பிரித்தானியாவில் குடியிருப்பில் வைத்தே 8,000 பேர்கள் பரிதாபமாக பலி,

பிரித்தானியாவில் இந்த பெருந்தொற்று காலத்தில் இதுவரை சுமார் 8,000 பேர்கள் குடியிருப்பில் வைத்தே இறந்ததாக அரசு தரப்பு ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் சுமார் 6,546 பேர் கொரோனா பாதிப்புக்கு இலக்காகாத வேறு நோய்களால் இறந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பயந்து, மக்கள் தங்கள் நோய்களுக்காக மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற மறுத்ததன் காரணமாகவே இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் ஸ்கோட்லாந்தில் சுமார் 8,196 பேர் இறக்க காரணமாக அமைந்துள்ளது என சில நிபுணர்கள் கருதுகின்றனர்.

கொரோனாவில் சிக்கி மருத்துவமனையில் இறப்பதைவிட, சொந்த குடியிருப்பில் சிகிச்சை இன்றி இறக்கலாம் என அவர்கள் எண்ணியிருக்கலாம் எனறும் கூறப்படுகிறது. ஆனால், கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவந்த காலகட்டத்தில், மிகவும் தீவிரமான நிலையில் இருக்கும் பிற நோயாளிகளுக்கே சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், பிற பரிசோதனைகளுக்கு கூட பெரும்பாலான மருத்துவமனைகள் அனுமதி மறுத்ததாக சாந்த் நாக்பால் என்ற மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் மருத்துவ உதவிகள் அவசரமாக தேவைப்பட்ட பல நோயாளிகளும், உரிய சேவை மறுக்கப்பட்ட நிலையில், குடியிருப்பில் முடங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பலர் இதனால் மரணத்தை எதிர்கொண்டிருக்கலாம் என தெரிவித்துள்ளார் மருத்துவர் நாக்பால். இதனிடையே பிரித்தானியாவில் கடந்த 7 வாரங்களில் மட்டும் 23,583 மரணங்கள் குடியிருப்புகளில் நேர்ந்துள்ளதாக ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

இதே காலகட்டத்தில் ஸ்கோட்லாந்தில் 3,453 பேர் குடியிருப்புகளில் இறந்துள்ளனர். ஆனால் 216 பேர் மட்டுமே கொரோனா தொடர்பில் குடியிருப்புகளில் இறந்துள்ளனர். ஸ்கோட்லாந்தில் கடந்த 7 வாரங்களில் மட்டும் முதியோர் இல்லங்களில் 597 பேர் மரணமடைந்துள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் அமைந்துள்ள முதியோர் இல்லங்களில் மட்டும் இந்த ஆண்டு இதுவரை 32,633 பேர் பலியாகியுள்ளனர்.

இது கடந்த ஆண்டைவிட இரு மடங்கு அதிகமாகும், இருப்பினும் கொரோனாவால் 6,815 பேர் மட்டுமே இறந்துள்ளனர். கொரோனா தொடர்பிலான ஒட்டுமொத்த இறப்பு எண்ணிக்கையில் இருந்து சுமார் 10,148 இறப்புகள் சேர்க்கபடவில்லை எனவும் இந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.