இடையில் உள்நாட்டு போர் உச்ச கட்டத்தில் இருந்தது.
அப்போது தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனைச் சந்தித்தேன். மோதலை முடிவுக்கு கொண்டுவர இந்தியா மேற்கொண்டுவரும் முயற்சிகளை அவருக்கு எடுத்துக்கூறி டெல்லிக்கு வந்து அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு பிரபாகரனிடம் வலியுறுத்தினேன் எனவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
வல்வெட்டித்துறையில் இருந்து இந்திய விமானப்படை விமானத்தில் பிரபாகரனுடன் தான் பயணம் செய்தார் எனத் தெரிவித்துள்ள ஹர்த்திப் சிங் பூரி, அந்த சமயத்தில் தமிழக முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பலரும் அமைதி ஏற்படத் துணையாக இருந்தனர் எனவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அமைதிக்கான முயற்சிகளை இந்திய அரசு மேற்கொண்டு வந்த போதிலும் அது பயனளிக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.