Mai 18, 2024

மாவீர தெய்வங்களை வணங்கிடுவோம் – ரேணுகாசன்

கார்த்திகையும் பூக்குமே கார்த்திகை மாதமே
கண்களில் நீரும் கசியும் நேரமே
கார்த்திருந்தோமே காவற் தெய்வங்களே
கனவை நனவாக்கிடும் மாவீர செல்வங்களேபார்த்திருந்த பார்வை மங்கிப் போனதே
நேற்றிருந்த மகிழ்வு தொலைந்து போனதே
வீற்றிருந்த வீரம் களத்தில் சாய்ந்ததே
ஊற்றெடுத்த உரிமையை காத்திட வா வீரனே

தாய்க்கொரு மகனென பிறந்தாய்
தந்தைக்கும் நீயே உறுதுணையாய் நின்றாய்
தாய்நிலம் பறிபோகுதே என்றே களமாடப் புறப்பட்ட மறவனே! – அத்
தாய்நிலத்தில் நீயும் வித்தாகிப் போனாயோ

இளமையில் எழும் ஆவலை அடக்கி
உரிமையை உயிரிலும் உயர்வாய் நேசித்து
இதயத்தால் தமிழோடு காதல் கொண்டு
உயிரையும் தந்த காத்த உயர்தகு பிறவிகளே!

இந்நாளில் எங்கள் கவலைகளை
உங்களிடம் சமர்ப்பிக்கிறோம்
அந்நாளில் நீவீர் கொண்ட நெஞ்சுரத்தை எமக்காக தாருங்களேன்
உங்களின் தியாகத்தினால் தானே இன்றும் தமிழினம் வாழுதே
நீங்கள் சிந்திய குருதியில் தானே தமிழீழ தேசமும் நிலைக்குதே

வரலாற்றை படைத்தோரே! வரலாறாய் வாழ்வோரே – தமிழரை
உலக அரங்கில் நிமிர்ந்தெழச் செய்த அறப்போர் புரிந்த புனிதர்களே!வணங்குகிறோம்.

பல பல கனவுகளோடு களமாடி
சமரோடு புகுந்தாடி
எதிரியை ஓட ஓட விரட்டிய வீரமறத் தமிழர்களே
உங்களின் நிழலில் எங்களின் வாழ்வு

வல்லமை தாருங்கள் எம் காவற் தெய்வங்களே
வலியது வாழும் என்ற நியதியில்
வாழ்ந்து காட்டிய ஈழ மறவர்களே
வலியதாய் வாருங்கள்

பூமிப் பந்தில் எம்மூலையில் வாழ்ந்திடினும் உம்மை மறவாது வணங்கிடுவோம்

வீரவணக்கம்