Mai 3, 2024

சிங்கப்பூரில் கொரோனா தடுப்பூசியால் கோடீஸ்வரனான 16 வயது சிறுவன்!

கொரோனா வைரஸின் பல வேரியன்ட்கள் பரவலாக மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. எனவே தொற்றிலிருந்து தங்களை தற்காத்து கொள்ள பலரும் தடுப்பூசி போட்டு கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். கோவிட் -19 தடுப்பூசியை போட்டு கொள்ள மக்களை முன்வர செய்ய பல்வேறு நாடுகளின் அரசுகள் பல வழிகளைப் பயன்படுத்துகின்றன.

இதனிடையே சிங்கப்பூரில் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டுள்ள ஒரு சிறுவன் கோடீஸ்வரனாகி உள்ளான். அமெரிக்காவின் வாஷிங்டன்னில் தடுப்பூசி போட்டு கொள்ளும் டீனேஜர்ஸ்களுக்கு விலையுயர்ந்த Apple AirPod வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது நினைவிருக்கலாம். அதை போல ஏதாவது குறிப்பிட்ட சிறுவனுக்கு அதிர்ஷ்டம் அடித்திருக்க கூடுமோ என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் விஷயம் அப்படி அல்ல. இருப்பினும், தடுப்பூசி போட்ட பிறகு எந்த நாட்டின் அரசாங்கமும் யாரையும் கோடீஸ்வரர்களாக மாற்றியிருக்காது. ஆனால் சிங்கப்பூர் அரசு மாற்றி இருக்கிறது. இதன் பின்னணி குறித்து பார்க்கலாம்.

சிங்கப்பூரில் வசிக்கும் 16 வயது டீனேஜ் சிறுவன் ஒருவன் தொற்றிலிருந்து தன்னை காத்து கொள்ளும் பொருட்டு அந்நாட்டில் புழக்கத்தில் உள்ள ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை போட்டு கொண்டுள்ளான். தடுப்பூசியை எடுத்த 6-வது நாளில் அந்த சிறுவனுக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து அந்த சிறுவன் விரைந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டான். அங்கு அவனை பரிசோதித்த மருத்துவர்கள் கார்டியாக் அரெஸ்ட் (இதய நிறுத்தம்) ஏற்பட்டுள்ளதை கண்டறிந்தனர். இதனை தொடர்ந்து அந்த சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பிறகு மெல்ல மெல்ல பாதிப்புகளில் இருந்து மீண்ட அந்த சிறுவன் திடீரென்று கோடீஸ்வரன் ஆவான் என்பதை அவனோ அல்லது அவனது குடும்பத்தினரோ சற்றும் எதிர்பார்க்கவில்லை.

தடுப்பூசி போட்டு கொண்டதன் விளைவாக சிறுவனுக்கு கார்டியாக் அரெஸ்ட் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கருதி, சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் அந்த சிறுவனுக்கு இழப்பீடு வழங்கியுள்ளது. சிங்கப்பூரின் தடுப்பூசி நிதி உதவி திட்டத்தின் கீழ் (Vaccine Injury Financial Assistance Program), தடுப்பூசி போட்டு கொண்ட பிறகு ஒருவரின் உடல்நலன் திடீரென பாதிக்கப்பட்டு ஏதேனும் பிரச்சனைகளை எதிர்கொண்டால், அந்த நபருக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் தான், தடுப்பூசி போட்டு கொண்ட பிறகு இதய கோளாறால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. தடுப்பூசியின் பக்க விளைவு காரணமாக சிறுவனுக்கு பாதிப்புகள் ஏற்பட்டதா என்ற சோதனையில், சிறுவன் Myocarditis என்ற பிரச்சனையை எதிர்கொண்டது தெரிய வந்தது.

Myocarditis காரணமாகவே அவருக்கு தடுப்பூசிக்கு பிறகு இதய கோளாறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஃபைசர் கோவிட் -19 தடுப்பூசியின் பக்க விளைவுகளை குறிப்பிட்ட சிறுவன் எதிர்கொண்டதாக கருத்தப்பட்டதால், சிங்கப்பூர் அரசு அச்சிறுவனுக்கு 2.25 லட்சம் சிங்கப்பூர் டாலர்களை வழங்கியது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.23 கோடி (ரூ.1,22,69,619). தற்போது குறிப்பிட்ட சிறுவன் மருத்துவமனையில் நலமாக இருப்பதாகவும், இன்னும் சில நாட்கள் சிகிச்சை தேவைப்படும் என்றும் சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.