April 26, 2024

புலிகள் போர்க்குற்றம்:சாம் பெயரில் சுமா அனுப்பினாரா?

விடுதலைப்புலிகளது போர்க்குற்றங்களையும் விசாரிக்க கோரும் உள்ளடக்கத்துடன் தலைவர் இரா சம்பந்தன், ஐநாவுக்கு அனுப்பிய கடிதம் தொடர்பில், அதிலுள்ள விடயங்கள் தொடர்பில் நாங்கள் எல்லோரும் ஏற்றுக் கொண்டதாக இல்லை என சிவஞானம் சிறீதரன்; தெரிவித்துள்ளார்.

இன்று கிளிநொச்சியிலுள்ள தனது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் இலங்கையில் ஒரு போர்க்குற்றம் நடைபெற்றது, இன அழிப்பு நடைபெற்றது என்பது தெட்டத் தெளிவான உண்மை.

ஏம்.ஏ.சுமந்திரன் மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைத்திருந்த கடிதத்தில் இருதரப்பும் போர்க் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் என்ற விடயம் உள்ளடக்கப்பட்டு இருக்கின்ற காரணத்தினால் அது பற்றி நாங்கள் ஆராயவேண்டும். காரணம் இது ஒரு தரப்பு களத்தில் இல்லை மற்றைய தரப்பான அரசு இந்த நாட்டினுடைய இறைமையுள்ள அரசை நடத்துகின்ற ஒரு அரசாங்கம் தன் குடிமக்கள் மீது போர்க் குற்றத்தை நடத்தியுள்ளது.

குண்டுகளை வீசி மக்களைப் படுகொலை செய்திருக்கிறது, பாதுகாப்பு வலயங்கள் என்ற போர்வையில் மக்களை அழைத்து அதற்குள் குண்டு போட்டுக்கொலைசெய்துள்ளது. ஒரு இன அழிப்பு, இன அழிப்புப் போர்க்குற்றம் புரிந்திருந்தால் அதில் ஒரு தரப்பு இல்லாவிடின் அதனை எவ்வாறு விசாரிப்பது?

அது பற்றி கடந்த திங்கட்கிழமை ஆராயலாம் எனத் தீர்மானித்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இணைய வழியிலான ஒரு கலந்துரையாடலின் போது இரா.சம்பந்தன் கடிதத்தைத் தான் ஒரு தனிமனிதனாக அனுப்பிவிட்டார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குறிப்பிட்டிருந்தார்.

அவர் அதனை அனுப்பியிருந்தால் நாங்கள் எதனையும் செய்ய முடியாது. காரணம் அவர் சிங்கக் கொடியைப் பிடித்து விட்டு காளியின் கொடி என்று சொல்லுவார். அவர் நாடாளுமன்றத்தில் புலிகள் ஜனநாயகத்தை மதிக்கவில்லை மனித உரிமை மீறல்களைப் புரிந்தார்கள், அதனால் அவர்கள் அழிந்தார்கள் என்று பேசுவார் அதையும் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை அவருக்கு உள்ளது.

ஆனால் கடிதத்தை அனுப்பி விட்டு இரண்டு தரப்பையும் விசாரிக்க வேண்டும் என்றால் எல்லோரும் அதனை ஏற்றுக் கொண்டதாகக் கருத முடியாது. அவர் அனுப்பி இருக்கின்ற கடிதம் தொடர்பில் நாங்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டதாக இல்லையெனவும் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.