Mai 3, 2024

நிதி ஒதுக்கீட்டுக்கு ஐ.நா பொதுச்சபை அனுமதி!

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான சாட்சியங்களை சேகரிப்பது மற்றும் தரவுகளை பாதுகாக்கும் செயற்பாடுகளுக்குரிய நிபுணர் குழு உருவாக்கத்திற்கு தேவையான நிதி ஒதுக்கீட்டுக்கு ஐ.நா பொதுச்சபை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிபுணர் குழு உருவாக்க நகர்வை தடுக்க ஸ்ரீலங்கா அரசாங்கம் பல முயற்சிகளை எடுத்தபோதிலும் ஸ்ரீலங்கா- சீன உறவுகள் மீதான மேற்குலக நாடுகளின் வியூகத்தால் கொழும்பு அதிகாரமையம் கடும் இராஜதந்திர தோல்வியை சந்தித்துள்ளது.

ஐ.நா மனித உரிமை பேரவையின் 48 ஆம் கூட்டத்தொடர் அடுத்த மாதம் மாதம் ஆரம்பமாக உள்ள நிலையில் நிபுணர்கள் குழுவின் உருவாக்கத்துக்கு தேவையான 2.8 மில்லியன் அமெரிக்க டொலர் நிதிக்கு ஐ.நா பொதுச்சபை பாதீட்டு நிர்வாக குழு பச்சைக்கொடி காட்டியுள்ளது.

கடந்த மார்ச்சில் ஜெனிவாவில் கொண்டுவரப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்தின் அடிப்படையில் 13 உறுப்பினர்கள் அடங்கிய தனியான செயலணி ஒன்று உருவாக்கப்படவுள்ளது.

இந்த செயலணிக்கு அனைத்துலக குற்றவியல் சட்டத்தில் அனுபவம் கொண்ட ஒருவர் தலைவராக நியமிக்கப்படுவார் என்பதுடன், அவருக்கு உதவியாக மேலும் இரண்டு சட்டவலுநர்கள் பணியாற்றுவார்கள்.

இந்தக்குழுவின் வழிநடத்தலில் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பான சாட்சியங்களை சேகரிப்பது மற்றும் பாதுகாத்தல் தொடர்பான நகர்வுகளை ஒருங்கிணைக்கவும் திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.