Mai 19, 2024

“வணங்கா மண்” கப்பல் வன்னி சென்ற விதம்!

அது 2009ம் ஆண்டு காலப் பகுதி. காலையில் எழுந்தால், கண் முழிப்பதும் மாலையில் கண்களை மூட முடியாமல் தவிப்பதும் புகைப்படங்களை பார்த்ததால் ஏற்பட்ட எதிர்வினை. வன்னியில் இருந்து கொத்துக் கொத்தாக இறந்தவர்களின் புகைப்படங்கள் வந்து கொண்டு இருந்த காலம் அது. வன்னியில் நடந்த கொடூர யுத்தம். விடுதலைப் புலிகளை அழிக்கிறோம் என்று இலங்கை ராணுவம் மக்களை கொன்று குவித்த நாட்கள் அவை. வன்னியில் இருந்து புலிகளின் அனைத்துலக பொறுப்பாளர் மணிவண்ணன்(காஸ்ரோ) மற்றும் அரசியல் துறை பொறுப்பாளர் ப.நடேசன் அவர்களும், 2008ம் ஆண்டு இறுதியில் வன்னிக்கு உணவையும் மருந்தையும் மற்றும் சர்வதேச பணியார்களையும் அனுப்ப வேண்டும் என்று தமிழர் புணர்வாழ்வு கழக பொறுப்பாளர் ரெஜி அவர்களுக்கு கூறியிருந்தார்கள்.
புலிகளின் நிர்வாக தலைநகரமாக இருந்த கிளிநொச்சி இலங்கை ராணுவத்தின் கைகளில் வீழ்ந்திட விடுதலைப் புலிகள், முள்ளிக் குழம் பகுதியில் இருந்து முள்ளிவாய்க்கால் நோக்கி பின் நகர்ந்து இருந்தார்கள். இதனை அடுத்து முள்ளிவாய்க்காலுக்கு சர்வதேச மருத்துவர்கள், வெளிநாட்டு ஊடகவியலாளர்கள், மற்றும் மனித நேய செயல்பாட்டாளர்கள் வரவேண்டும் என்றும். அத்தோடு உணவு, மருந்துகள் மற்றும் அத்தியவசிய பொருட்களும் அனுப்பப்பட வேண்டும் என்று ப.நடேசன் மற்றும் காஸ்ரோ ஆகியோர் கேட்டுக் கொண்டார்கள். அதனை அடுத்து உதித்ததே இந்த „வணங்கா மண்“ கப்பல் திட்டம் ஆகும். இதனை அடுத்து புலம்பெயர் நாட்டில் இருந்து சுமார் 250 பேருடன் வன்னிக்கு தேவையான பொருட்களையும் சேர்த்து அனுப்ப திட்டம் ஒன்று வரையப்பட்டது.
ஆனால் நிலமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டு செல்லவே, லண்டனில் உள்ள மருத்துவர் அருட்குமாரை தவிர வேறு எவரும் வன்னி செல்ல தயாராக இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.. வணங்கா மண் கப்பல் வன்னி நோக்கி வர உள்ளதாக இந்த கட்டத்தில் தான் வன்னிக்கும் அறிவிக்கப்பட்டது. வெள்ளை இன ஊடகவியலாளர்களும் சரி, தமிழ் ஊடகவியலாளர்களும் சரி ஏன் மனித நேய செயல்பாட்டாளர்கள் கூட வன்னி செல்ல தயாராக இல்லை என்ற நிலை தோன்றியது. இதற்கு காரணம், ஆரம்ப நிகழ்வில் நடந்த பல முறைகேடான விடையங்களும் இலங்கையில் நடந்த கொடூர யுத்தமுமே காரணம். (அதனை பின்னர் பார்கலாம்). 10.03.2009 அன்று புலம்பெயர் மக்களுக்கு இந்த வணங்கா மண் திட்டம் அறிவிக்கப்பட்டது. தமிழ் மக்களிடையே இதற்கு பெரும் வரவேற்ப்பு இருந்தது. தம்மிடம் உள்ள எல்லா உணவுப் பொருட்களையும் அவர்கள் உடனே கொண்டு சென்று கொடுத்தார்கள்.
முதன் முதலாக லண்டலில் பல்வேறு இடங்களில் இது ஆரம்பிக்கப்பட்ட வேளை. லண்டனில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் கருணைக் கப்பல்(மேர்சி ஷிப்) என்ற சொற்பதத்தை பாவித்து, இதற்கான அங்குரார்ப்பணத்தை ஆரம்பித்து வைத்தார்கள் சிலர். இதற்கு அக்ட் நவ்(Act Now) என்ற அமைப்பு ஒரு முக்கிய காரணியாக செயல்பட்டது. பின் நாட்களிலும் குறித்த அமைப்பே பல உதவிகளை தமிழர்களுக்கு செய்தார்கள். இந்த ஆரம்ப நிகழ்வில் நடந்த சில விடையங்களே, பலரை முகம் சுழிக்க வைத்தது எனலாம். தேம்ஸ் நதிக்கரைக்கு முன்னால் உள்ள நட்சத்திர விடுதில் இன் நிகழ்வு இடம்பெற்று முடிவடையும் தறுவாயில். நதியில் செல்லும் உல்லாச படகு ஒன்றை முழுமையாக வாடகைக்கு அமர்த்திய சிலர், அதில் ஏறி அது தான் வணங்கா மண் கப்பல் என்று கூறி. அது இப்படி தான் செல்லும் என்று காட்டினார்கள்.
