Mai 6, 2024

சர்வதேச விசாரணையூடாக கூண்டில் ஏற்றவேண்டும்:P2P

சிங்கள தேசத்தின் ஆட்சியாளர்களின் மக்கள் நலன் சாராத ஆட்சி முறைமையினால் ஏற்பட்ட பொருளாதார சரிவினால், இன்று பாரிய அரசியல் கிளர்ச்சியினை சிங்களதேசம் எதிர்நோக்கியுள்ளது. ஆட்சி மாற்றத்திற்காக சிங்கள மக்கள் இன்று வீதியில் இறங்கி போராடிக்கொண்டிருக்கின்றார்கள். அறுபத்தி ஒன்பது லட்சம் சிங்கள வாக்குகளால் வெற்றி பெற்றதாக மார்தட்டிய சிங்கள ஜனாதிபதியை இன்று அதே மக்கள் வீட்டுக்கு போ என வீதியில் இறங்கி கோஷமிடுகின்றார்கள்     என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் தெரிவித்துள்ளது.அது விடுத்தள்ள ஊடக அறிக்கையில்,தமிழராகிய நாமும் சிங்கள தேசத்தினால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் தேசமும் இந்த பொருளாதார நெருக்கடியால் மிகக்கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஆயினும் இந்த பொருளாதார நெருக்கடிக்கான மூலகாரணமாக எம்மீது நடத்தப்பட்ட ஆக்கிரமிப்பு இனவழிப்பு யுத்தத்திற்காக உலக நாடுகள் எங்கும் வாங்கிக்குவித்த கடனே ஆகும். இக்கொடிய ஆக்கிரமிப்பு யுத்தத்தின் வடுக்களை தாங்கி நிற்கும் நாம் அந்த யுத்தத்தின் கடன் பளுவையும் சுமந்து நிற்கின்றோம். 
தமிழருக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கருத்திற் கொண்டு இந்திய அரசின் அனுசரணையுடன் தொப்புள் கொடி உறவுகளாகிய தாய் தமிழகமும், தமிழக அரசும் முன்னெடுத்துள்ள பொருளாதார உதவித் திட்டத்தை அன்புடன் வரவேற்கின்றோம். இவ்வுதவிகளை உங்களையும் எம்மையும் பிரிக்கும் கடலை தாண்டி நேரடியாகவே எமது மண்ணில் இந்திய நடுவண் அரசின் உதவியுடன் கொண்டுவந்து சேர்ப்பதுடன் தமிழ் மக்களின் கைகளிலேயே நேரடியாக கிடைப்பதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தும்படி உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம். அத்துடன் தமிழ் மக்களிற்கான நிரந்தர அரசியல் தீர்வுக்கான அழுத்தத்தை கொடுக்குமாறும் வேண்டுகின்றோம்.          சிங்கள தேசத்தில் எந்த ஆட்சி மாற்றமும் தமிழ் மக்களிற்கு எவ்விதமான விடிவையும் தரப்போவதில்லை. எமது பட்டறிவில், ஆட்சிக்கட்டில் ஏறும் எந்த சிங்கள அரசுமே எமது உரிமைகளை பறிப்பதிலும், எமது நிலங்களை அபகரிப்பதிலும், எமது வளங்களை சுரண்டுவதிலும், தமிழரின் குடிசன பரம்பலை மாற்றியமைப்பதிலும் பின் நிற்கப்போவதில்லை. 
நாம் பொருளாதார மீட்சிக்காக போராடவில்லை, மாறாக எமது பிறப்புரிமைக்காகவே போராடிக்கொண்டிருக்கின்றோம். இழந்த எமது இறைமையை மீட்கவே போராடிக்கொண்டிருக்கின்றோம். நாம் 20 வருடங்களுக்கு மேல் மின்சாரமின்றி, எரிபொருட்கள் இன்றி, அடிப்படையான அத்தியாவசியமான மருந்துகள் உட்பட்ட பொருட்கள் கூட இன்றி மிகக்கடுமையான பொருளாதார தடைகள் மத்தியிலும்  சுதந்திர மனிதர்களாக, தன்னிறைவான தற்சார்பு பொருளாதாரத்துடன், சிறப்பான தலைமையை கொண்ட நடைமுறை அரசிலேயே வாழ்ந்து வந்தோம். இப்பொருளாதார நெருக்கடி எமக்கு ஒன்றும் புதியல்ல. ஆயின் தற்போது ஏற்படுள்ள நிலைமைகளை பயன்படுத்தி எமது மக்களையும் இளையவர்களையும் சிலர் தவறாக வழிநடத்தி சிங்கள தேசத்தின் ஆட்சி மாற்ற போராட்டங்களின் பகடைக்காய்களாக பயன்படுத்த விழைகின்றார்கள். இது தொடர்பாக அனைத்துத் தமிழ் மக்களும் விழிப்புடன் செயல்படுமாறு வேண்டுகின்றோம். அவர்களை சர்வதேச விசாரணையூடாக கூண்டில் ஏற்றவேண்டும்.  
இன்று ஏற்பட்டுள்ள நிலைமைக்கான மூல காரணங்களை ஆராயாது, சிங்கள தேசம் ஆட்சியாளர்களை மாற்றுவதன் மூலம் தீர்க்க விளைகின்றது. அதை விடுத்து, சிங்கள தேசம் தமிழ் மக்களின் நியாயமான உரிமை போராட்டத்தினை ஏற்றுக்கொள்வதுடன், எம்மீதான இனவழிப்புக்கு சர்வதேச நீதி பொறிமுறையினூடாக நீதி பெற வழிசமைப்பதுடன், இறைமையுள்ள வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தேசத்தை அங்கீகரிப்பதனூடாகவே மீட்சி அடைய முடியும் என்பதனையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.    

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert