மே18 நினைவேந்தலை இணையத்தில் விளக்கேற்றி நினைவேந்துவோம்!

தமிழினத்துக்கு எதிராக  சிறீலங்கா ஆட்சிபீடத்தினால் பல தசாப்தங்களாக பல்வேறு வடிவங்களில்  இனஅழிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் உச்சக்கட்டமாக மே 2009 இல் பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டதுடன், அவர்களது வாழ்விடங்களும், உடமைகளும் அழிக்கப்பட்டன.

இந்த நாளையே தமிழின அழிப்பு நினைவு நாளாக மே18 இனை, 2009 ற்குப் பின் தமிழ் மக்கள் உலகளாவிய ரீதியில் நினைவுகூர்ந்து நீதிகேட்டுப் போராடுகின்றனர்.

இத்தகைய பின்னணியிலேயே, கொவிட் 19ஐ கவனத்திற்கொள்ளும் அதேவேளை, முள்ளிவாக்கால் படுகொலையின் பதினோராவது ஆண்டு நினைவுகூரலையும் முன்னனெடுக்க வேண்டியுள்ளது. அதற்கமைவாக, இந் நினைவுகூரலை இணையவழியாக ஒருங்கிணைக்க வேண்டியுள்ளது.

சிறீலங்கா அரசபயங்கரவாதத்தின் இனஅழிப்பில் கொல்லப்பட்ட  எமது உறவுகளை நினைவேந்தி  சுடரேற்றி நினைவுகொள்ளும் அதேவேளை, இனப்படுகொலையாளர்களை நீதியின் முன்னிறுத்தி எம் தேசம் விடுதலை பெறும் வரை தொடர்ந்தும் போராடுவோம் என உறுதியெடுப்போம்.