Mai 11, 2024

இராணுவ வீரரை தவறாக சித்தரிக்கும் ஒளிப்படத்தை வெளியிட்ட சீனாவுக்கு அவுஸ்ரேலியா கண்டனம்!

ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஒரு குழந்தையை அவுஸ்ரேலிய இராணுவ வீரர் கொலை செய்வது போல சித்தரிக்கும் போலி ஒளிப்படத்தை வெளியிட்ட சீனாவுக்கு அவுஸ்ரேலியா கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.

முரண்பட்ட இந்த படத்தை வெளியிட்டதற்காக சீனா வெட்கப்பட வேண்டும் என்று அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறியுள்ளார்.

இந்த பதிவை போலியானதாக குறிப்பிடும் அவுஸ்ரேலிய அரசாங்கம், அதை டுவிட்டரிலிருந்து நீக்க அந்த நிறுவனத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த இடுகை உண்மையிலேயே பழிவாங்கும் எண்ணத்துடன், முற்றிலும் மூர்க்கத்தனமானதாக உள்ளதாக பிரதமர் மேலும் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘சீன அரசாங்கம் இந்த இடுகையை பதிவிட்டதற்கு வெட்கப்பட வேண்டும். இது உலகின் பார்வையில் அவர்களை தாழ்த்துகிறது. இந்த ஒரு தவறான படம், எங்கள் பாதுகாப்புப் படைகள் மீது மோசமான கறையை படிய செய்கிறது.

ஒரு ஜனநாயக, தாராளவாத நாட்டிடம் இருந்து எதிர்பார்க்கப்பட்டபடி, தற்போது குற்றஞ்சாட்டப்பட்டுள்ள போர்க்குற்றங்களை விசாரிக்க அவுஸ்ரேலியா ஒரு வெளிப்படையான செயல்முறையை நிறுவியுள்ளது என கூறினார்.

2009ஆம் மற்றும் 2013ஆம் ஆண்டுகளுக்கு இடையில் 39 ஆப்கானிய பொதுமக்கள் மற்றும் கைதிகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 25 அவுஸ்ரேலிய வீரர்களுக்கு தொடர்புள்ளதாக நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளதாக இந்த மாதத்தின் தொடக்கத்தில் அவுஸ்ரேலிய பாதுகாப்புப்படை அறிக்கையொன்றை வெளியிட்டது.

இந்த விசாரணை பரவலான கண்டனத்துக்கு வித்திட்டத்தை அடுத்து, இந்த விவகாரம் குறித்த விசாரணையை அவுஸ்ரேலிய பொலிஸ்துறை கையிலெடுத்துள்ளது.

சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லிஜியன் ட்சௌ, ஒரு புனையப்பட்ட படத்தை டுவிட்டரில் வெளியிட்டார். அதில் அவுஸ்ரேலிய இராணுவ வீரரொருவர் குழந்தையொன்றின் கழுத்தில் இரத்தக்களரியுடன் கத்தியை வைத்திருப்பதை போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது. அந்த குழந்தை தனது கைகளால் ஆட்டுக்குட்டி ஒன்றை இறுக்கப்பிடித்திருப்பதையும் அந்த படத்தில் காண முடியும்.

அவுஸ்ரேலிய ராணுவ வீரர்கள் சிலர் 14 வயதான இரண்டு ஆப்கானிஸ்தான் சிறுவர்களை கத்தியை கொண்டு கொன்றதாக வெளியான குற்றச்சாட்டை குறிக்கும் வகையில் இந்த புகைப்படத்தை சீனா வெளியிட்டதாக கூறப்படுகிறது.