Mai 3, 2024

படித்த இளைஞர்களை தொழிலதிபர்களாக்க வேண்டுமென முதல்வர் ஸ்டாலின் அறியுறுத்தல்

நாட்டின் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டிற்கு பெரிதும் உதவும் வகையில் குறைந்த முதலீட்டில் தொழில் முனைவோர்களை உருவாக்குவதிலும், அதிக அளவில் வேலைவாய்ப்புகளை பெருக்குவதிலும் வேளாண்துறைக்கு அடுத்தபடியாக விளங்கும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் நலனுக்காகவும் மேம்பாட்டிற்காகவும் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்தும், அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டங்கள் குறித்தும்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

கொரோனா பெருந்தொற்றினால் பாதிப்பிற்குள்ளாகியுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு உதவிடும் வகையில் இந்த நிதியாண்டில் வரவு செலவு திட்டமுதலீட்டு​மானிய​ஒதுக்கீட்டில் 60 விழுக்காடான ரூ. 168.00 கோடி, 1975 தொழில் நிறுவனங்களுக்கு ஒரு மாத காலத்திற்குள் உடனடியாக விடுவிக்கப்பட்ட விவரங்கள் குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கேட்டறிந்தார்.

மேலும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் சந்திக்கும் மிகப் பெரிய சவாலான முறைசார்ந்த கடன் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், படித்த இளைஞர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்க செயல்படுத்தப்படும் சுய வேலைவாய்ப்பு திட்டங்களுக்கு 2021-22ஆம் நிதியாண்டில் முன்னுரிமை அளித்து நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை தவறாமல் எய்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

சுயவேலைவாய்ப்பு திட்டங்களில் ஆதிதிராவிடர்/பழங்குடியினர், சிறுபான்மையினர் மற்றும் மகளிர் ஆகிய பயனாளிகளின் விகிதாசார பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

தமிழ்நாட்டை, இந்தியாவின் மிகவும் துடிப்பான புத்தாக்கத்திற்கு உகந்த மாநிலமாக்க வேண்டுமென்று முதலமைச்சர் கேட்டுக்கொண்டார். மேலும், ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கும், இறக்குமதி தொழிலுக்குத் தேவையான உதவிகளையும் செய்ய ஏதுவாக சிறப்புத் திட்டங்களை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை உருவாக்க வேண்டுமென்றும்அறிவுறுத்தினார்.

நீண்ட காலமாக சிட்கோவில் நிலுவையிலுள்ள, மனை ஒதுக்கீடுதாரர்களுக்கு பட்டா வழங்குதல் மற்றும் தொழில் மனைக்கு நிர்ணயிக்கப்பட்ட அதிகமான விலையை குறைத்திட தீர்வுகாண வேண்டும்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், விண்வெளி வானூர்திகள், ரோபாடிக்ஸ் மற்றும் துல்லியமான கருவிகள் உற்பத்தி (Aerospace, Robotics & Precision Manufacturing) ஆகிய உயர் தொழில்நுட்பத் துறைகளில் ஈடுபட ஏதுவாக திட்டங்களை உருவாக்க வேண்டும்.

தமிழ்நாடு முழுவதும் ஒரே சீரான தொழில் வளர்ச்சியை உருவாக்கிட ஏதுவாக, தொழில் வளர்ச்சியில் பின் தங்கிய பகுதிகளில் புதிய தொழிற்பேட்டைகளை உருவாக்கி, தொழில் வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்றும், வேளாண் உற்பத்தி சார்ந்த தொழில் முனைவோர்களுக்குமுக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

இந்தக் கூட்டத்தில் மாண்புமிகு ஊரகத் தொழில் துறை அமைச்சர் திரு. தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.ச. கிருஷ்ணன், இ.ஆ.ப.,கூடுதல் தலைமைச் செயலாளர்/தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்க நிறுவன இயக்குநர் திரு. விபு நய்யர், இ.ஆ.ப., முதன்மைச் செயலாளர் / டான்சி மேலாண்மை இயக்குநர் முனைவர் எஸ். விஜயகுமார், இ.ஆ.ப., குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைச் செயலாளர் திரு.வி. அருண் ராய், இ.ஆ.ப., தொழில் வணிக ஆணையரக தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் திருமதி சிஜி தாமஸ் வைத்யன், இ.ஆ.ப., சிட்கோ நிறுவன மேலாண்மை இயக்குநர் திருமதி இரா. கஜலெட்சுமி, இ.ஆ,ப, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.