Mai 8, 2024

ஜெர்மனியில் இருந்து 23 மினி ஆக்ஸிஜன் ஆலைகள் விமானம் மூலம் இந்தியா கொண்டுவரப்படுகின்றன!

ஜெர்மனியில் இருந்து 23 மினி ஆக்ஸிஜன் ஆலைகள் விமானம் மூலம் இந்தியா கொண்டுவரப்படுகின்றன!

இதற்கான நடைமுறை முடிந்ததும் உடனடியாக ஆக்ஸிஜன் தயாரிக்கும் இயந்திரங்களை கொண்டு வந்து சேர்க்க விமானப்படை விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் கொரோனா சிகிச்சை பெறுபவர்களுக்கு ஆக்ஸிஜன் முக்கியமான தேவையாக மாறியிருக்கும் சூழலில் தேவை அதிகரித்ததன் காரணமாக நாடு முழுவதும் மருத்துவ ஆக்ஸிஜனுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆக்ஸிஜன் பற்றாக்குறை என்பது தற்போதையை நிலைமையை மேலும் மோசமாக்கி உயிரிழப்பு எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்துவிடும் என்பதால் போர்க்கால அடிப்படையில் ஆக்ஸிஜன் உற்பத்தியை நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன. இருப்பினும் நிலைமையை சமாளிக்க முடியாமல் திணறல் ஏற்படுகிறது.

நாட்டில் நிலவும் இந்த அசாதாரண சூழலை எதிர்கொள்ளும் வகையில் பல முக்கிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஜெர்மனியில் இருந்து சிறிய அளவிலான மொபைல் ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகளை விமானம் மூலம் கொண்டு வரும் முடிவை மத்திய அரசு எடுத்திருக்கிறது.

இதன் மூலம் 23 சிறிய அளவிலான ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் ஆலைகளை விமானங்கள் மூலம் கொண்டுவர என பாதுகாப்புத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

ஒவ்வொரு மொபைல் ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலையும் ஒரு நிமிடத்திற்கு 400 லிட்டர் மற்றும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 2,400 லிட்டர்கள் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை.

இது தொடர்பாக பாதுகாப்புத்துறையின் முதன்மை செய்தித்தொடர்பாளர் பாரத் பூஷன் பாபு கூறுகையில், ஜெர்மனியில் இருந்து கொண்டு வரப்படும் மொபைல் ஆக்ஸிஜன் தயாரிக்கும் இயந்திரங்கள், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் பாதுகாப்புப் படை சார்பில் செயல்படும் மருத்துவமனைகளில் நிறுவப்படும் என தெரிவித்தார். ஒரு வார காலத்திற்குள் இந்த ஆக்ஸிஜன் ஆலைகள் இந்தியாவிற்கு கொண்டுவந்து சேர்க்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். இதற்கான நடைமுறை முடிந்ததும் உடனடியாக ஆக்ஸிஜன் தயாரிக்கும் இயந்திரங்களை கொண்டு வந்து சேர்க்க விமானப்படை விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இவை போர்டபிளாக இருப்பதால் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் சென்று ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய முடியும் என்பதால் மிகவும் பயனுள்ளது எனவும் இது போல மேலும் பல இயந்திரங்கள் வாங்குவதற்கான முயற்சிகளும் நடைபெற்றுவருவதாக விமானப் படை வட்டாரம் கூறுகிறது.