தேர்தல் வேண்டாம்:சங்கரி?

நாட்டில் உள்ள அச்சுறுத்தலான நிலையில் தேர்தலை காலவரையறையின்றி பிற்போடுமாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரி கேட்டுக்கொண்டுள்ளார்.
தேர்தல் ஆணைக்குழுவால் கலந்துரையாடலுக்காக கட்சிகளின் செயலாளர்களால் விடுக்கப்பட்ட அழைப்புக்கு பதிலளித்து தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் இதனை கூறியுள்ளார்.
கடித்தில் மேலும் தெரிவித்துள்ளாதாவது
“மேற்படி சந்திப்பிற்கு எனக்கு அழைப்பு விடுத்தமைக்கு நன்றி கூறுகின்றேன். ஆனால் நாட்டில் ஏற்பட்டுள்ள பயங்கர சூழ்நிலை காரணமாக குறித்த கூட்டத்தில் கலந்து கொள்ளாமைக்கு வருந்துகின்றேன்.
வயதால் எண்பத்தாறையும் பூர்த்தி செய்துள்ள நான் நலத்துடனும் சுய சிந்தனை, ஞாபக சக்தி போன்றவை குறையாமலும் செயற்படுகின்றேன் என்பதால் என்னுடைய வேண்டுகோளை ஆணையாளர் குழு சாதகமாக பரிசீலிக்கும் என நம்புகிறேன்.
பல ஆண்டுகளுக்கு முன்பு எனது வாழ்வில் நான் கண்டுகொண்ட சம்பவங்கள் சிலவற்றை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும் என நம்புகின்றேன.
1945ம் ஆண்டு முடிவடைந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற உலக யுத்த காலத்தில் சிறு பிள்ளைகளாக நாம் பல துன்பங்களை அனுபவித்ததுடன், பயத்துடனும் பீதியுடனும் வாழ்ந்தோம். நாம் எதிர்பார்த்திருந்தும் அதிஸ்டவசமாக அந்த நாட்களில் எதுவித குண்டுவீச்சும் நடைபெறவில்லை.
அக்காலத்தில் இரு தடவை சொற்ப நாட்கள் உள்ளுர் புரட்சியில் சிலர் ஈடுபட்டனர். அத்தோடு 30 ஆண்டு காலமாக உள்நாட்டு யுத்தம் நடைபெற்றது.
வேலை முடிந்து எதுவித பாதிப்புமின்றி வீடு திரும்புவோம் என்ற நம்பிக்கையை இழந்திருந்த காலம் அதுவாகும். அத்துடன் சில தடவைகள் பெரிய அளவிலும் சிறிய அளவிலும் இனக்கலவரங்கள் நடைபெற்றது.
இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து பார்ப்பின் என் வயதை ஒத்தவர்களிற்கு பாரிய கஸ்டமாக அமைந்தது. இதில் வேடிக்கை யாதெனில் இத்தனை அனர்த்தங்களும் மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டன.
அவை தவிர்த்திருக்க கூடியவையுமாகும். அத்துடன் நாம் பட்ட துன்பங்கள், கஸ்டங்கள் எத்தகையது என்பதை இதைப் படிக்கின்றவர்கள், அடிக்கடி ஏற்பட்ட பெரும் வெள்ளம், புயல் மட்டுமன்றி 2004ம் ஆண்டு இலங்கையில் முதல் தடவையாக சுனாமியால் ஏற்பட்ட கஸ்ட துன்பங்களையும் நினைத்து பார்க்க வேண்டும்.
இலங்கையில் முதல் தடவையாக ஏற்பட்ட சுனாமி பலரது உயிரை காவுகொண்டதுடன், பல கோடி பெறுமதியான சொத்துக்களையும் அழித்தது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள துன்பங்கள், அனர்த்தங்கள் அத்தனையையும் ஒன்று சேர்த்து பார்த்தாலும் எம்மை தற்போது அச்சுறுத்தி நிற்கும் கொரோனா வைரசின் அச்சுறுத்தலை சமப்படுத்த முடியாத அளவில் உள்ளமையையே நான் உணர்கின்றேன்.
அபிவிருத்தி அடைந்த நாடுகளே கொரோனா அசசுறுத்தலிற்கு அஞ்சி நிலை தடுமாறி நிற்கின்ற நிலையில் சிறிய நாட்டில் உள்ள நாம் இதை சாதாரண விடயமாக தட்டிக்கழிக்க நினைக்கவும் முடியாது. எதிர்காலம் எப்படி அமையுமோ என்ற பீதிக்குள் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த நாட்டின் மூத்த பிரஜைகளில் ஒருவராகிய என்னுடைய கோரிக்கைக்கமைய நிலைமை சீரடையும் வரை நடைபெறவிருக்கின்ற தேர்தலை கால வரையின்றி ஒத்திவைக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.
குறித்த கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டியதாகும். எமக்கு இது புதிய விடயமல்ல. இந்த நாட்டில் ஜனநாயகம் என்றோ புதைக்கப்பட்டுவிட்டது. 6 ஆண்டு கால ஆட்சிக்கு உரிமை பெற்றவர்கள் நீண்ட காலம் ஆட்சியமைத்ததும்.
பலாத்காரம் மூலம் பதவிக்கு வந்தவர்கள் ஆட்சி நடத்தியதும் உலகறிந்ததே. அத்துடன் அரசால் தடைசெய்யப்பட்ட கட்சியினர் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிப்பதும் உலகறிந்த உண்மை.
இந்த நிலையில் தேர்தலை பிற்போடுவது பாரதூரமான குற்றமல்ல. நாம் கடந்த காலத்தை மீட்டுப்பார்க்க விரும்பவில்லை. இப்பிரச்சினையில் அக்கறை கொண்ட அனைவரும் சுயநல நோக்குடன் நோக்காது நாட்டின் நன்மை கருதி நிலமை சீரடையும்வரை தேர்தலை பிற்போட்டு உதவுமாறு கேட்டுக்கொள்கின்றேன்” என, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.