September 9, 2024

„மீண்டும் மோகன்லால் – மீனா… விரைவில் ‚த்ரிஷ்யம்- 2‘!“ – ஜீத்து ஜோசப்

மோகன்லால்

மோகன்லால்

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மலையாளத்தில் ஹிட் அடித்த திரைப்படம் ‚த்ரிஷ்யம்.‘ த்ரில்லர் ஜானரான இதில் மோகன்லால், மீனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் மலையாளத்தில் பல கோடிகள் வசூல் செய்தது.

மோகன்லால் கேரக்டரில் தமிழில் கமலும் இந்தியில் அஜய்தேவ்கானும் நடித்திருந்தனர். இரண்டு மொழிகளிலும் ஜீத்து ஜோசப் இயக்கியிருந்தார். தற்போது இப்படத்தின் பார்ட்- 2 எடுக்கத் தயாராகிவிட்டார் ஜீத்து ஜோசப். இதுகுறித்து அவரிடம் பேசினேன்.

“ ‚த்ரிஷயம்- 2‘ பண்ணலாம்னு முன்னாடியே பிளான் இருந்தது. இந்த ஸ்க்ரிப்ட் வேலைக்கு ரொம்ப நேரம் எடுத்தது. ஏன்னா, முதல் பார்ட்டின் தொடர்ச்சியா பார்ட் 2 எடுக்க முடிவு எடுத்திருந்தேன். அதனால, என்னோட மற்ற படத்தின் வேலைகளுக்கு இடையில ‚த்ரிஷ்யம் 2‘ படத்துக்கான ஸ்க்ரிப்ட் வொர்க்கும் பண்ணிக்கிட்டு இருந்தேன். ஆறு மாசத்துக்கு முன்னாடி மோகன்லால்கிட்ட ஒன்லைன் மட்டும் சொல்லியிருந்தேன். அவருக்குப் பிடிச்சிருந்தது. சேர்ந்து வேலை பார்க்கலாம்னு சொல்லியிருந்தார். இந்த லாக்டெளன் நேரத்துல ‚த்ரிஷயம் 2‘ ஸ்க்ரிப்ட் வேலைகள் முடிக்கிறதுல இறங்கிட்டேன். கவர்மென்ட் ஷூட்டிங் ஆரம்பிக்க அனுமதி கொடுத்துட்டா படப்பிடிப்பு ஆரம்பமாகிடும். முதல் பார்ட்டின் தொடர்ச்சியாத்தான் ‚த்ரிஷ்யம் 2‘ இருக்கும். மீனாவும் இந்த புராஜக்ட்ல இருக்காங்க. ப்ரீபுரொடக்‌ஷன் வேலைகள் நடந்துக்கிட்டு இருக்கு. இப்போதைக்கு மலையாளத்துல தொடங்குறோம். மற்ற மொழிகளிலும் பார்ட் 2 விருப்பப்பட்டால் பண்ணலாம்“ என்கிறார் ஜீத்து ஜோசப்.

ஜித்து ஜோசப்

ஜித்து ஜோசப்

முன்னதாக ஜீத்து, மோகன்லால், த்ரிஷா நடிக்கும் ‚ராம்‘ படத்தை மலையாளத்தில் இயக்கிக்கொண்டிருந்தார். படப்பிடிப்பு பாதி முடிவடைந்திருந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக லண்டன் செல்ல படக்குழு முடிவு எடுத்திருந்தது. ஆனால், தற்போது இருக்கும் சூழலில் வெளிநாட்டில் ஷூட்டிங் நடத்த முடியாத காரணத்தால் ‚த்ரிஷ்யம் 2‘-வுக்கான வேலைகளில் இயக்குநர் இறங்கிவிட்டார்.