விடுதலைப் புலிகளின் செயற்பாட்டில் மனிதாபிமானம் இருந்ததாக புகழாரம் சூட்டிய வாசுதேவ நாணயக்கார!

தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாட்டில் மனிதாபிமானம் இருந்தது என்று தெரிவித்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, எதிர்கட்சிகளிடம் அத்தகைய மனிதாபிமானத்தை காண முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள பொதுஜன பெருமனவின் காரியாலயத்தில் நேற்று(06.05.2020) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே வாசுதேவ நாணயக்கார மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

சுனாமி அனர்த்தம் ஏற்பட்டபேர்து தமிழீழ விடுதலை புலிகளினால் இராணுவத்திற்கு எதிராக எந்தவிதமான தாக்குதல்களும் நடத்தப்படவில்லை. மனிதாபிமான ரீதியில் அவர்கள் மேற்கொண்ட தீர்மானம் காரணமாக சுனாமி பாதிப்புக்களை கையாள்வது அரசாங்கத்திற்கு இலகுவாக இருந்தது.

ஆனால் தற்போது கொறோன அச்சுறுத்தலை நாடு எதிர்கொண்டுள்ள நிலையில், எதிர்க்கட்சியினர் அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து அரசியல் இலாமீட்ட முயற்சிக்கின்றார்கள் என்று குற்றஞ்சாட்டினார்.