அந்த படகில் ஏறிய உடனே உள்ளே மது பாணங்கள் கொடுக்கப்பட்டது. மதுவை அருந்திய பலர் அங்கே வந்த பாடகி ஒருவரை பாடச் சொல்லி. பாடலை கேட்டவாறே மது போதையில் மிதந்தார்கள். வன்னியில் மக்கள் கொத்துக் கொத்துக் கொத்தாக இறக்க. இங்கே மது அருந்திய வண்ணம், அதுவும் வணங்கா மண் கப்பல் என்று கூறி அதில் மது அருந்தி கழியாட்டத்தில் ஈடுபட்டதை என்னால் என்றுமே மன்னிக்க முடியாது. குறித்த படகு கரையை அடைந்த உடனே, அங்கிருந்து வெளியேறினேன். எப்படி வணங்கா மண் கப்பல் வன்னி சென்று சேரப்போகிறது என்ற எண்ணம் தான் என் மனதில் பெரும் கேள்விக் குறியாக இருந்தது.
முள்ளிவாய்க்காலில் எந்த ஒரு மருந்தும் இல்லை. இலங்கை ராணுவத்தின் மிலேச்சத்தனமாக தாக்குதலில் பலர் நாளுக்கு நாள் பலியாகிக்கொண்டு இருக்க. சர்வதேசமும் திரும்பிப் பார்க்கவில்லை. இதேவேளை வணங்கா மண் கப்பல் இன்றும் வரும், நாளை வரும் என்று வன்னியில் மக்களும் புலிகளும் காத்திருந்தார்கள். காலம் கடந்து கொண்டு இருக்க, பிரான்சில் உள்ள குட்டி என்னும் நபரை புலிகளின் சர்வதேச பொறுப்பாளர் காஸ்ரோ தொடர்பு கொண்டார். குட்டி என்பவர் KP என்று அழைக்கப்படும் புலிகளின் முன் நாள் சர்வதேச ஆயுத கொள்வனவு நபரின் உறவினர் ஆவார். குட்டி பிரதீப் என்னும் நபரை தொடர்பு கொண்டார். பிரதீப் என்பவர் பிரான்ஸ் நாட்டில், ஏற்றுமதி வியாபாரத்தில் இருந்தார். அவரூடாக ஒரு கப்பலை தயார் செய்தார்கள். 10.03.2009ல் போடப்பட்ட இந்த திட்டம் இதுவரை 7.5.2009 வரை செயல்படாமல் இருக்க கப்பலே ஒரு காரணமாக இருந்தது.
கப்பல் ஒன்றை வாடகைக்கு எடுத்து அதனை இலங்கைக்கு கொண்டு செல்ல பெரும் தொகையான பணத்தை கப்பல் கம்பெனிகள் கோரியிருந்தார்கள். இதனால் சுவிஸ் நாட்டிற்கு கொண்டு சென்று உடைத்து நொருக்கி இரும்புகளை மட்டும் எடுக்க என இருந்த, கப்பலை தான் கப்டன் அலி என்று பெயர் இட்டார்கள். இந்தக் கப்பலை இந்தியாவின் கல்கத்தாவில் கொண்டு போய் உடைக்கலாம் என்று கூறி. கப்பலை பெற்று அதில் பொருட்களை வன்னிக்கு அனுப்பி. பின்னர் கல்கத்தாவுக்கு கொண்டு சென்று கப்பலை உடைப்பது என்ற திட்டம், பிரான்சில் பிரதீப்பால் போடப்பட்டது. இது குறைவான பொருட் செலவில், அமைந்ததால் இந்த திட்டத்திற்கு பச்சை கொடி காட்டப்பட்டது.
உலகமே கைவிட்ட உறவுகளுக்கு உதவ வேண்டும் என்ற பரிவுடன் உறவுகளை நோக்கி ஒருபயணம்‘ என்ற தலைப்பில் தமிழில் “வணங்கா மண்” எனவும் ஆங்கிலத்தில் “கருணைக் கடன்” என்ற “ஈரூடக”பெயருடன் சிரியாவில் பதிவு செய்யப்பட்ட “கப்டன் அலி” என்ற 1600 மெற்றிக்தொன் எடைகொண்ட ‘வணங்கா மண்‘ (IMO: 6619920) எண்ணைக் கொண்ட கப்பல், பிரான்சில் இருந்து புறப்பட தயார் ஆனது.
