Mai 10, 2024

நிலவுக்கு அனுப்பப்பட்ட சீன விண்கலம் பூமியை வந்தடைந்தது

சீனாவில் இருந்து நிலவுக்கு அனுப்பப்பட்ட விண்கலம் நிலவில் எடுக்கப்பட்ட பாறைகளுடன் பூமியை வந்தடைந்தது

நிலவில் இருந்து கற்கள், பாறைகளை பூமிக்கு எடுத்து வந்து ஆய்வு செய்வதற்காக சீனாவில் இருந்து கடந்த மாதம் 24ஆம் திகதி சீனா ஒரு விண்கலத்தை அனுப்பியது.

‘சேஞ்ச்-5’ என்ற அந்த ஆளில்லா விண்கலம் இந்த மாதம் முதலாம் திகதி நிலவில் பாதுகாப்பாக தரை இறங்கியது. அங்கு திட்டமிட்டபடி கற்கள், பாறைகள் போன்றவற்றை சேகரித்தது.

அதன்பின்னர் கடந்த 3ஆம் திகதி அந்த விண்கலம் நிலவு பரப்பில் இருந்து புறப்பட்டது. இது நிலவை சுற்றிக் கொண்டிருந்த ராக்கெட் விண்கலத்துடன் கடந்த வாரம் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது.

அந்த விண்கலத்தில் இருந்த 4 என்ஜின்கள் 22 நிமிடங்கள் இயக்கப்பட்டன. இதையடுத்து நிலவில் எடுக்கப்பட்ட பாறை, கற்களுடன் கடந்த 14ஆம் திகதி விண்கலம் பூமியை நோக்கி திருப்பப்பட்டது.

இந்த நிலையில், பூமியை நோக்கி தனது பயணத்தை தொடங்கிய ‘சேஞ்ச்-5’ விண்கலம் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 1.30 மணியளவில் சீனாவின் இன்னர் மங்கோலியா மாகாணம் சிசிவாங்க் மாவட்டத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

இதையடுத்து, அந்த விண்கலத்தில் கொண்டுவரப்பட்ட நிலவின் பாறை, கல் துகள்களை சேகரித்த சீன விண்வெளி விஞ்ஞானிகள் அதை ஆய்வு செய்யும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவெ அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் நிலவுக்கு விண்கலத்தை அனுப்பி அங்கிருந்து பாறைகள், மணல் போன்றவற்றை பூமிக்கு கொண்டு வந்து ஆய்வு செய்தன.

அதற்கு பின்னர் 45 ஆண்டுகளுக்கு பிறகு நிலவில் இருந்து பாறை மற்றும் மணல் துகள்களை கொண்டுவந்த 3ஆவது நாடு என்ற பெருமையை சீனா பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.