September 16, 2024

கொரோனாவில் தலையெடுக்கும் இனப்படுகொலை இராணுவத்தின் உண்மைத் தோல்வி – ஓதுவோன்

கியூபா போன்ற தீவாக உள்ள நாடுகள் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் உலகில் முன் உதாரணமாக விளங்குகின்றன.

ஆனால் அவ்வாறு தனித்தீவாக உள்ள இலங்கை, குறிப்பிட்ட சில அடி தூரத்திற்கு அப்பால் காற்றில் பரவமுடியாத இயல்பைக்கொண்ட ஒரு தொற்று நோயை கட்டுப்படுத்த முடியாமல் திண்டாடுகின்றது.

பிரதான நுழைவாயிலாக செயற்படும் துறைமுகத்தையும் விமான நிலையைத்தையும் கட்டுப்படுத்தியிருந்தால் கொரோனாவை இலங்கைக்குள் நுழையவிடாமல் தடுத்திருக்கமுடியும். அத்தகைய முன் ஆயத்த திட்டமிடல்களிற்கும் செயற்பாடுகளிற்கும் பதிலாக யுத்த வெற்றிவாதம் எனும் பொருத்தமற்ற வீண் கதை பேசி முகம் குப்புற விழுந்திருக்கிறது இலங்கை அரசும் அதன் இராணுவமும்.

கொரோனாத் தொற்று இலங்கையில் பரவரத்தொடங்கியபோது அதனை எதிர்கொள்வதற்கான முழுப்பொறுப்பும் இராணுவத்திடமே ஒப்படைக்கப்பட்டது.

சமகாலத்தில் இராணுவத்தரப்பில் இருந்தும் அரசியல் தரப்பில் இருந்தும் விடுதலைப்புலிகளை போரில் தோற்கடித்ததுபோல் கொரோனாவையும் தோற்கடிக்க வேண்டும் என்ற ஒப்பீட்டு அடிப்படையிலான கருத்துக்கள் வெளிவர ஆரம்பித்தது.

இந்த ஒப்பீட்டுக் கருத்துக்கள் பல்வேறு வாதப் பிரதிவாதங்களை உருவாக்கியிருந்தாலும் அரசியல்வாதிகளையும் இராணுவத்தையும் பொறுத்தவரை அவர்களின் ஒப்பீட்டுக்குப் பின்னால் வலுவான காரணங்கள் பல உண்டு.

அதில் விடுதலைப் புலிகளை தோற்கடித்தமையை சிங்கள இராணுவத்தின் மிகப்பெரிய சாதனையாக ஏற்றுக்கொண்டு கொண்டாடுவது ஒருகாரணம்.

அவர்கள் கூறும் “ பயங்கரவாத அச்சுறுத்தலை தோற்கடித்ததுபோல்” கொரோனா அச்சுறுத்தலையும் தோற்கடித்து, இராணுவத்திற்கு மேலும் புகழ் ஏற்றி கொண்டாட வேண்டும் என்பது இன்னொரு காரணம்.

ஆனால் நடைமுறையில் கொரோனாவை எதிர்கொள்வதில் இராணுவம் திண்டாடுகின்றது. கோரோனாவை எதிர்கொள்வதன் மூலம் புகழ் சம்பாதிக்கப் புறப்பட்ட இராணுவத்தின் நிலைமை தலைகீழாக மாறத் தொடங்கியிருக்கிறது.

“சொந்த இடங்களிற்குச் சென்ற கடற்படையினரும் அவர்களின் குடும்பத்தினரும் இழிவு படுத்தப்படுகின்றனர். தயவு செய்து அவ்வாறு யாரும் நடந்து கொள்ளவேண்டாம்.” என்று பாதுகாப்புச் செலலாளர் கமால் குணரட்ன இரந்து கேட்கும் அளவிற்கு சிங்கள மக்கள் தங்களது சொந்த இராணுவத்தையே வெறுக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

போரின் வெற்றி நாயகர்கள் என கொண்டாடப்பட்ட கோத்தபாய, கமால் குணரட்ன, சவேந்திர சில்வா என அதி உச்ச பதவிகளில் இருக்கும் இவர்களுக்கு இதனால் சங்கடமான நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில் இவர்கள் போரையே உண்மையில் வெல்லவில்லை அப்படியாயின் போரை வென்றதுபோல் எப்படி கொரோனாவை வெல்லமுடியும்? என்ற கேள்வி இன்னொரு பக்கத்தில் எழுவது தவிர்க்கமுடியாதது.

