Mai 10, 2024

அடுத்த யாழ்.முதல்வர் யார்?:டிசெ30 தெரிவு!

எழுத்து மூலமன கோரிக்கை முன்வைக்கப்பட்டால் மாத்திரமே ஆதரவளிக்க போவதாக டக்ளஸ் அறிவித்துள்ள நிலையில் 2021 ஆம் ஆண்டுக்கான பாதீடு தோற்கடிக்கப்பட்டதன் விளைவாக வறிதாக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் பதவிக்கான தெரிவு எதிர்வரும் 30 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ளது.

இதற்கான அறிவித்தலை வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ம. பற்றிக் நிறஞ்சன் விடுத்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்டிருந்த யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான பாதீடு கடந்த 16 ஆம் திகதி, மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனோல்ட்டினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. பாதீட்டுக்கு ஆதரவாக 21 வாக்குகளும், எதிராக 24 வாக்குகளும் அளிக்கப்பட்டன. 3 வாக்குகளனால் பாதீடு தோற்கடிக்கப்பட்டதனால், சட்ட ஏற்பாடுகளுக்கமைய முதல்வரின் பதவி வறிதாக்கப்பட்டது.

அந்த இடத்துக்கு மீண்டும் முதல்வர் ஒருவரைத் தெரிவு செய்யும் வகையில் 2012 ஆம் ஆண்டு 22 ஆம் இலக்க உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் (திருத்தச்) சட்டத்தின் 66ஏ பிரிவின் கீழ், மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கு அளிக்கப்பட்டுள்ள தத்துவத்தின் அடிப்படையில் யாழ். மாநகர சபைக்குப் புதிய முதல்வர் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ளது.

ஈபிடிபி தமது சார்பில் ரெமீடியஸை களமிறக்க திட்டமிட்டுள்ளது.

எனினும் கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தரப்புக்கள் ஈபிடிபி வேட்பாளரிற்கு ஆதரவளிக்க போவதில்லையென்ற நிலையில் அடுத்த முதல்வர் தொடர்பில் கேள்வி எழுந்துள்ளது.