April 28, 2024

சர்வதேச நீதிமன்றத்தில் இராணுவத்தை பிணை எடுக்கும் சுமந்திரன்: – அம்பலப்படுத்திய சிரேஷ்ட சட்டத்தரணி

சர்வதேச நீதிமன்றத்தில் இராணுவத்தை பிணை எடுக்கும் சுமந்திரன்: -  அம்பலப்படுத்திய சிரேஷ்ட சட்டத்தரணி

மே 18இல் இறந்த படை வீரர்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம். ஏ. சுமந்திரன் நாடாளுமன்றில் அஞ்சலி செலுத்தியமையானது ஒட்டுமொத்த தமிழர்களையும்,இறந்த உயிர்களையும் கொச்சைப்படுத்தும், இராணுவத்தை சர்வதேச நீதிமன்றிலிருந்து பிணை எடுக்கும் செயல் என சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்துள்ளார்.

எமது ஊடறுப்பு நிகழ்ச்சிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

வெளிப்படையாக நாடாளுமன்றில் சுமந்திரன் அஞ்சலி செலுத்தியதாக காட்சிப்படுத்தினாலும். அவை உண்மையல்ல.காரணம் இதேபோன்று கடந்த ஆண்டும் நாடாளுமன்றத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இராணுவத்தினருக்கு அஞ்சலி செலுத்தி தமிழினத்தை காட்டிக்கொடுத்திருந்தார்.

அதாவது கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சுகயீன விடுமுறை காரணமாக நாடாளுமன்றத்திற்கு வருகை தராது இருக்கின்றமையால் அவரின் பிரதிநிதியாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ  ஊடகப்பேச்சாளரான எம். ஏ. சுமந்திரன் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

எனவே இதனை வெறுமனே எம். ஏ. சுமந்திரனின் அஞ்சலியாக மாத்திரம் பார்க்க முடியாது. கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ ஊடகப்பேச்சாளரின் அஞ்சலியானது கூட்டமைப்பின் அஞ்சலியாகவே பார்க்கப்படும்.

மேலும் சுமந்திரன் அஞ்சலி செலுத்தும் போது அங்கிருந்த கூட்டமைப்பின் உறுப்பினர்கள் யாரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.எனவே இது கூட்டமைப்பினர் ஒருமித்து எடுக்கப்பட்ட முடிவாகவே கருதப்படுகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.