April 26, 2024

பச்சைத்தமிழர் யார்? மஞ்சள் தமிழர் யார்? தமிழக முதல்வர்

தமிழர்கள் பச்சை தமிழர்கள் என்றால் தோனி (Dhoni)மஞ்சள் தமிழர் என்று சிஎஸ்கே பாராட்டு விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்(mk-stalin) தெரிவித்தார்.

ஐபிஎல் தொடரின் 14-வது சீசனில் சிஎஸ்கே அணி பட்டம் வென்றது. தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றதை கொண்டாடும் வகையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் சிஎஸ்கே அணிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,தோனியின் ரசிகராகவே இந்த நிகழ்ச்சிக்கு நான் வந்திருக்கிறேன். என் தந்தை கலைஞர் எனது பேத்தி, பேரன் உட்பட எங்கள் குடும்பமே தோனியின் ரசிகர்கள்.

தமிழ்நாட்டு மக்களின் செல்லப்பிள்ளையாக இருக்கிறார் தோனி. நாம் பச்சை தமிழர்கள் என்றால் தோனி மஞ்சள் தமிழர். தோனியின் ஹெலிகொப்டர் ஷொட்களை மறக்கவே முடியாது. டெண்டுல்கருக்கு பிறகு கிரிக்கெட் என்றால் அது தோனி தான் என்று உருவாக்கி உள்ளார்.

நான் ஆட்சி ஏற்ற பின் அனைவரும் சொல்வார்கள் தினமும் ஒரு சிக்ஸர் அடிக்கிறேன் என்று. அப்போது எல்லாம் நான் தோனியை நினைத்துக் கொள்வேன்.

சிறந்த துடுப்பாட்டவீரர், சிறந்த விக்கெட் கீப்பர் என்பதை விட அவர் சிறந்த கப்டனாக நான் பார்க்கிறேன். ஒரு அணியை வழிநடத்துவது சவாலான ஒன்று . சீனியர் முதல் இளம் வீரர்களை ஒருங்கிணைத்து தோனி ஈட்டியிருக்கும் வெற்றி ஆளுமைக்கான சான்று. இலக்கும் உழைப்பும் ஒன்று சேர்ந்தால் யாராலும் வீழ்த்தமுடியாது,

இது விளையாட்டிற்கு மட்டுமல்ல அரசியலுக்கும் பொருந்தும். அபார வெற்றியுடன் மீண்டு எழுந்திருக்கும் சென்னை அணியை வாழ்த்தி வணங்குகிறேன். நீங்கள் விளையாட்டை தொடருங்கள் நாங்கள் மக்கள் பணியை தொடர்கிறோம். தோனி நீங்கள் இன்னும் பல போட்டிகளுக்கு சென்னை அணியை வழிநடத்த வேண்டும் என்றார்.