கொரோனா தொற்றில் சென்னை முதலிடம்! தமிழக நிலவரம்;

தமிழகத்தில் இன்று 508 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 279 தொற்றுகள் பதிவாகியுள்ளது!
புதிய வழக்குகளின் வளர்ச்சியில் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4058-ஆக அதிகரித்துள்ளது. பெருவாரியான வழக்குகள் கோயம்பேடு சந்தையுடன் தொடர்பு கொண்டுள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை வெளியீடு தெரிவிக்கின்றது. மற்றும் கொரோனாவிற்கு இரண்டு இறப்புகள் இன்று தமிழகத்தில் பதிவாகியுள்ள நிலையில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 33-ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளையில் இன்று தமிழகத்தில் 76 கொரோனா நோயாளிகள் நலன் பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆக இதுவரை தமிழகத்தில் 1485 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். 2,537 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே அறிகுறி இல்லாமல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்து, வீட்டு காவலில் சிகிச்சை அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த அறிவிப்பினை தொடர்ந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருந்து பலர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர், மற்றும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா வழக்குகளுக்கு மத்தியில், மருத்துவமனை படுக்கைகளை மிகவும் மோசமான நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு பயன்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் அதிக வழக்குகளை பதிவு செய்துள்ள சென்னை இன்று மட்டும் 279 வழக்குகளை பதிவு செய்தது. இதன் மூலம், சென்னையில் தற்போது  1668 செயல்பாட்டில் உள்ள வழக்குகள் உள்பட 2008 கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. சென்னையை அடுத்து கடலூரில் 229 தொற்றுகள் பதிவாகியுள்ளது, இன்று மட்டும் 68 வழக்குகள் மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. செங்கல்பட்டு மற்றும் கள்ளகுறிச்சி பகுதியில் தலா 38 வழக்குகள் பதிவாகியுள்ளது.