அம்பாறையில் 31 பிக்குகள் படுகொலை- ஆரம்பிக்கப்பட்ட குற்றப் புலனாய்வு பிரிவின் விசாரணை!

அம்பாறை அரந்தலாவ பகுதியில் இடம்பெற்ற படுகொலை தொடர்பாக ஸ்ரீலங்கா குற்றப் புலனாய்வு பிரிவினரினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த தகவலை ஸ்ரீலங்கா சட்டமா அதிபர் இன்றைய தினம் உச்ச நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

அம்பாறை அரந்தலாவை பகுதியில் கடந்த 1987 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 2 ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்டதாக கூறப்படும் தாக்குதலில் 31 பிக்குகள் மற்றும் நான்கு பொது மக்கள் கொல்லப்பட்டனர்.

34 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற இந்த தாக்குதல் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என அந்த தாக்குதலில் உயிர் தப்பிய ஆதாயுல்பத்த புத்தசார தேரர் அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்திருந்தார்.

அரந்தலாவை பிக்குமார் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தற்போது உயிருடன் இருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அவர் இந்த மனுவில் கோரியிருந்தார்.

அத்துடன் பல பயங்கரவாத தாக்குதல்களுக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் தற்போதும் உயிருடன் உள்ளதால் அவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியிருந்தார். தாக்குதலில் காயமடைந்த தமக்கு இரண்டு கோடி ரூபாய் இழப்பீட்டை வழங்குமாறு உத்தரவிட வேண்டும் எனவும் தேரர் தனது அடிப்படை உரிமை மீறல் மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் அரந்தலாவை படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களிடம் வாக்குமூலம் பெறுமாறும் முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா வலியுறுத்தியிருந்தார். இதற்கமையவே ஸ்ரீலங்கா குற்றப் புலனாய்வு பிரிவினரினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டள்ளன.