Mai 4, 2024

புலம்பெயர் தமிழ்ச் சமூகத்துடனான சந்திப்பு – அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தினருடன் பேச்சு நடத்த தயாரென அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ பகிரங்கமாக சர்வதேசத்திற்கு தெரிவித்திருந்த நிலையில், தடை செய்யப்பட்ட நாடு கடந்த தமிழ் அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தையை நடத்தப்போவதில்லை என தற்போது அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

உள்நாட்டுப் பிரச்சினைகள் உள்ளக பொறிமுறையின் ஊடாக தீர்க்கப்பட வேண்டும் என்றும், இது தொடர்பாக புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தையை நடத்தப் போவதாகவும் ஐ.நா. பொதுச் செயலாளரிடம் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச அண்மையில் உறுதியளித்திருந்தார்.

எனினும் இலங்கையில் தடை செய்யப்பட்ட நாடு கடந்த தமிழ் அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தையை நடத்தப்போவதில்லை என்று வெளிவிவகார அமைச்சரான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

உலகத் தமிழர் பேரவை போன்ற தடைசெய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புகளுடன் நேரடி பேச்சுவார்த்தைகள் இருக்காது என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் கூறியுள்ளார்.

மேலும், நல்லிணக்க செயன்முறையின் ஒரு பகுதியாக அரச சார்பற்ற அமைப்புக்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் புலம்பெயர் உறுப்பினர்களுடன் கலந்துரையாட தயாராக இருக்கின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 31ஆம் திகதி பிரித்தானியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். கிளாஸ்கோ நகரில் சூழல் பாதுகாப்பு சார்ந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் லண்டன் செல்லவுள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விஜயத்தின்போது பிரித்தானியாவிலுள்ள புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தினருடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இருந்த போதிலும், குறித்த மாநாட்டில் இருந்து நாடு திரும்பியதும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஸ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களை சந்திப்பார் என்று வெிளவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.