லண்டனில் இருந்து மக்களிடம் பெறப்பட்ட பொருட்கள், ஆலயங்கள் வழங்கிய பொருட்கள் மற்றும் தனியார் கடைகள் வழங்கிய பொருட்கள் என்று, பல தரப்பட்ட பொருட்களோடு ஒரு கப்பல் 31.03.2009 புறப்பட்டு பிரான்சின் ஃபோஸ்–சுர்–மெரி க்கு செல்ல இருந்தது. ஆனால் செல்லவில்லை. இலங்கை அரசாங்கம் கொடுத்த அழுத்தம் காரணமாக, பிரித்தானிய அரசு இந்த கப்பல் புறப்படுவதை தாமதப் படுத்தியது. அந்த வேளைகளில் அர்சுஜா எதிர்வீரசிங்கம் என்பர் இது தொடர்பாக அரசாங்கத்தோடு பேசியும் இருந்தார். முன்னனுமதியின்றி எந்தவொரு கப்பலும் இலங்கைக் கடல் எல்லைக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டாது எனவும் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழையும் எந்தவொரு கப்பல் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என இலங்கை கடற்படை எச்சரித்து தொடர்ச்சியாக வலியுறுத்தியதைத் தொடர்ந்தே, பிரித்தானிய அரசாங்கம் அனுமதி மறுத்திருப்பதாகத் செய்திகள் வெளியாகி இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
வணங்கா மண் கப்பலுக்கு மக்கள், கோவில்கள், தனியார் நிறுவனங்கள் பொருட்களை வழங்கியது ஒரு புறம் இருக்க. சுமார் £1.5 மில்லியன் பவுண்டுகள் பணமாகவும் ஐரோப்பிய நாடு முழுவதும் சேகரிக்கப்பட்டது. இதில் உடைக்க இருந்த கப்பலே பாவிக்கப்பட்டது. இதனால் பெரும் பொருட் செலவு மிச்சம். அதுபோக கப்பலில் ஏற்றப்பட்ட அனைத்தும் மக்களால் இலவசமாக வழங்கப்பட்ட பொருட்கள். எனவே மிகுதிப் பணத்திற்கு என்ன நடந்தது என்ற விடையம், இதுவரை சரியாக தெரிவிக்கப்படவில்லை. அன்றைய தினம் நிதி பொறுப்புகளில் இருந்தவர் ரி.ஆர்.ஓ ரெஜி. இவருக்கு இது வெளிச்சம். இன் நிலையில் இறுதியாக 20.04.2009 அன்று, அன்று பிரித்தானியாவில் உள்ள இப்- சுவிச் துறைமுகத்தில் இருந்து கிளம்பிய கப்பல், பிரான்சின் ஹகப்ப ஃபேகம்ப் எனும் துறைமுகத்திற்கு சென்று. அதில் உள்ள பொருட்கள் தரை இறக்கப்பட்டது.
அந்தக் கப்பலில் இருந்து இறக்கப்பட்டு. கப்டன் அலி என்ற கப்பலுக்கு மாற்றப்பட்டது. இதில் பிரான்சில் உள்ள நபர்கள் சிலர், அங்கிருந்த அரிசி பருப்பில் நீண்ட நாள் வைத்திருக்க கூடிய அரிசி பருப்பை தாம் எடுத்துக் கொண்டு. அதற்கு ஈடாக குறைந்த மாதத்தில் காலாவதியாகும்(Expair) ஆரிசி பருப்பு போன்ற பக்கெட் உணவுகளை மாற்றி வைத்ததாக உறுதிப் படுத்தப்படாத தகவல் ஒன்றும் உள்ளது. அது போக சில தமிழ் கடை உரிமையாளர்கள் இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் காலாவதியாகவுள்ள (Expair) பொருட்களை கொடுத்ததாகவும் ஒரு செய்தி உள்ளது. ஏன் எனில் வணங்கா மண் உதவிப் பொருட்கள் இறுதியாக வன்னி சென்றவேளை, பல பொருட்கள் பாவிக்கவே முடியாத அளவு காலாவதி ஆகி இருந்தது யாவரும் அறிந்த விடையம்.
தற்போது பிரான்சில் கப்பல் தயாராக இருந்தும், அதனால் புறப்பட முடியவில்லை. ஜேர்மனி, சுவீடன், நோர்வே என்று பல நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் தமது பங்கிற்கு பல பொருட்களை கொடுத்திருந்தார்கள். அதுவும் வந்த பின்னரே பிரான்சில் இருந்து கப்பல் புறப்பட முடியும் என்று கூறப்பட்டது. கப்டன் அலி என்னு பெயரிடப்பட்ட கப்பலில் 12 பேர் கப்பல் உதவியாளர்களாக இருந்தார்கள். கப்பல் கப்டின் எகிப்த் நாட்டை சேர்ந்தவர்.. மீதமுள்ளவர்கள் சிரியா நாட்டை சேர்ந்தவர்கள். இலங்கையில் போர் நடப்பது இவர்களுக்கு தெரியும். ஆனால் போர் நடக்காத ஒரு பகுதிக்கு தான் நாம் செல்கிறோம் என்று, உதயண்ணன் கூறி அவர்களை சமாதானப்படுத்திக் கொண்டு இருந்தார். முழு விடையத்தையும் சொன்னால், கப்டன் தொடக்க ஏனைய உதவியாட்கள் வரை இதற்கு ஒப்புக்கொண்டிருக்க மாட்டார்கள்.