அதனை தர்க்க ரீதியாகவும் தரவுகள் ரீதியாகவும் நிறுவவும் முடியும்.

1990 முதல் 2000 ஆண்டு வரை விடுதலைப்புலிகள் மரபுவழிச்சமர் புரிந்த சுமார் ஒரு தசாப்த காலத்தில் சிங்கள இராணுவமும் விடுதலைப்புலிகளும் மோதிக்கொண்ட களங்களை எல்லாம் ஆய்வு செய்தால் சிங்கள இராணுவம் விடுதலைப்புலிகளால் தோற்கடிக்கப்பட்ட இராணுவம் என்பது தெளிவாக புலனாகும்.

சர்வதேச இராணுவ தரத்தின்படி 400 தொடக்கம் 1200 துருப்புக்களைக் கொண்டது ஒரு பற்றாலியன். இதனை ஒரு லெப்ரினன்ட் கேணல் வழிநடத்துவார். விடுதலைப்புலிகள் ஒரு பற்றாலியனில் அண்ணளவாக 400 வீரர்களைக் கொண்டிருந்தனர்.

குடாரப்பு தரையிரக்கச் சமரில் மூன்று பற்றாலியனைக் கொண்ட 1200 புலிகள் களமிறங்கினர். ஒவ்வொரு பற்றாலியனிற்கும்  மாலதி படையணித் தளபதி விதுசா, சோதியா படையணித் தளபதி துர்க்கா, சாள்ஸ் அன்ரனி படையணித் தளபதி ராஜசிங்கன் உட்பட்ட மூன்று லெப்ரினன்ட் கேணல்கள் தலைமை தாங்கினர்.

மூன்று பற்றாலியன்கள் கொண்டது ஒரு பிரிகேட் அல்லது றெஜிமென்ட் என அழைக்கப்படும். இதனை வழிநடத்துபவர் கேணல் அல்லது பிரிகேடியர் என்பதுதான் சர்வதேச தரம்.

அதன்படி குடாரப்பில் 1200 பேர் கொண்ட ஒரு றெஜிமென்டிற்கு தலைமை தாங்கிய, மூன்று லெப்டினன்ட் கேணல்களை வழிநடத்திய தளபதி பால்ராஜ் சர்வதேச இராணுவ தரத்தில் பிரிகேடியர் பதவிக்கு தகுதியானவரானார்.

மறுபுறத்தில் மூன்று டிவிசன்களைக் கொண்ட சுமார் 36000 இராணுவத்தினரும் அவர்களின் படைக்கல பலமும் குடாரப்பு தரையிறக்கச் சமரில் பிரிகேடியர் பால்ராஜ் இடம் தோல்விகண்டது.

சர்வதேச தரத்தில் ஒரு டிவிசன் அண்ணளவாக 7000 தொடக்கம் 22000 ஆயிரம் துருப்புக்களைக் கொண்டது. இதனை வழிநடத்துபவர் மேஜர் ஜெனரலாவார். இலங்கை இராணுவத்தில் ஒரு டிவிசன் என்பது அண்ணளவாக 12000 இராணுவத்தினரைக் கொண்டது.

2 தொடக்கம் 7 டிவிசன்களைக் கொண்டது ஒரு கோர்ப்ஸ் என அழைக்கப்படும். இதில் அண்ணளவாக 30000 தொடக்கம் 50000 துருப்புக்கள் இருக்கும். இதனை வழிநடத்துபவர் லெப்ரினன்ட் ஜெனரலாவார்.

அன்றைய நிலையில் விடுதலைப் புலிகளினதும் இலங்கை இராணுவத்தினதும் இராணுவ தரத்தை மேற்படி தரவுகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்தால் இருபகுதியிலும் வழங்கப்பட்டிருந்த இராணுவப் பதவிகள் சர்வதேச தரத்தில் இருந்ததைக் கவனிக்கலாம்.

