April 27, 2024

தெய்வத்திற்கே இந்த நிலை என்றால் மக்களின் நிலை என்ன?

தெய்வத்திற்கே இந்த நிலை என்றால் மக்களின் நிலை என்ன? – வலி. மேற்கு பிரதேச சபையில் கோணேச்சர ஆக்கிரமிப்பிற்கு எதிரான கண்டனத் தீர்மானம் நிறைவேற்றம்

வலி. மேற்கு பிரதேச சபையின் 56வது அமர்விலே, திருக்கோணேச்சரத்தின் மீதான ஆக்கிரமிப்பு தொடர்பான கண்டன தீர்மானம் ஒன்று இன்றையதினம் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வலி. மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன் அவர்களால் கொண்டுவரப்பட்ட குறித்த பிரேரணையை தவிசாளர் முன்வைக்கையில்,

யுத்தகாலத்தில் இருந்து, பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான திருக்கோணேச்சரத்தில் உள்ள வளங்கள் மிக மோசமாக கபளீகரம் செய்யயப்பட்டுக்கொண்டு இருக்கின்றது.

இன்றைக்கு திருக்கோணேச்சரத்தை எடுத்து நோக்குவோமேயானல் அதைச் சுற்றியுள்ள சூழல் மிக மோசமான இராணுவ ஆக்கிரமிப்புக்குள் உள்வாங்கப்பட்டுள்ளது. அங்கே சிவ வழிபாடானது பய பீதியிலேயே மக்களுக்கு உள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்க ஒரு விடயம்.

தமிழர்களுடைய தாயகத்தில் உள்ள பாரம்பரியங்களை கபளீகரம் செய்வது தங்களுடைய ஏதோ ஒரு தேவைகளுக்கா தொல்பொருள் திணைக்களம் தீவிரமாக செயற்பட்டு வருகின்றது. இது நிறுத்தப்பட வேண்டிய ஒரு விடயம்.

எல்லோரும், இது ஒரு நீண்டகால பிரச்சினை, இதுக்கு ஒரு தீர்வுகள் கிடைப்பதா கூறுகிறார்கள். ஆனால் இது தீர்க்கப்படாமல் மூக்கு உள்ளவரை சளி என்ற ரீதியில் தான் இந்த ஈச்சரங்களினுடைய கபளீகரம் மிக மோசமாக இருக்கின்றது

உண்மையிலேயே அது சுற்றுலாவிற்கு ஒரு பொருத்தமான இடமுமில்லை, அங்கு இந்துக்கள் பூஜை வழிபாடுகள் மேற்கொள்ளவேண்டிய தேவைகள் இருக்கின்றது. ஏனெனில் அங்கிருந்த அடையாளங்கள், எச்சங்கள் எல்லாம் அழிக்கப்பட்டுள்ளன.

நாங்கள் ஏன் இந்த நாட்டில் வசிக்கின்றோம் என அனைத்து மக்களும் நினைக்கும் அளவிற்கு இன்றைய இந்த பொருளாதார நெருக்கடியும் நில ஆக்கிரமிப்புகளும் கொண்டுவந்து விட்டுள்ளன. தெய்வத்திற்கே இந்த நிலை என்றால் மக்களுக்கு என்ன நிலை என நாங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.

இன்றைய இந்த கண்டன தீர்மானம் மூலம் பிரதம மந்திரி, தொல்லியல் திணைக்களத்திற்கு பொறுப்பான அமைச்சர் மற்றும் தேவையேற்படின் இதனுடன் தொடர்புடைய அனைத்து தரப்பினருக்கும் இன்றைய கண்டனப்பிரேரணை தொடர்பான எழுத்து மூலமான பிரேரணையை அனுப்பி வைப்போம்  என்றார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert