Mai 10, 2024

தடை செய்யப்படுமா கூட்டமைப்பு?

விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த போதே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும், ஒழித்திருக்க வேண்டும், அப்போது அவர்களின் மீது கருணை காட்டப் போய், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தவறு செய்து விட்டார் என்ற கருத்தை பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர மீண்டும் மீண்டும் வலியுறுத்த தொடங்கியிருக்கிறார்.

ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, பொதுப் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னர் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய முதலாவது உரையிலேயே, இந்தக் கருத்தை வலியுறுத்தியிருந்தார்.

அதற்கு கடுமையான எதிர்ப்புகளும் கூட எழுப்பப்பட்டன. பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும் கூட இந்தக் கருத்தை வன்மையாக எதிர்த்து பாராளுமன்றத்தில், கருத்து வெளியிட்டிருக்கிறார். அமைச்சர் சரத் வீரசேகர இந்தக் கருத்தை ஒன்றும் வாய்க்கு வந்தபடி கூறியிருக்கவில்லை.

அவர், நன்கு நிதானமாகத் தான் இதனை தெரிவித்திருக்கிறார்.

ஏனென்றால், பாராளுமன்றத்தில் இந்தக் கருத்தை வலியுறுத்திய பின்னர், கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியாகிய அரசாங்கதரப்பு வாரஇதழ் ஒன்றுக்கு அளித்திருந்த செவ்வியிலும், இதனைப் பற்றி இன்னும் விரிவாகப் பேசியிருக்கிறார்.

ஜேர்மனியில் ஹிட்லர் தோற்கடிக்கப்பட்ட பின்னர், அவரது நாஸி கட்சி தடை செய்யப்பட்டது போல, கம்போடியாவில் ஜெனரல் பொல்பொட்டுக்குப் பின்னர், கெமர்ரூஜ் இயக்கம் இல்லாமல் போனது போல, ஈராக்கில் சதாம் ஹூசேனுக்குப் பிறகு பாத் கட்சி அழிக்கப்பட்டது போல, எகிப்தில் ஹொஸ்னி முபாரக்கிற்குப் பின்னர், அவரது தேசிய ஜனநாயக கட்சி தடை செய்யப்பட்டது போல, விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட போதே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் தோற்கடித்திருக்க வேண்டும் என்று அதில் வலியுறுத்தியிருக்கிறார் சரத் வீரசேகர.

ராஜபக்ஷ அரசாங்கத்தில் இப்போது மஹிந்த ராஜபக்ஷ போன்றவர்களின் குரல்கள் பலவீனமடைந்து, கோட்டாபய ராஜபக்ஷ போன்ற கடும் போக்குமடையவர்களின் குரல்கள் மேலெழத் தொடங்கியிருக்கின்றன. ஜனாதிபதி கோட்டாபய இதுபோன்ற சர்ச்சைக்குரிய விவகாரங்களைப் பற்றி பேசுவதில்லை. அது தனக்கும் தனது ஆட்சிக்கும் வெளியுலகில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும்.

அதனால் தனது குரலைப் பிரதிபலிக்கக் கூடியவர்களை வலுப்படுத்தி வருகிறார் ஜனாதிபதி. அவர்களின் மூலம் தனது கருத்துக்களை வெளிப்படுத்திக் கொள்கிறார். விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றவர்கள் தான் முன்னர் இதுபோன்ற கருத்துக்களை வெளிப்படுத்தி வந்தனர்.

அவர்களுக்குப் போட்டியாக சரத் வீரசேகர இப்போது களமிறங்கியிருக்கிறார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடை செய்ய செய்திருக்க வேண்டும் மஹிந்த ராஜபக்ஷ தவறிழைத்து விட்டார் என்று துணிச்சலாக பாராளுமன்றத்தில் பேசிய போது, பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவோ, அல்லது அவருக்கு மிகவும் விசுவாசியாக இருப்பதாக காட்டிக் கொண்டவர்களோ யாருமே, வாய் திறக்கவில்லை.

இதிலிருந்து, அரசின் அதிகாரம் எந்தளவுக்கு மாற்றடைந்திருக்கிறது என்பதை உணர முடியும். அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடை செய்வது பற்றிய சிந்தனை அரசாங்கத்தின் மூளையின் ஒரு ஓரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கிறது என்ற உண்மையையும் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

அண்மையில் பாராளுமன்றத்தில் பிரதமரும் ஜனாதிபதியும், கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுடன் பேசிய போது, மீண்டும் பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டும் என்று கூறியதாக ஒரு செய்தி வெளியாகியது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மீண்டும் பேச வேண்டும் என்று அவர்கள் இருவரும் கூறியிருந்த நிலையில், இப்போது சக்திவாய்ந்த அமைச்சராக மாறியிருக்கும் சரத் வீரசேகர, கூட்டமைப்புக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டிருப்பது ஏன்? கூட்டமைப்புடன் நடத்தப்படும் பேச்சுக்களை சரத் வீரசேகர போன்ற இனவாதிகள் விரும்பவில்லை என்று இதனை எடுத்துக் கொள்வதா?

அல்லது பிள்ளையும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டுகின்ற காரியத்தை அரசாங்கத்தில் உள்ள தலைவர்கள் செய்து கொள்கிறார்கள் என்று எடுத்துக் கொள்வதா? எனினும், சரத் வீரசேகரவின் இந்த நிலைப்பாட்டுடன் சரத் பொன்சேகா ஒத்துப் போகவில்லை.

அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடை செய்யக் கோருவதை முட்டாள்த் தனமானது என்று கூறியிருக்கிறார். கூட்டமைப்பை தடை செய்யும் முடிவை அரசாங்கம் எடுக்குமானால், அதுதான் சிங்களத் தலைவர்கள் வரலாற்றில் செய்த மிகப்பெரிய தவறாக இருக்க முடியும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்டது. புலிகளின் பதிலியாக இருக்கிறது என்ற விமர்சனங்கள், குற்றச்சாட்டுக்கள் முன்னரும் இருந்தன. இப்போதும் இருக்கின்றன. ஆனாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சட்டரீதியாகத் தடை செய்வதற்கான நியாயங்களோ, ஆதாரங்களோ கிடையாது.

அவ்வாறான ஒரு முடிவை எடுத்தால், அரசாங்கம் சர்வதேச அளவில் கடுமையான அழுத்தங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். அது தமிழர்களின் உணர்வுகளுடன், மீண்டும் ஒருமுறை விளையாடுகின்ற நடவடிக்கையாக அவர்களைச் சீண்டி விட்டு, நீறு பூத்துக் கிடக்கும் தணலை நெருப்பாக மாற்றி விடும் செயலாக அமைந்து விடும்.

இது சரத் பொன்சேகா போன்றவர்களுக்குத் தெரிந்திருக்கின்ற அளவுக்கு, அமைச்சர் சரத் வீரசேகர போன்றவர்களுக்குத் தெரியாது என்றில்லை. இது தெரியாமல் தான் இந்தளவுக்கு எம்பிக் குதிக்கிறார்கள் என்று எவரேனும் மட்டமாக நினைத்தால், அது தான் முட்டாள்தனம்.

கூட்டமைப்பை தடை செய்யும் போது, ஏற்படக் கூடிய எதிர்வினை எவ்வாறாக இருக்கும் என்பதை ஊகிக்கக் கூட முடியாத ஒருவரை, கோட்டாபய ராஜபக்ச பொது பாதுகாப்பு அமைச்சராக நியமித்திருக்கமாட்டார்.

உண்மையிலேயே, அவ்வாறான ஒருவரை நியமித்திருந்தால், ஜனாதிபதி தவறிழைத்து விட்டார் என்று தான் அர்த்தம். சரத் வீரசேகர போன்றவர்கள் இதுபோன்ற கருத்துக்களையும், நடவடிக்கைகளையும் ஏன் முன்னெடுக்கிறார்கள்? அவர்களுக்கு, இந்த நெருப்பு அணைந்து விடக் கூடாது. இந்த நெருப்பு இருக்கும் வரையில் தான் அவர்களின் இனவாத அரசியல், தேசியவாத அரசியல் பருப்பு வேகும்.

இனவாத, தேசியவாத அரசியல் முனைப்பு வீரியம் இழந்திருந்த, 2015 பொதுத் தேர்தலில், சரத் வீரசேகரவினால் வெற்றிபெற முடியவில்லை.

ஆனால், இனவாதம், தேசியவாதம் கூர்மைப்படுத்தப்பட்ட 2020 பொதுத்தேர்தலில் அவர் கொழும்பு மாவட்டத்திலேயே, அதிகளவு விருப்பு வாக்குகளை அள்ளிக் கொண்டார். இவர்களைப் போன்றவர்களின் இருப்புக்கு, தணல்கள் அவ்வப்போது பற்றியெரிய வேண்டும். அந்த நெருப்பில் தான் அவர்களால் குளிர்காய முடியும். இனி, ஜேர்மனி, ஈராக், கம்போடியா, எகிப்து போன்ற நாடுகளில் சர்வாதிகாரிகளாக இருந்தவர்களின் கட்சிகள், அவர்களுக்குப் பிறகு தடை செய்யப்பட்டது. அல்லது அழிக்கப்பட்டது குறித்து சரத் வீரசேகர குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தக் கட்சிகள் அனைத்தும், கம்யூனிச அல்லது தேசியவாத சித்தாந்தங்களைக் கொண்டவையே தவிர, எந்தவொரு தேசிய இனங்களையும் பிரதிநிதித்துவம் செய்தவை அல்ல. அதைவிட, அதிகாரத்துக்காகவே அவை தவறுகளைச் செய்தன. துணைபோயின. அதிகாரத்திலும் இருந்தன.

ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகாரத்தில் இருந்த கட்சியோ அதிகாரத்துக்காக போராடும் கட்சியோ அல்ல. ஒரு தேசிய இனத்தின் உரிமைக்காக குரல் கொடுக்கும் கட்சியாகத் தான் அது உள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

விடுதலைப் புலிகளுடனும் தான் சர்வதேசம் பேசியது, அவர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது, கடைசியில் அழிக்கப்படும் போது, வேடிக்கை பார்த்தது என்ற கோணத்தில், சரத் வீரசேகர போன்றவர்கள் சிந்தித்தால், அது பெரும் தவறு. விடுதலைப் புலிகளுக்கு அங்கீகாரம் கொடுக்கப்பட்டாலும், அவர்கள் ஆயுத வழிமுறைகளை விட்டு வரத் தயாராக இருக்கவில்லை.

அத்துடன், சர்வதேச நிகழ்ச்சி நிரல்களுக்கு உடன்படவும், தயாராக இருக்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவ்வாறு இல்லை, வல்லரசுகளின் செல்லப்பிள்ளையாகவும் கூட அவ்வப்போது இருக்கிறது.

இவ்வாறான நிலையில் கூட, கூட்டமைப்பை தடை செய்யும் முடிவை, சரத் வீரசேகர போன்றவர்கள் எடுத்தால், அதற்காக தமிழர்கள் அவருக்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டியிருக்கும். ஏனென்றால், அவ்வாறான முடிவு, தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான போராட்டத்தை இன்னொரு கட்டத்துக்கு நகர்த்தும்.