ஆனால் 1200 வீரர்களைக்கொண்ட ஒரு றெஜிமென்ட் புலிகளிடமும் அதன் தளபதியான பிரிகேடியர் பால்ராஜ்ஜிடமும் சுமார் 36000 படையினைரைக் கொண்ட மூன்று டிவிசன் இராணுவமும் அதன் மேஜர் ஜெனரல்களும் கூடவே அப்போது இராணுவத் தளபதியாகவிருந்த லெப் ஜெனரல் சிறீலால் வீரசூரிய, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிசில் திசேரா, விமானப்படைத் தளபதி ஏயார் மார்சல் ஜெயலத் வீரக்கொடி ஆகியோர் தோற்றது புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடிக்க முடியாது என்ற உண்மையை இராணுவ அர்த்தத்தில் நன்கு வெளிக்காட்டியது. இதன் பின்னர் நடந்த தீச்சுவாலைச் சமர் மேலும் அதனை உறுதிப்படுத்தியது.

இவ்வாறு களத்தில் நேரடியாக வெல்ல முடியாத புலிகளை வெல்வதற்கு பல்வேறு உத்திகள் ஆராயப்பட்டன. அதில் வேற்று நாட்டு இராணுவத்தை பயன்படுத்துவதும் இனப்படுகொலையை மேற்கொள்வதும் முக்கியமானவை என முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி 2006 இல் மீண்டும் வெடித்த யுத்தத்தில் 20 இற்கும் மேற்பட்ட நாடுகள் வெவ்வேறு காரணங்களின் அடிப்படையில் யுத்தத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபடுத்தப்பட்டன. பல்வேறு சந்தர்ப்பங்களில் பங்குபற்றிய வெளிநாட்டு இராணுவத்தினர் பற்றிய விபரங்கள் மறைக்கவும் மறுக்கவும் முடியாதவகையில் அம்பலமாகியிருந்தன.

இவை தொடர்பான பூரண விபரங்கள் விடுதலைப் புலிகளின் சமர் ஆய்வு மையத்திடம் இருந்தது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக விடுதலைப்புலிகளின் சமர் ஆய்வு மையப் பொறுப்பாளர் திரு.யோகரத்தினம் யோகி அவர்கள் போரின் இறுதிநாட்களில் வழங்கிய ஒலிப்பதிவில் பங்குபற்றிய நாடுகள் சிலவற்றின் பெயர்களை வெளிப்படையாக கூறியிருந்தார்.

பாரிய அளவில் பொதுமக்களைப் படுகொலை செய்வதன் ஊடாக விடுதலைப்புலிகளை நிலைகுலையச் செய்யமுடியும் என சிங்கள இராணுவத் தரப்பு கணித்திருந்தது. அதன்படி போரில் வெல்லும் இன்னொரு உத்தியாக இனப்படுகொலையை அரங்கேற்றியது.

அதன்படி 2006 முதல் 2009 வரை நடந்த யுத்தத்தின் இலக்காக பொதுமக்களைக் கொலைசெய்வதை முன்னிறுத்தியிருந்தார்கள்.

பாதுகாப்பு வலயம் என அறிவித்து அங்கு மக்கள் திரண்ட பின்னர் இலகுவாக கொத்தாக கொன்றதை தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள். இவ்வாறு சுமார் மூன்று வருடத்தில் வன்னியில் வாழ்ந்த மக்களில் அரைவாசிக்கும் அதிகமானவர்களை கொன்றொழித்தார்கள். இறுதியில் படுகொலைசெய்யப்பட்ட 150000 மக்களோடு புலிகளும் செயலிழந்துபோகச் செய்யப்பட்டார்கள்.

“நிலங்களைப் பிடிப்பதற்குப் பதிலாக ஆட்களை கொல்வதையே இந்த யுத்தத்தின் மூலோபாயமாக கொண்டிருந்தோம் „“ என அப்போதைய இராணுவத்தளபதி சரத்பொன்சேகா வாக்குமூலம் வழங்கியிருப்பது என்பது இலங்கை இராணுவம் அடைந்தது இராணுவ வெற்றி அல்ல இனப்படுகொலை வெற்றி என்பதை நூறுசதவீதம் உறுதிப்படுத்துகிறது.

இவ்வாறு இலங்கை இராணுவத்தினதும் விடுதலைப் புலிகளினதும் பலத்தையும் பலவீனத்தையும் வெற்றிகளையும் தோல்விகளையும் இராணுவ அர்த்தத்தில் பகுப்பாய்வு செய்து பார்த்தால் 2006 இற்குப் பின்னர் வெடித்த யுத்தத்தில் விடுதலைப்புலிகளின் வீழ்ச்சியை புலிகளின் இராணுவத் தோல்வியாக வரையறுக்க முடியாது. அதேநேரம் இலங்கை இராணுவத்தின் வெற்றியை சிங்களத்தின் இராணுவ வெற்றியாகவும் நிறுவமுடியாது.