இறுதியாக அந்த நாள் வந்தது, நீண்ட இழுபறிக்கு பின்னர் பெஸ்–சூர்–மேர்க்கு என்னும் இடத்தில் இருந்து 7.05.2009 அன்று வணங்கா மண் கப்பல், வன்னி நோக்கி செல்ல ஆரம்பித்தது. இதில் உதயண்ணன், ஐலாந்தில் இருந்து வந்த கிருஸ்டின் மற்றும் சிவா என்ற நபரும் இருந்தார்கள். இதில் கிருஸ்டீன் என்ற நபர் தொடர்பாக நாம் நிச்சயம் பதிவு செய்ய வேண்டும். சமாதான காலம் தொட்டே அவர் இலங்கையில் பணி புரிந்தவர். விடுதலைப் புலிகளின் நம்பிக்கையை பெற்ற நபர். தமிழர்கள் பால் அவருக்கு ஒரு இரக்கம் உள்ளது. அதே போல சிங்கள ராணுவத்தாலும் நன்கு மதிக்கப்படும் ஒரு நபர். இதேவேளை பிரான்சில் இருந்து கப்பல் புறப்பட்ட வேளை கப்பலில் ஏறிய சிவா என்னும் நபர்(பெயர் மாற்றியுள்ளோம்) மது பாண போத்தல்களோடு வணங்கா மண் கப்பலில் ஏறி இருந்தார். அவர் தண்ணி அடிக்க ஆரம்பித்தவேளை, இதனை சற்றும் ஏற்றுக் கொள்ளாத கிருஸ்டின் அவர்கள், அவரை அடுத்த துறைமுகத்தில் இறக்கி விடும்படி கட்டளையிட்டார். அவ்வாறே நடந்தது.
பிரான்சில் இருந்து எகிப்த்து நோக்கி சுயஸ் கால்வாய் வழியாக அரபிக் கடல் ஊடாக பயணித்து வன்னி செல்வதே இவர்கள் திட்டமாக இருந்தது. கப்பல் மிகவும் பழைய கப்பல். அதன் வேகம் மிகக் குறைவானது. கடலில் கொந்தளிப்பு அதிகமாக இருந்தால் கப்பல் முன் நோக்கிச் செல்லாமல் அப்படியே கடலில் நிற்க்குமாம் என்கிறார், உதயண்ணன். சிலவேளைகளில் 12 மணி நேரமாக கூட, கப்பல் நகராமல் கடலில் நின்றுள்ளது. ஆமை வேகத்தில் வன்னி நோக்கி நகர்கிறது வணங்கா மண் கப்பல். ஆனால் வன்னி மண்ணில் நாளுக்கு நாள் புலிகள் தமது நிலப்பரப்பை இழந்து, பின் நோக்கி நகர்கிறார்கள். அந்த விடையம் கப்பலுக்கு தெரியுமா என்ன ? இந்த கப்பலில் நோர்வே நாட்டை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் துணிந்து சென்றார். அவர் அலைமகன் என்று அறியப்படும் ஒரு துணிவான ஈழத் தமிழர்.
இவ்வாறு வணங்கா மண் பயணித்தவேளை, கடலில் கூட இன்ரர் நெட் வசதிகளோடு பாவிக்க கூடிய லேப் டாப்பை, வைத்திருந்தார் கிருஸ்டீயன். அவருக்கு 5 நாட்கள் கழித்து புலித்தேவன் ஒரு செய்தியை அனுப்பி இருந்தார். அது என்னவென்றால், நாம் முல்லைத்தீவு கடல் பரப்பின் கட்டுப்பாட்டை இழந்துவிட்டோம் என்று. புலிகள் பலமான தாக்குதலுக்கு ஆளாகி உள்ளதாக புலித்தேவன் செய்தி அனுப்ப. இது தெரியாமல் மறு முனையில் ராணுவ கட்டளை தளபதி கிருஸ்டீனுக்கு செய்தி ஒன்றை அனுப்புகிறார், நாம் வெல்கிறோம். பல இடங்களை பிடித்துவிட்டோம் என்று. இதனை கிரூஸ்டீன் பயணிப்பவர்களுக்கு காட்டுகிறார். இதனிடையே கப்பலில் 2 நாட்கள் கழித்து, மருத்துவர் அருண் குமார் மற்றும் ஒரு நபரும் ஏறுகிறார்கள். இன் நிலையில் புலிகள் கட்டுப்பாட்டில் கடல் பரப்பு இல்லை என்று தெரிந்ததும், தொடர்ந்தும் பயணிக்க பலர் அஞ்சி கப்பலில் இருந்து இறங்கி விடுகிறார்கள்.
ஆனால் என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று கிருஸ்டீனும், உதயண்ணனும் பயணத்தை தொடர்கிறார்கள். டீசல் நிரப்புவதற்காக மால்டா என்னும் நாட்டிற்கு செல்கிறார்கள். அங்கே டீசல் அடிக்கப்படுகிறது. அதற்கான பணத்தை கொடுத்த பின்னர் கப்டன், முதல் இருந்த டீசல் எண்ணிக்கையையும், தற்போது நிரப்பப்பட்ட எண்ணிக்கையையும் கூட்டிப் பார்த்தால், 400 லீட்டர் டீசல் குறைவதாக இருப்பது கண்டு பிடிக்கப்படுகிறது.. டீசல் அடித்த நபர்கள் 400 லீட்டரை ஏமாற்றி விட்டார்கள் என்று, அறிந்த கப்டன் சண்டை போடுகிறார். நீதிமன்றம் சென்று வழக்கு தொடுப்பேன் என்று அவர் கூச்சல் இட்டு, சுமார் 3 நாட்கள் கப்பல் மால்டா நாட்டில் தங்கி இருந்துள்ளது இந்த டீசல் பிரச்சனை காரணமாக. இதனை விட கப்பல் 4-தொடக்கம் 5 கடல் மைல் வேகத்திலேயே சென்றுள்ளது என்பது அடுத்த அதிர்சி தரும் தகவலாக உள்ளது. சாதாரண சரக்கு கப்பல் 9 கடல் மைல் தொடக்கம் 12 கடல் மைல் வேகத்தில் செல்ல வல்லது. அப்படி என்றால் இந்த வணங்கா மண் கப்பல் எந்த வேகத்தில் பயணித்து இருக்கும் என்று நீங்களே எண்ணிப் பார்க்கலாம்.
