ஊடகப்படுகொலைகளிற்கு நீதி இப்போதும் வேண்டும்!

சர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
அதன் போது பிரதான ஈகை சுடரினை மூத்த ஊடகவியலாளரும் அமையத்தின் தலைவருமான ஆ.சபேஸ்வரன் ஏற்றினார்.
அதனைத்தொடர்ந்து ஊடக அமையத்தின் பிரகடனம் ஊடக அமையத்தின் பொருளாளர் சிரேஷ்ட ஊடகவியலாளர் செல்வகுமார் வெளியிடப்பட்டது.
அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :-
2020 மே மாதம் 03: சர்வதேச ஊடக சுதந்திர தினம்
உலகளாவிய ரீதியில் கொவிட் -19 நோய்ப்பரவல் உச்சமடைந்திருக்கின்ற சூழலில்  ஊடகங்கள் மீதுள்ள சமூகப் பொறுப்பு குறித்து ஊடகவியலாளர்களான நாம் கூடிய அக்கறை கொண்டவர்களாக இவ்வாண்டிற்கான சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னெடுப்பதில் பெருமை கொள்கின்றோம்.
மூன்று தசாப்த கால போராட்ட சூழலில் எமது சகபாடிகளான பல ஊடகவியலாளர்களை பறிகொடுத்தும்,கொலை அச்சுறுத்தல்களையும் மிரட்டல்களையும் எதிர்கொண்டும் பணியாற்றிய தமிழ் ஊடகவியலாளர்களிற்கு கொவிட் -19 நோய் பரம்பல் மத்தியில் பணியாற்றுவது புதிதாக இருக்கவில்லை.
ஆனாலும் தாம் சார்ந்த மக்களிற்காக கொவிட் 19 தொற்று நோய் தீவிரமடையும் நிலையில் சமூக மட்ட விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய தார்மீக பொறுப்பை உணர்ந்தே ஊடகவியலாளர்கள் செயற்படுகின்றார்கள் என்பதை யாழ்.ஊடக அமையம் பெருமையுடன் பதிவு செய்ய விரும்புகின்றது.
கொவிட் 19 வைரஸ் தொற்று சூழலை முன்னிறுத்தி ஜனநாயக கட்டமைப்புகள் மற்றும் மக்களின் ஜனநாயக உரிமைகளை மதிக்காத சர்வாதிகார நடவடிக்கைகள் மூலம் வாய் மூடியிருக்க மக்களையும் ஊடகங்களையும் அச்சுறுத்தும் போக்கொன்றின் மத்தியில் சர்வதேச ஊடக சுதந்திர தினம் உலகளாவிய ரீதியில் இன்று முன்னெடுக்கப்படுவதையும் சுட்டிக்காட்ட வேண்டியதாகவுள்ளது.
உலகின் ஏனைய நாடுகளில் காணக்கூடியதைப் போன்றே இலங்கையிலும் தீவிர நோய்த் தொற்று நிலைமையைக் கட்டுப்படுத்துவதில் ஒருங்கிணைக்கப்பட்ட பொறிமுறை இல்லாதேயுள்ளது. இதனால் அரசாங்கம் உட்பட அனைத்து பொறுப்பு வாய்ந்த அரச துறையினரையும் விமர்சிப்பதற்கும் கேள்வி கேட்பதற்கும் ஊடகங்களுக்கு உரிமையுண்டு என்பது சொல்லி தெரியவேண்டியதொன்றல்ல.
நாட்டில் நிலவுகின்ற அசாதாரண சூழ்நிலையில் அவ்வாறானதொரு ஊடகச்செயற்பாட்டிற்கான மிகப் பொருத்தமான அரச கொள்கையொன்றை உருவாக்கிக் கொள்ள வேண்டியுள்ளது.
அதே போன்றே தற்போதைய சூழலில் பொது மக்களுக்குச் சார்பாக செயற்படும் சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் மற்றும் பயனாளிகளின் பங்களிப்பும் மிக முக்கியமானதாகும்.
எமது நிலைப்பாட்டினை ஏற்று செயற்படும் சகோதர ஊடக அமைப்புக்கள் மற்றும் சர்வதேச ஊடக அமைப்புக்களும் இத்தகைய நெருக்கடியான சூழலில் மீண்டும் நட்புறவுடன் கைகளை பற்றிக்கொள்கின்றோம்.
இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளாக கொல்லப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட எமது சக ஊடக நண்பர்களிற்கு நீதி கோரி போராடிவரும் நாம் இவ்வாண்டிலும் அதே கோரிக்கையினை மீண்டும் முதன்மைப்படுத்தி வலியுறுத்த தவறப்போவதில்லை.
இதேவேளையில் பின்வரும் கோரிக்கைகளை ஆட்சியாளர்களிடமும் சர்வதேச ஊடக அமைப்புக்களிடமும் ,ஊடக நிறுவன உரிமையாளர்களிடமும் நெருக்கடி மிகுந்த இந்த சூழலில் விநயத்துடன் கோரி நிற்கிறோம்.
01.கொவிட் -19 தொற்றின் பின்னரான சூழலில் ஆட்குறைப்பென்ற பேரில் முன்னெடுக்கப்படும் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்களது வேலை இழப்பினை தவிர்த்தல்
02.பிரதேசச ஊடகவியலாளர்கள் தமது தொழில் பாதுகாப்புடன் ஈடுபடக்கூடியதான பாதுகாப்பு உடைகள்,கவசங்கள் மற்றும் வசதிகள் உருவாக்கி வழங்கப்படவேண்டும்.
03.நெருக்கடிகள் மத்தியிலும் பாதுகாப்பற்ற சூழலில் பணியாற்றும் ஊடகவியலாளர்களிற்கான நிவாரணங்கள் வழங்கப்படுதல் மற்றும் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் குடும்பங்களிற்கான நிவாரணம்
04.கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் விடுதலை மற்றும் சமூக ஊடகங்கள் மீதான அச்சுறுத்தலை தடுத்தல்
05. கொவிட் -19 தொற்றின் பின்னரான சூழலில் பணியாற்றும் ஊடகவியலாளர்களை பாகுபாடின்றி இணைத்து செயற்பட அரச நிர்வாக மையங்கள் முன்வருதல்