இதனை இன்னொரு அர்த்தத்தில் சொன்னால் விடுதலைப்புலிகளிற்கும் இலங்கை இராணுவத்திற்கும் இடையிலான உண்மையான நேரடியான போர் 2000 ஆண்டிற்குப் பின்னர் நடைபெறவில்லை என்றே சொல்லலாம்.

இந்நிலையில் இனப்படுகொலை மூலம் புலிகளை முடமாக்கி இருபதிற்கும் மேற்பட்ட நாடுகளின் ஆதரவுடன் விடுதலைப்புலிகளை தோற்கடித்ததை ஒரு மாபெரும் இராணுவ வெற்றியாக கொண்டாடுவது நகைப்பிற்கிடமானது.

அதுவும் இனப்படுகொலைக்கு தலைமை தாங்கிய இராணுவத்தளபதி சரத்பொன்சேகாவிற்கு பீல்ட் மார்சல் பட்டம் வழங்கியது உலக இராணுவ வரலாற்றிற்கே அவமானம்.

2 தொடக்கம் 5 கோர்ப்ஸ் இனை கொண்டது ஒரு பீல்ட் ஆர்மி என அழைக்கப்படும். இது அண்ணளவாக 100000 தொடக்கம் 300000 வீரர்களைக் கொண்டது. இதனை வழிநடத்துபவர் லெப்ரினன்ட் ஜெனரல் அல்லது ஜெனரல் ஆவார்.

இரண்டிற்கும் மேற்பட்ட பீல்ட் ஆர்மியைக் கொண்டது ஆர்மி குறூப் அல்லது புரொன்ட என அழைக்கப்படுகிறது. இதனை ஜெனரல் அல்லது பீல்ட் மார்சல் வழிநடத்துவார்.

சர்வதேச தரத்தின்படி மேற்படி குறிப்பிடப்பட்ட படைபலத்துடன் இன்னொரு நாட்டுடன் சண்டையிட்டாலே ஒரு பீல்ட் மார்சல் பட்டம் வழங்கப்படுவது வழமை. இலங்கை இராணுவத்தினைப் பொறுத்தவரை அவர்கள்  லெப்ரினன்ட் ஜெனரல் அல்லது ஜெனரல் தரங்களிற்கு மேல் செல்ல தகுதி அற்றவர்கள்.

ஆனால் விசித்திரமாக குடாரப்பில் ஒரு றெஜிமென்ட் புலிகளிடமும் அதன் தளபதியான பிரிகேடியர் பால்ராஜ்ஜிடமும் புறமுதுகிட்டு ஓடிய சரத்பொன்சேகா அதன் பின்னர் உண்மையான இராணுவ ரீதியிலான யுத்தம் எதையுமே எதிர்கொள்ளாமல் பீல்ட்மார்சல் ஆகியிருக்கிறார்.

இவ்வாறுதான் இலங்கை இராணுவம் பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறது. உண்மையான சண்டையைச் செய்யாதவர்கள் உண்மையான வெற்றியை அடையாதவர்கள் எவ்வாறு அதற்குரிய தரத்துடன் இருக்கமுடியும்?

இனப்படுகொலை வெற்றியை இராணுவ வெற்றியாக கொண்டாடுபவர்களிடம் உண்மையான இராணுவ வெற்றியும் இருக்காது அதற்கான தரமும் இருக்காது நேர்த்தியான இராணுவப் பண்புகளும் இருக்காது.

அதே நேரம் கொரோனா போன்றதொரு சர்வதேச சுகாதார நெருக்கடியை இராணுவத்தின் தலைமையில் எதிர்கொள்ளல் என்பதும் ஒரு சரியான வழிமுறையும் கிடையாது.

என்பதை கொரோனா வெளிக்காட்டியிருக்கிறது.
அதேசமயம்; யுத்த வெற்றியை அடைய சிங்கள இராணுவம் நேரடி தமிழ் இனப்படுகொலையை ஒரு உத்தியாக கையாண்டதுபோல் கொரோனாவை வெல்ல இராணுவத்தை பயன்படுத்தும் உத்தியைப் பயன்படுத்தி தமிழ் மக்களை திட்டமிட்ட இன அழிப்பிற்கு உள்ளாக்கலாம் என்பதை கவனத்தில் கொள்ளத் தவறக்கூடாது.