Mai 8, 2024

வவுனியா சிவில் சமூக சிங்கமும் கல்லா கட்டுகிறார்!

உயிர்ப்புடன் உள்ள தமிழர்களின் போராட்டங்களை நீர்த்துப்போக செய்வதற்காகவே அரச சார்பற்ற நிறுவனங்கள் செயற்படுவதாக வவுனியாவில் தொடர்போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 12 வருடமாக பல்வேறு நிறுவனங்கள் காணாமல் போனோர் குடும்பங்களை தேடி வந்தன. நிமல்கா பெர்னான்டோ, பார்த்தசாரதி, வடகிழக்கு சிவில் சமூக அமையத்தை சேர்ந்த சிங்கம், பிரிட்டோ பெர்ணாண்டோ என்று பலதரப்புக்கள் தேடி வந்தன.

இவை அனைத்தும் காணாமல் ஆக்கப்பட்டோர், மற்றும் பாதிக்கப்பட்ட தமிழர்களிற்கான தீர்வு ஆகியவற்றை நீர்த்துப்போகச்செய்து பணம் சம்பாதித்தார்கள்.

இந்நிலையில் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றிற்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்களின் குடும்பங்களிற்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று வவுனியா நெடுங்கேணிப்பகுதியில் நாளையதினம் நடைபெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் இருந்து இயங்கும் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை நாளையதினம் கலந்துரையாடல் ஒன்றுக்கு அழைத்துள்ளது. மகஜர் ஒன்று தங்களால் வழங்கப்படப்போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கத்திற்கு வழங்கப்போவதாக சிலரிடமும், தூதரகங்களிற்கு வழங்கப்போவதாக சிலரிடமும் மாறிமாறி தெரிவித்துள்ளனர். அதில் உண்மைத்தன்மை இல்லை. இது பாதிக்கப்பட்ட மக்களை திசை திருப்பும் விடயமாகத்தான் இருக்கிறது. எனவே பாதிக்கப்பட்ட மக்கள் அந்த கலந்துரையாடலில் பங்குகொள்வதில் எச்சரிக்கையா இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.

அரசசார்பற்ற நிறுவனங்கள் பாதிக்கப்பட்டோரை காட்டி காசு உழைக்கும் இயந்திரங்களாக மாறிவிட்டன. இவை நிதிகளை பெறவேண்டுமாக இருந்தால் இலங்கை அரசின் அனுமதியுடனேயே பெறமுடியும். இவற்றால் இலங்கைக்கு எதிராக ஒருபோதும் செயற்படமுடியாது

தமிழர்களிற்கெதிரான இவர்களின் சூழ்ச்சி 2009 முதல் தொடர்கின்றது. இது உயிர்ப்புடன் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டங்களை அழிக்கும் சதியே. நாம் எப்போதும் நிதிக்காக போராடவில்லை. நீதிக்காகவே போராடுகின்றோம் எனவும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்கள் தெரிவித்துள்ளன.