இந்திய வம்சாவளி சிறுமிக்கு விருது வழங்கி கெளரவித்த டிரம்ப்! என்ன தெரியுமா?

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த செவிலியர்கள், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்டோருக்கு, பிஸ்கட் பரிசளித்த, இந்திய வம்சாவளி சிறுமியின் சேவையைப் பாராட்டி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் விருது வழங்கி கெளரவித்தார்.

கொரோனா நோயாளிகளுக்கு சேவையாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் ஆகியோருக்கு, அமெரிக்காவின், வாஷிங்டனில், பாராட்டு விழா நடைபெற்றது.

இந்த பாராட்டு விழாவில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தன் மனைவி மெலனியா உடன் பங்கேற்று, ஸ்ரவ்யா என்ற இந்திய மாணவி உள்ளிட்ட, மூன்று சிறுமியரின் சேவையை பாராட்டி, விருது வழங்கினார்.

ஸ்ரவ்யா போன்ற லட்சக்கணக்கான குழந்தைகள், நம் சமூகத்திற்கும், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கும் அமோக ஆதரவளித்து வருகின்றனர். அவர்களுக்கு விருது வழங்குவது பெருமையாக உள்ளது என்று டிரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்காவில், மேரிலாண்டு நகரில் வசிக்கும், ஆந்திர தம்பதியின் மகள், ஸ்ரவ்யா அன்னப்ப ரெட்டி, நான்காம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர் சாரணர் குழு உறுப்பினராக உள்ளார். இவர், லைலா கான், லாரன் மேட்னி என்ற சக தோழியருடன் இணைந்து, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த செவிலியர்கள், தீயணைப்பு வீரர்கள் ஆகியோருக்கு, 100 பிஸ்கட் பெட்டிகளும், சுகாதார பணியாளர்களுக்கு, 200 வாழ்த்து அட்டைகளும் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.