September 9, 2024

வலிசுமந்து ஊடகவியலாளனின் மனதிலிருந்து!

த.வி.பு-
ஞா 0164 – O+
மார்போடு இறுகக் கட்டியணைத்த துப்பாக்கியும், வரிப் புலிச் சீருடையும், பொக்கட்டிற்குள் தேசியத் தலைவன் வே.பிரபாகரனின் ஒளிப் படத்தையும் (போட்டோ) பொக்கிசமாய் வைத்திருந்தவாறே வீர மறத்தி தன்னுயிர் ஈந்திருக்கிறாள், தமிழீழம் மலரும் என்ற கனவோடு!
வித்தாகிப் போன வித்துடலில் இருந்த, விடுதலைப் புலிகளின் தனித்துவத்திலே ஒன்றான #தகடு படையணி, படையணியில் எத்தனையாவது உறுப்பினர், என்ற குறியீட்டு இலக்கம், குறுதி வகை பொறிக்கப்பட்டது.
இதில் உள்ள ஞ -சோதியா படையணிக் குரியது,
இலக்கம் 0164 என்னும் போது குறித்த பெண் போராளி இப் படையணியின் மூத்த போராளி என்பது உறுதியாகிறது.
குறித்த போராளி தைரியத்தை, தன் நம்பிக்கையை, தாயகத்தின் கனவை தலைவன் என்ற அந்த படத்தை தன் சேட்டுப் பொக்கட்டுள் போட்டு ஓர்மத்தோடு எதிரிப் படைகளின் மையத்துக்குள் நின்று களமாடியிருக்கிறாள் அந்த மறத்தி.
வித்துடல் இருந்த பகுதி இராணுவத்தின் முன் அரங்கையும் தாண்டி மூன்றாவது மண் அரணில் உள்ள பதுங்கு குழியோடு காணப்பட்டது.
ஒன்று வேவு பார்க்க எதிரியின் கோட்டைக்குள் புகுந்திருக்க வேண்டும் அல்லது, முன்னகர்வுத் தாக்குதலில் இராணுவ முன்னரணையும் தாண்டி மூன்றாவது மண் அரணுக்குச் சென்றிருக்க வேண்டும்.
வித்துடல் எச்சங்கள் காணப்பட்ட பகுதி மிதிவெடிகளால் விதைக்கப் பட்டிருந்துள்ளது, மிதி வெடிகள் அகற்றிய ஒவ்வொரு தடத்திலும் அடையாளத்திற்கு ஒரு சிறு கட்டை இறுக்கப்பட்டு காட்சிப் படுத்தப்பட்டருந்தது.
இப் போராளி முட்க் கம்பிகளும் முட்களும், மிதிவெடிகளும் நிறைந்த பகுதிக்கு த.வி.பு சீருடை, ஜக்கட் கோல்சர் அணிந்து காலில் #சாதாரண #செருப்பு போட்டே நகர்ந்து இருக்கிறாள் என்பதைப் பார்க் அப்படியே மெய் சிலிர்த்துப் போனது ஒரு கணம்.
இன்று குறித்த வித்துடல் எச்சங்களைப் பார்த்த போது, சொல்ல முடியாது நெஞ்சடைத்து, கண்களைக் கலங்கடித்துப் போனது, மெளனமாய் நின்று ஒரு மரியாதை, மெளனமாய் நின்றே ஒளிப் படங்களையும் பதிவாக்கிக் கொண்டேன், என்னுடன் சேர்த்து ஆறு ஊடக நண்பர்கள், யாருமே முடிந்து வெளியேறும் வரை பேசவில்லை,பேசவும் முடியவில்லை.
கடந்த 22 ம் திகதி காலையில் சம்பவத்தைக் கேள்வியுற்று, பல மணி நேரம் காத்திருந்து பொலிஸார் உள் நுளையவும் நாமும் நுளைந்தோம், வித்துடல் எச்சங்கள் காணப்படும் இடத்தில் 10 மீற்றர் தொலைவில் சென்று விட்டோம், ஆனால் பொலிஸார் மற்றும் கன்னிவெடி அகற்றும் பிரிவினர் ஊடகங்களுக்கு அனுமதி மறுத்தனர், இறுகிப் போன மனதோடு திரும்பினோம்.
இன்றும் அவ்வாறே அனுமதி மறுக்கப்பட்டது, ஆனால் நாமும் விடுவதாக இல்லை, காத்திருந்தோம் காலை 10:00மணி முதல், மதியம் 01:45 மணியளவில் நீதவான் பொலிஸ் பாதுகாப்புடன் உள்ளே நகர நாமும் பின் தொடர்ந்து நகர்ந்தோம், உறுதியின் உறைவிடத்தை அடைந்தோம்.
இதில் ஒரு ஆத்ம திருப்தி என்வென்றால், வித்துடல் எச்சங்கள் அதில் இருந்த தடையங்களை பதிவாக்கி வெளியிட்டோம், அதன் மூலமாக அந்த வீரமறத்தி யார் என்பது புலப்படும், அந்த முடங்கலுக்கு ஒரு முற்றுப் புள்ளி கிடைக்கும் என்ற பெரு நம்பிக்கையுடன், மனங்களை ஆற்றுப்படுத்தும்.