Mai 2, 2024

பேத்தியை பார்க்க அமெரிக்கா செல்கிறார் கோட்டாபய -தள்ளிப்போடப்பட்டது அமைச்சரவை மாற்றம்

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இடம்பெறவிருப்பதாகக் கூறப்பட்ட அமைச்சரவை மாற்றம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நாட்களில் அரசாங்கத்தில் மாற்றத்தை கொண்டு வருவது சிக்கல் என்று பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டியதாலும், சில உத்தேச அமைச்சகங்கள் தொடர்பாக எழுந்துள்ள அதிருப்திகளாலும் இந்த மாற்றம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, புதிய மாற்றங்களை அமுல்படுத்துவது சுமார் ஒரு மாதகாலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அடுத்த மாதம் அமெரிக்கா சென்று ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றவும் அவரது பேத்தியை பார்க்கவும் தயாராகி வருவதாகவும், அவர் திரும்பி வரும்போது புதிய திருத்தங்களைச் செய்வார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வார தொடக்கத்தில், சுகாதாரம் உட்பட ஏழு முக்கிய அமைச்சர்கள் புதிய மாற்றங்களின் கீழ் இடமாற்றம் செய்யப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டபோதிலும் இரண்டு நாட்களுக்குப் பிறகு சுகாதார அமைச்சு மாற்றப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டது. எனினும், சமீபத்திய தகவல்களின்படி, சுகாதார அமைச்சு பதவி மாற்றப்படுகிறது.

முன்பு அறிவித்தபடி கல்வி அமைச்சராகவும் உயர்கல்வி அமைச்சராகவும் இருவரை நியமிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது. அமைச்சர் நாமல் ராஜபக்சவின் பொறுப்பில் உள்ள ஒரு அமைச்சுப்பதவி கொண்டுவரப்பட உள்ளது.

வெகுஜன ஊடக மற்றும் தகவல் அமைச்சர் பதவியை டலஸ் அழகப்பெரும பொறுப்பேற்க தயக்கம் காட்டியதால், அதை மாற்றுவதற்கான விவாதங்கள் இன்னும் நிறைவடையவில்லை என்றும் கூறப்படுகிறது.