April 26, 2024

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் நடுவராக இலங்கைப் பெண்…

டோக்கியோவில் நடைபெறும் 2020 ஒலிம்பிக் போட்டிகளில், குத்துச் சண்டை போட்டிகளுக்கான நடுவராக, இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் தலைமை பெண் பொலிஸ் ஆய்வாளர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஜூலை 23ம் திகதி ஜப்பானின் டோக்கியோவில் தொடங்கும் 2020 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் முதல் இலங்கை பெண் குத்துச்சண்டை நடுவர் என்ற பெருமையை தலைமை ஆய்வாளர் டி.நெல்கா ஷிரோமாலா பெற்றுள்ளார்.

காலி, ரிபன் மகளிர் வித்தியாலயத்தில் கல்வி பயின்றுள்ள நெல்கா, 1997 ஆம் ஆண்டு பொலிஸ் திணைக்களத்தில் இணைந்துள்ளதுடன், பொலிஸ் கழகம் சார்பில் 2001 ஆம் ஆண்டு முதல் குத்துச் சண்டை போட்டிகளில் பங்கேற்று பல வெற்றிகளை பெற்றுள்ளார்.

நெல்கா ஷிரோமாலா முதல் பெண் பொலிஸ் குத்துச்சண்டை அணி உறுப்பினராக 2002 இல் பொலிஸ் குத்துச்சண்டை அணியை பிரதிநிதித்துவப்படுத்தினார். சர்வதேச அளவில் குத்துச்சண்டையில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய முதல் பெண் பொலிஸ் அதிகாரி ஆவார்.

நிலையில் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் உள்ளூர் குத்துச் சண்டை போட்டிகளின் நடுவராகவும், 2011 ஆம் ஆண்டு முதல் சர்வதேச போட்டிகளின் நடுவராகவும் செயற்பட்டு வரும் பிரதான பெண் பொலிஸ் பரிசோதகர் நெல்கா ஷிரோமாலா, 2017 ஆம் ஆண்டில் ஆசியாவின் சிறந்த குத்துச் சண்டை நடுவருக்கான விருதினை பெற்றிருந்தார்.