Oktober 7, 2024

திறந்தவெளி திரையரங்கமாகியது விமானநிலையம்

திறந்தவெளி திரையரங்கமாகியது விமானநிலையம்

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான லித்துவேனியா நாட்டில் உள்ள விமான நிலையத்தை திறந்தவெளி திரையரங்கமாக மாற்றியுள்ளது அரசு.

உலகம் முழுவதிலும் பல நாடுகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமுலில் உள்ளது. இந்நிலையில் பயன் இல்லாமல் காலியாக இருக்கும் விமான நிலையத்தை லித்துவேனியாவில் திறந்தவெளி திரையரங்கமாக மாற்றியுள்ளனர்.

இதற்காக ரசிகர்கள் கார்களில் மட்டுமே வர வேண்டும். எவ்வித காரணத்துக்காகவும் கதவு, ஜன்னல்களைத் திறக்கக் கூடாது என சமூக இடைவெளிக்கான உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.

இதை ஏற்று சுமார் 160 கார்கள் திரைப்படத்தைக் காண லித்துவேனியா விமான நிலையத்துக்கு வந்துள்ளன. முதல் படமாக சிறந்த திரைப்படத்துக்கான ஒஸ்கார் விருதை வென்ற தென் கொரிய திரைப்படமான ‘பாரசைட்’ திரையிடப்பட்டுள்ளது. மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடந்து தொய்வடையக் கூடாது என்பதற்காக இதனை ஏற்பாடு செய்ததாக ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகின்றனர்.

இதற்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீருகிறதாம். அடுத்த நான்கு வாரங்களுக்கு திரைப்படங்களைத் திரையிட நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.