September 11, 2024

மே18:வீடுகளில் இரவு சுடரேற்றுவோம்!

முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் நினைவேந்தல் சுடரை ஒவ்வொரு மக்களும் தமது வீடுகளில் இரவு 7 மணிக்கு ஏற்றுமாறு யாழ்.பல்கலைக்கழக மாணவ ஒன்றியம் கோரியுள்ளது.
அத்துடன் நினைவுகூரலை இம்முறை இல்லங்களில் இருந்து அனுஸ்டிக்குமாறும் மாணவர் ஒன்றியமும் தமிழ் சிவில் சமூகம் அமையமும் கோரியுள்ளன.
இன்று யாழ்.ஊடக அமையத்தில் நடத்திய ஊடக சந்திப்பில் இந்த கோரிக்கையினை விடுத்த மாணவ ஒன்றிய பிரதிநிதிகள் இன அழிப்பின் இருள் நீங்கி தமிழ் மக்கள் வெளிச்சம் பெறும் நேரமாக அந்நேரம் அமையுமென தெரிவித்தனர்.
இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்
‚முள்ளிவாய்க்கால் அவலத்தின் 11ஆவது ஆண்டு நினைவு தினத்தை தமிழ் தேசம் எதிர்வரும் மே மாதம் 18ம் திகதி அனுட்டிக்கவுள்ளது.
ஆழமாகிவரும் இராணுவமயமாக்கல் மற்றும் அச்சுறுத்தும் கொரோனாவுக்கு மத்தியில் நாம் இம்முறை இந்த நினைவு நாளை அணுக வேண்டியுள்ளது.
பொறுப்புக்கூறல் போராட்டம் இந்தத் தலைமுறையோடு முடிவடையாது என்பதும் தலைமுறை கடந்ததாக அமையும் என்பதும் எமக்கு கடந்த வருடம் உணர்த்திய பாடங்கள். நீண்ட, தலைமுறை கடந்த நீதிக்கான போராட்டத்திற்கான நிறுவனம் சார் ஏற்பாடுகளையும் கட்டமைப்பு சார் செயற்பாடுகளையும் நாம் உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக இந்தப் போராட்டத்திற்குத் தேவையான கூட்டு உள வலிமையையும் ஓர்மத்தையும் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
முள்ளிவாய்க்கால் அவலத்திற்குப் பின்னர் பிறந்த ஓர் தலைமுறை எமது தாயகத்தில் வளர்ந்து வருகின்றது. அந்தத் தலைமுறைக்கு எமது தேசத்தின் வரலாற்றையும் போராட்டத்தின் வரலாற்றையும் நாம் அனுபவித்த, அனுபவிக்கும் ஒடுக்குமுறையையும் பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டும்.
அந்த ஒடுக்குமுறையோடு வாழப் பழகாதிருக்க, ஒடுக்குமுறையிலிருந்து அவர்களைத் தற்காத்துக் கொள்வதற்கான வழிவகைகளை நாம் அவர்களுக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டும். அவ்வாறான தற்காப்பு பொறிமுறைகளில் ஒன்று நினைகூரலை முறையாக ஒழுங்கமைத்துக் கொள்வது.
அந்தவகையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழுவினால் ஏற்கனவே கோரப்பட்டுள்ளவாறு இம்முறை நாம் நினைவுகூரலை எமது இல்லங்களில் இருந்து ஆரம்பிப்போம்.
பின்வரும் மூன்று செயற்பாடுகளில் தாயகத்திலும் புலத்திலும் உள்ள அனைவரும் இணைந்துகொள்ள வேண்டும் என அன்புரிமையுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழுவோடு இணைந்து கேட்டுக் கொள்கின்றோம்.
மே-18,2020 அன்று இரவு 7 மணிக்கு வீடுகளில் தீபங்கள் ஏற்றி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூரல்.
மே-18,2020 அன்று எமது மக்கள் போரின் இறுதி நாட்களில் உட்கொண்ட கஞ்சியை அன்றைய தினம் ஒரு வேளையேனும் உணவாகாராமாக்கிக் கொள்ளல்.
மே-18,2020 அன்று இரவு 7 மணிக்கு அனைத்து வணக்கத்தலங்களிலும் விசேட மணி ஒலி எழுப்பி பேரவலத்தை நினைவுகூருதல்.
இத்தகைய செயற்பாடுகள் நினைகூரலை சமூகமயப்படுத்த உதவும் என நாம் நம்புகிறோம். எமக்குள் என்றும் நீங்கா அந்த நினைவு விளக்கை தூண்டிவிட அனைவரும் கரம் கோர்ப்போம்‘ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.