Mai 10, 2024

மணி விவகாரம்: முன்னரே தீர்மானிக்கப்பட்டதா?

பிரதான வீதிகளுக்குக் குறுக்காக யாழ் நகரில்  மாநகர சபைக்குத் தெரியாமல் ஐந்து முக்கிய இடங்களில் வீதிக்கு குறுக்காக – மேலே – பாரிய விளம்பர தட்டிகள் அமைப்பதற்கு சபை உரிய கட்டணம் ஏதும் அறவிடாமல் யாழ் மாநகர முதல்வர் வி மணிவண்ணன் இரகசியமாக அனுமதி வழங்கினார் என்று கூறி முதல்வர் மணிவண்ணனுக்கு எதிராகக் குற்றச்சாட்டு என காலைகதிர் பத்திரிகையில்  இன்று வெளியானது

அதில் சிங்கள நிறுவனம் ஒன்று யாழ் மாநகரசபையின் கீழ் உள்ள யாழ் நகரப் பகுதியில்  குற்றச்சாட்டு நேற்று நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாரிய விளம்பரத்தட்டிகளை அமைப்பதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை தன் பங்குக்குக்கு 55 லட்சம் ரூபா வாடகை கட்டணமாக அறவிட்டிருக்கையிலேயே, அவற்றுக்கு எந்தக் கட்டணமும் அறவிடாமல் மாநகர முதல்வர் சத்தம் சந்தடியின்றி வாய்முலம் அனுமதி அளித்தார் என்றும்

இந்த கட்டுமானத்தில் ஈடுபட்ட சிங்கள மொழி பேசும்  விளம்பரதார நிறுவனம், நாம் வீதி அபிவிருத்தி அதிகார சபையினதும் மாநகர முதல்வரினதும்  அனுமதியைப் பெற்றே கட்டுமானத்தில் ஈடுபடுகின்றமையோடு மாநகர முதல்வரும் ஏனைய இரு உறுப்பினர்களும் நேரில் வந்தே இடத்தை அடையாளப்படுத்தி சென்றனர் எனவும் தெரிவித்தனர்.

இதேநேரம் இந்த விளம்பர நிறுவனத்தினர் விளம்பரங்களைக் காட்சிப்படுத்துவதற்காக பருத்தித்துறை வீதியில் சங்கிலியன் தோப்பிற்கு அருகாகவும், செம்மணி வீதியிலுமாக இரண்டு வளைவுகளும், காங்கேசன்துறை வீதியில் ஓர் வளைவும், பலாலி வீதி மற்றும் கண்டி வீதியில் மற்றிரண்டும் என மொத்தம் ஐந்து வளைவுகள் அமைப்பதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு 55 லட்சம் ரூபா செலுத்தி பெறப்பட்ட அனுமதி கைவசம் வைத்துள்ளனர். இவ்வாறு  காலைக்கதிர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும்   முதல்வர்  இரகசியமாக அனுமதி வழங்கவில்லை  விளம்பர வளைவு தட்டி அமைக்க முதல்வர் மணிவண்ணனால் முன்னரே கோரிக்கை விடப்பட்டதுடன் யாழ்.தினக்குரல் பத்திரிகையில் இது தொடர்பாக 13.02.2021 செய்தி வெளியானமை குறிப்பிடத்தக்கது.