Mai 2, 2024

நெடுந்தீவும் போகிறது!

 

நெடுந்தீவில் புத்த பிக்குகளிற்கான இறுதி கால ஓய்வு இல்லமொன்றை அமைப்பது தொடர்பில் அரச உயர்மட்ட குழு நேரில் சென்று இன்று பார்வையிட்டுள்ளது.

தேசிய மரபுரிமைகள்,இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவுடன் அங்கஜன் இராமநாதன் நெடுந்தீவுக்கான விஜயமொன்றை இன்று மேற்கொண்டே புதிய ஓய்வில்லத்திற்கான இடங்களை பார்வையிட்டுள்ளனர்.

இதனிடையே வடக்கு கிழக்கில், இந்து வணக்கஸ்தலங்கள் அமைந்துள்ள பகுதிகளில் ஆராய்ச்சிகளை மேற்கொள்கின்றபோது பௌத்த சின்னங்களை அவதானிக்க முடிவதாக தொல்லியல் திணைக்களத்தின் பொது முகாமையாளர் அனுர மனதுங்க என்பவர் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கில் தொல்லியல் சின்னங்கள் திட்டமிட்டு அழிக்கப்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டிற்கு பதிலளித்துள்ள அவர் புராதான சின்னங்களை பாதுகாக்கவும் அவை தொடர்பாக ஆராய்ச்சி செய்வதற்குமே எமது திணைக்களம் இருக்கின்றது. எவ்வாறான இடங்களில் புராதன சின்னங்கள் உள்ளன என்பதை அந்தந்த இடங்களிற்கும் சமயங்களிற்கும் இடையிலான தொல்லியல்கள் தொடர்பிலேயே ஆராயப்படும். ஆனால் இங்கு ஒரு சிக்கல் நிலை ஏற்படுகின்றது.

இந்து வணக்கஸ்தலங்கள் அமைந்துள்ள பகுதிகளில் ஆராய்ச்சிகளை மேற்கொள்கின்றபோது பௌத்த சின்னங்களை அங்கு அவதானிக்க முடிகின்றது. அவ்வாறான இடங்களில் புதிதாக விடயங்களை திணிப்பதாக தவறான நிலைப்பாடு ஒன்று உள்ளது.

தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களமானது அனைத்து சமயங்களிற்கும் மதிப்பளித்து செயற்படும் திணைக்களமாகும். பொதுமக்கள் இவ்வாறான பிரச்சினைகள் உள்ளது என்பது தொடர்பாக தமக்கு அறியத்தந்தால், அவ்வாறு பிரச்சினைகள் இருப்பின் அது தொடர்பில் ஆராய்ந்து சீர் செய்வதற்கு முடியும்.

நாங்கள் அனைத்து மதங்களையும் மதித்து அந்தந்த சமய தொல்பொருள் சின்னங்களை ஆராய்ந்து பொது மக்களிற்காகவே சேவை செய்கின்றோம் எனவும்  அனுர மனதுங்க தெரிவித்துள்ளார்.

இவ்விஜயத்தின் போது, தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் திருமதி. நிஷாந்தி ஜெயசிங்க, இலங்கை தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அநுர மனதுங்க, நெடுந்தீவு பிரதேச செயலாளர் சி. சத்தியசோதி, தொல்லியல் திணைக்கள அதிகாரிகள், மற்றும் தொல்லியல்துறையினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.