இவ்வாறு 29 நாட்கள் கடல் பயணம் மேற்கொண்டு, 4.6.2009 அன்று கொழும்பு கடலுக்கு அருகாமையில் சர்வதேச கடல் பரப்பினுள் நுளைந்தது வணங்கா மண். இந்த வணங்கா மண் ஏன் வன்னி செல்லவில்லை என்று தற்போது உங்களுக்கு புரிந்திருக்கும். 18.5.2009தோடு எல்லாம் முடிந்து விட்டது என்பதனை கப்பலில் உள்ளவர்கள் அறிந்திருந்தார்கள். எனவே பொருட்களை கொழும்பு கொண்டு சென்று, அதனை செஞ்சிலுவை சங்கம் ஊடாக வினியோகிக்க முடிவு செய்யப்பட்டு இருந்தது.
அன்று கதவு தட்டும் சத்தம் கேட்டு நான் திடுக்கிட்டு எழுந்தேன், வெளியே வந்து பாருங்கள் என்று என்னிடம் கப்டன் கூறினார். நானும் ஓடிச் சென்று பார்த்தேன். அங்கே இலங்கை கடல்படையின் 4 டோறா படகுகள் மற்றும் ஒரு கப்பல் எங்கள் பின்னால் வந்து கொண்டு இருந்தது. அவர்கள் எங்களை கொழும்பு நோக்கி செல்ல உத்தரவிட்டுள்ளதாகவும். நாங்கள் கைது செய்யப்பட்டு உள்ளோம் என்றும் கப்டன் என்னிடம் கூறினார் என்கிறார் உதயண்ணா. கொழும்பு துறைமுகத்திற்கு அப்பால் 7 நாட்களாக வணங்கா மண் கப்பல் தடுத்து வைக்கப்பட்டு இருந்தது. 21 பேருக்கு மேல் வந்து வந்து விசாரணை செய்து சென்றார்கள். நாளுக்கு நாள் இலங்கை அரசு மீது அழுத்தம் அதிகரித்துச் சென்றது. இதற்கு காரணம் கப்பலில் இருந்த 12 சிரிய நபர்களும், தமது நாட்டுக்கு அழைப்பை விடுத்து இலங்கை தம்மை கைது செய்து வைத்திருப்பதாக கூற. சிரிய அரசு இலங்கைக்கு கடும் அழுத்தத்தை பிரயோகிக்க ஆரம்பித்தது.
கொண்டு வரப்பட்ட பொருட்களை ஏற்றுக் கொள்ள மகிந்த அரசு தயாராக இல்லை. அதனை குறைந்த பட்சம் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு கொடுக்க கூட இலங்கை அரசு விரும்பவில்லை. இதனை அடுத்து மகிந்த உத்தரவின் பெயரில் கப்பல் விடுவிக்கப்பட்டது. ஆனால் இந்த கப்பல் இந்தியா செல்லக் கூடும் என்று முன்னரே ஊகித்த மகிந்த தரப்பு. கப்பல் இலங்கையில் இருந்து வெளியேற வேறு ஒரு வழியை காட்டி. இதனூடாகவே வெளியேறவேண்டும் என்று கட்டளையிட்டது. ஆனால் வணங்கா மண்ணின் கப்டன் ஒரு விடாப் பிடி மன்னன் என்கிறார்கள். எப்படி சென்றால் இலகுவாக சென்னை செல்லலாமோ அந்த வழியில் கப்பலை அவர் செலுத்த. பின்னால் வந்த டோரா படகில் இருந்து, ஒலி பெருக்கி மூலம் நீங்கள் பிழையான பாதையில் செல்கிறீர்கள் என்று கூச்சல் போட்டது இலங்கை கடல் படை. ஆனால் அதனை அசட்டை செய்யாமல் சென்றார் கப்டன். எனது கப்பல் ஆழ் கடலில் செல்லாது, அதனால் கடல் கரை ஊடாக நாம் செல்ல முயல்கிறோம் என்றி சாட்டு சொல்லியுள்ளார் கப்டன்.
இதனை அடுத்து 11.6.2009 அன்று சென்னை துறைமுகத்திற்கு அப்பால் வணங்கா மண் கப்பல் சென்று நங்கூரமிட்டது. ஈழத் தமிழர் நலன் கருதிப் புறப்பட்ட கப்பல் என்று கருதியோ, என்னவோ இக்கப்பலையும் தீண்டத் தகாத தரப்புப் போன்று கருதி அதை சென்னைத் துறைமுகத்துக்குள் அனுமதிக்க இந்திய அதிகார வர்க்கம் அந்தவேளையில் மறுத்துவிட்டது. இந்த நிலையில் „மனிதம்“ என்னும் அமைப்பை நடத்தி வந்த அக்கினி சுப்பிரமணியம் என்பவர், உதவ முன் வந்தார். அவர் கலைஞர் மகள் கனிமொழியை அணுகினார். கலைஞர் உதவியாளர் சண்முகநாதனிடமும் உதவி கோரினார். இதில் கே.எஸ் ராதா கிருஷ்ணன் அவர்களின் பங்கையும், நாம் மறந்துவிட முடியாது. கனிமொழி அவர்கள் அப்போது மத்திய பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். அவர் உதவி செய்வதாக வாக்களித்தார்.
