Mai 2, 2024

ஓரங்கட்டப்பட்டார் மகிந்த?

20ஆவது திருத்தச் சட்டத்தின் பின்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ச(Mahinda Rajapaksa) ஓரங்கட்டப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதியைச் சுற்றியுள்ளவர்களே இவ்வாறு செயற்பட்டுள்ளதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் முஸ்லிம் விவகார இணைப்பாளர் ஷிராம் யூனுஸ்(Shiram Yunus) தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவுடனான(Samuditha Samaravikrama) கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே யூனுஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அந்த கலந்துரையாடலில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது அரசாங்கத்திற்குள் ஜனாதிபதி, பிரதமர் என இரண்டு குழுக்கள் உள்ளதாகவும், இன்று பெயருக்கு மட்டுமே பிரதமர் இருப்பதாகவும் அவர் கூறினார்.

இன்றும் மஹிந்தவைச் சுற்றி வர்த்தகர்கள் இருப்பதாகவும் அவர்களுக்கிடையில் பெருமளவிலான வைரஸ்கள் இருப்பதாகவும் யூனுஸ் சுட்டிக்காட்டினார். இவையனைத்தும் பணத்தை அடிப்படையாகக் கொண்டது என்றார்.

மேலும், ஈஸ்டர் தாக்குதல் குறித்து இந்தியாவுக்கு தகவல் கிடைத்தாலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், தாக்குதலுக்குப் பிறகு முஸ்லிம் சமுகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

எனவே அரசாங்கம் எப்போது வீழ்ச்சியடையும் என முஸ்லிம்களுக்கு உறுதியாக தெரியவில்லை எனவும் 98% முஸ்லிம்கள் மொட்டுவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஞானசார தேரர் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், தாம் ஞானசார தேரரை ‘தேரர்’ என குறிப்பிடவில்லை என தெரிவித்துள்ளார். அப்போது கர்தினால்கள் கூட பெரும் குழப்பத்தில் இருந்ததாகவும் அவர் கூறினார்.