இலங்கையில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட வணங்கா மண் கப்பல் 10 நாட்கள் பின்னரே சென்னை கடல் பரப்பினுள் வந்தது. இருந்தாலும் துறைமுக அதிகாரிகள் கப்பலை அனுமதிக்க மறுத்துவிட்டார்கள். இதனால் துறைமுகத்தில் இருந்து 10 கடல் மைல் தொலைவில் இக்கப்பல் நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத் தக்கது. அரசியல் கட்சிகள் மற்றும் மனிதநேய அமைப்புகள் கண்டனக்குரல் எழுப்பியபிறகே அந்த கப்பலில் இருப்பவர்களுக்கு தேவையான தண்ணீர் மற்றும் குடி நீரை துறைமுக அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். அக்கப்பலில் உள்ள பொருட்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்பி வைக்க அனுமதி கிடைத்துவிடும் என்று சட்டப்பேரவையில் மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நம்பிக்கையோடு வாக்குறுதியளித்தார். ஆனால் அனுமதி கிடைப்பதில் பல தாமதங்கள் ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கப்பலில் உள்ள பொருட்களை மீண்டும் இலங்கைக்குக் கொண்டு சென்று இறக்க அனுமதிக்க வேண்டும். அல்லது சென்னை துறைமுகத்தில் இந்தப் பொருட்களை இறக்கிவிட்டு கப்பலை திரும்பிச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கோரி மனிதம் அறக்கட்டளை செயல் இயக்குநர் அக்னி சுப்பிரமணியம் புதுதில்லியில் செஞ்சிலுவைச் சங்க (இந்திய பிரிவு) தலைமைச் செயலாளர் அகர்வாலைச் சந்தித்து மனு அளித்தார். இந்த விசயத்தில் செஞ்சிலுவைச் சங்கம் தலையிட்டு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கப்பலில் சிக்கித் தவிப்பவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அக்னி சுப்பிரமணியம் கேட்டுக்கெண்டார் .
வன்னியில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு உதவ என புறப்பட்ட கப்பல். ஆனால் தற்போது அந்த கப்பலில் சிக்கி தவிக்கும் நபர்களுக்கு உதவேண்டிய நிலை ஏற்பட்டது. இதனிடையே வணங்கா மண் கப்பலை ஆய்வு செய்த தமிழக உளவுத்துறையினர் சில நாட்களுக்கு முன்பு மனிதம் அறக்கட்டளையின் நிருவாகி ஒருவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றார்கள். பின்னர் அவரை அடைத்து வைத்து விசாரணை நடத்தினார்கள். அப்போது சித்திரவதை செய்துள்ளனர் என்று மனிதம் அறக்கட்டளையில் செயலாற்றி வரும் ஒருவர் கூறினார்.
இதற்கிடையில், காங்கிரஸ் பிரமுகர் கோபண்ணா மூலமாக மத்திய கப்பல் துறை அமைச்சரான ஜி.கே.வாசனுக்கும் வணங்கா மண் ஊழியர்களின் நிலைமை விவரமாகச் சொல்லப்பட்டிருந்தது. கப்பல் ஊழியர்கள் அல்லாடுவது பற்றி அப்போதுதான் அமைச்சர் ஜி.கே.வாசனின் கவனத்துக்கு வந்தது. உடனடியாக அவர்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்குமாறு அதிகாரிகளிடம் சொல்லியிருக்கிறார் ஜி.கே.வாசன். அதனால் கப்பல் ஊழியர்கள் கவலைப்படவேண்டியதில்லை எனச் சொன்னார் கோபண்ணா. ஜி.கே.வாசன், கனிமொழி ஆகியோர் முயற்சி எடுத்ததன் பலனாக அடுத்த நாள் காலையிலேயே துறைமுக அதிகாரிகள் துறைமுகத்திற்குள் கப்பலை உள்வாங்கினார்கள் . இதற்கிடையில், இலண்டனில் இருந்து நம்மைத் தொடர்புகொண்ட தமிழர்கள் சிலர், ‘கப்பல் கடலில் நிற்கும் ஒவ்வொரு நாளும் பல லட்சரூபாய் செலவாகிக் கொண்டிருக்கிறது. கப்பலில் இருக்கும் நிவாரணப் பொருட்களை இலங்கையிலோ தமிழகத்திலோ இறக்க அனுமதி வழங்கினால்தான், உலகத் தமிழர்களின் ஒருமித்த முயற்சிக்கு உரிய பலன்கிடைக்கும். அதோடு, கப்பலிலிருக்கும் ஊழியர்கள் பலருக்கும் உடல்நிலை சரியில்லாததால், அவர்களைவிமானம் மூலமாக சொந்த நாடுகளுக்கு அனுப்பவும் தமிழக அரசு உதவ வேண்டும். இது குறித்து தமிழகத்தின் செயலாளர் ஜோதி ஜெகராஜனுக்கு கப்பல் உரிமையாளர் தகவல் அனுப்பி உள்ளார். அதனை உடனே செய்யுங்கள் என்று கூறினார்கள்.
இன் நிலையில் இந்தியாக் கடலில் 21 நாட்கள் வணங்காமண் கப்பல் தத்தளித்த நிலையில். சிலவேளைகளில் மட்டும் ஈழப் பிரச்சனையை கையில் எடுக்கும் கலைஞர் அவர்கள், கைப்பட ஒரு கடிதத்தை எழுதி. தனது அமைச்சர் பொன்முடி ஊடாக மத்திய அமைச்சராக இருந்த ஆர்.ராசா விடம் கையளித்தார். இந்த கடிதம் நேரடியாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் கையளிக்கபப்பட்டது. தமிழக முதல்வரின் கோரிக்கைப்படி இந்தக் கப்பலில் வந்த பொருள்களை இறக்கி, வன்னியில் இடம்பெயர்ந்த இடைத் தங்கல் முகாமில் உள்ள மக்களுக்கு அவற்றை வழங்கச் செய்யத் தாம் நடவ டிக்கை எடுப்பார் என இந்தியவெளிவிவகார அமைச்சர் கூறியிருந்தார்.
தமிழக முதல்வர் இந்திய அரசை கேட்டுக் கொண்டதற்கிணங்கி, சிறீலங்காவின் உயர்மட்டக் குழு இந்தியா வந்தபோது உடன்பாடு ஏற்பட்டது. தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாய் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. தமிழக முதல்வரும் இந்திய அரசிற்கு இரு முறை கடிதம் எழுதியும் வணங்கா மண் நிவாரணப் பொருட்கள் தமிழர்களுக்கு சென்றடைய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்ததாகவும் அக்கடிதத்திற்கு பதிலளிக்கும் விதமாய் இந்திய பிரதமரும், தமிழக முதல்வருக்கு நிவாரணப் பொருட்களை சிறீலங்கா செஞ்சிலுவை சங்கம் எடுத்துக் கொண்டுள்ளதாயும், அப்பொருட்கள் தமிழ் மக்களுக்கு விரைவில் விநியோகிக்க சிறீலங்கா அரசு பார்த்துக் கொள்ளும் என அக் கடிதத்தில் எழுதியிருந்தார்.
இதில் அண்ணன் வைகோ அவர்களின் பங்களிப்பையும் நாம் மறந்துவிட முடியாது. ‘கப்டன் அலி‘ என்ற வணங்காமண் கப்பலில் அனுப்பப்பட்ட உதவிப் பொருட்கள், நிவாரணப் பொருட்கள் பல இன்னல்களுக்கு நடுவில் தமிழக அரசின் அழுத்தங்கள் காரணமாய் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் கப்பலில் உள்ள பொருட்கள்; இறக்கப்பட்டு இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்டு ‘கொலராடோ‘ என்ற சரக்குக் கப்பலில் 03.07.2009 வெள்ளிக் கிழமை சென்னையில் இருந்து கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 27 பெரிய பெட்டகங்களில் 884 தொன் வணங்கா மண் நிவாரணப் பொருட்கள் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டது முதல் பல இடையூறுகளை சந்தித்தது. முதலில், சோதனை என்ற பெயரிலும், பின்னர்துறைமுக கட்டணம் என்ற பெயரிலும், வரிக்காகவும் துறைமுகத்திலேயே நிறுத்தப்பட்ட நிலையில், கொள்கலன்களில் உள்ள பொருட்கள் பாவனைக்கு உகந்தவையாக என்பதை சுகாதார அமைச்சு, தரக்கட்டுப்பாட்டு நிறுவனம், அணுசக்தி அதிகார சபை ஆகியன பரிசோதித்து சான்றிதழ்களை வழங்க வேண்டும். என இலங்கை அரசு தெரிவித்தது.
முள்வேலிக்கு பின் உள்ள தமிழர்களுக்கு இப்பொருட்களை விநியோகிக்க சிறீலங்கா செஞ்சிலுவை சங்கம் முடிவெடுத்து, இந்நிலையில் சிறீலங்கா செஞ்சிலுவைசங்கத்தின் துணை இயக்குநர் சுரேன் பெரீஸ் ‘டெய்லி மிரர்‘ என்னும் ஆங்கில நாளிதழுக்கு கொடுத்த செய்தியில், தங்களது சங்கத்தின் தலைவர் சிறீலங்கா அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், நிவாரணப்பொருட்கள் கொழும்பு துறைமுகத்தில் கிடப்பதால், அதற்கான வரி தொடர்ந்து ஏறிக் கொண்டு செல்வதைச் சுட்டிக்காட்டியிருந்தார்
அதன் படி 27 கொள்கலன்களை ஏற்றிய பாரவூர்திகளின் மூலம், 680 மெற்றிக் தொன் பெறுமதியான பொருட்கள் வவுனியாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. இவ்வளவு காலம் துறைமுகத்தில் இந்த பொருட்கள் தேங்கி கிடந்தமைக்காக, அரசாங்கம் 20 லட்சம் ரூபாவையும், இலங்கை செஞ்சிலுவை சங்கம் 6 லட்சம் ரூபாவையும் தாமதக் கட்டணங்களாக செலுத்தியதாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் பரப்புரை இணைப்பாளர் றுக்சான் ஒஸ்வெல்ட் தெரிவித்திருந்தார். இலங்கை ஜனாதிபதி மகிந்தராஜபக்சவின் உத்தரவின் பேரில் அவை துறைமுகத்தில் இருந்து வெளியே எடுக்கப்பட்டு இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக வவுனியாவில் உள்ள முகாம்களுக்கு விநியோகத்துக்காக அனுப்பப்படுவதாக, நிவாரண சேவைகளுக்கான இலங்கை அமைச்சர் அமீர் அலி அன்றைய தினம் தெரிவித்திருந்தார்.
இலங்கையின் வடபகுதியில் போர் உக்கிரமடைந்திருந்த வேளையில், இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்காக வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்களால் மார்ச் மாதத்தில் அனுப்பப்பட்ட உதவிப்பொருட்கள் நீண்ட இழுபறிகளுக்குப் பின்னர் 24.10.2009அன்று இந்தப் பொருட்கள் 27 கொள்கலன்களில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் வவுனியா கிளைக் களஞ்சியத்திற்கு வந்து சேர்ந்தது. மருந்துகள் மருந்துவ உபகரணங்கள் அரிசி, மா, பருப்பு, சீனி, குழந்தைகளுக்கான பாலுணவு வகைகள், தகரத்தில் அடைக்கப்பட்ட பல்வேறு உணவுப்பொருட்கள் உட்பட பல அத்தியாவசிய பொருட்கள் வந்தடைந்தது. இந்த நிவாரணப் பொருட்கள் விநியோகத்திற்கு வசதியாக வவுனியா களஞ்சியத்தில் இந்தப் பொருட்கள் வகைப்படுத்தப்பட்டு பொதிசெய்யப்பட்டு முதல் தொகுதியாக மனிக்பாம் 4 ஆம் வலயத்தில் உள்ள மக்களுக்கு வழங்கப்பட்டது. வவுனியா செஞ்சிலுவைச் சங்கத்தின் களஞ்சியத்தில் இருந்து இந்தப் பொருட்கள் உரியமுறையில் வழங்கப்பட்டதா என்ற கேள்வி எழுகின்ற போதிலும், மக்கள் பயன்படுத்த முடியாமல் பல பொருட்கள் காலவதியாகி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
வணங்கா மண், வன்னி மக்களுக்கு சென்றடைய உதவிய அனைத்து பெருமக்களுக்கும் நன்றி. போர் முடிந்து அனைத்தையும் இழந்து, நிர்கதியாக நின்ற மக்கள் அவர்கள். போரை தடுத்து நிறுத்தவும், சமாதானம் ஒன்றை நிலை நாட்டவுமே வணங்கா மண் கப்பல் வன்னி நோக்கிச் சென்றது. ஆனால் அதற்கு முன்னரே எல்லாம் முடிந்துவிட்டது. எனவே இப்போது அது பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்றிருக்கிறது.
பொருட்களை அள்ளிக் கொடுத்தவர்களுக்கு நன்றி ! வணங்கா மண்ணில் இறுதிவரை பயணித்து பல சிரமங்களை அனுபவித்த கிருஸ்டீன் அவர்களுக்கும் உதயண்ணா அவர்களுக்கும் நன்றி. குடி நீர் இல்லாமல் கூட இவர்கள் கஷ்டங்களை அனுபவித்தார்கள். அக்ட் நவ்(Act Now) என்னும் அமைப்பிற்கும் நன்றி. தமிழக முதல்வர் கலைஞருக்கு நன்றி. கனிமொழிக்கும் நன்றி. அமைச்சராக இருந்து உதவிய ஜி.கே வாசன் அவர்களுக்கும் நன்றி. ஆர்.ராசா அமைச்சர் பொன் முடி அவர்களுக்கும் நன்றி. பெரும் உதவி புரிந்த அக்கினி சுப்பிரமணியனுக்கும் நன்றி. இந்திய மற்றும் இலங்கை செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்களுக்கு நன்றி. அப்போது தமிழக செயலாளராக இருந்த ஜொதிக்கும் நன்றி. இந்திய வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.எம் கிருஷ்ணா அவர்களுக்கும் நன்றி. மேலும் பலர் உதவிகளை செய்து விட்டு, இலை மறை காய் போல இருக்கிறார்கள். அவர்களுக்கும் நன்றிகள்.
வணங்கா மண் தொடர்பாக பல விமர்சனங்கள் இருந்தாலும். சரியான நேரத்தில் இக்கப்பல் சென்றடையவில்லை என்றாலும். உதவிய அனைவருக்கும் நாம் நன்றி சொல்லியே ஆகவேண்டும்… ஏன் எனில் 2009ல் வெளிநாட்டில் இருந்த தமிழர்களுக்கு தான் தெரியும் அவர்கள் அந்த வருடத்தில் எதனை எல்லாம் செய்தார்கள் என்று. அவர்கள் கொடுத்த உணவுகள், ஈழ உறவுகளுக்கு கிடைத்ததே ஒரு பெரிய விடையம். எனவே இதில் எந்த பாகுபாடும் காட்டாமல் நாம் அனைவரது கரங்களையும் நன்றியுடன் பற்றி நிற்கிறோம்… வணங்கா மண் என்று என்று, வருங்காலத்தில் எந்த தமிழராவது தேடினால் இந்த வரலாற்று பதிவு கிடைக்கும். அன்று நாம் பட்ட வலியை உணர முடியும்.
அன்புடன்,
கண்ணன்
ஒரு ஈழத் தமிழன் என்ற பெருமையோடு