Mai 8, 2024

ரூ.7,500 கோடி நஷ்டஈடு தந்தால் மட்டுமே கப்பல் விடுவிக்கப்படும் எகிப்து அரசு அதிரடி அறிவிப்பு!

சூயஸ் கால்வாயில் தரை தட்டி நின்ற, ‘எவர் கிவன்’ கப்பலின் உரிமையாளர் ரூ.7,500 கோடி நஷ்டஈடு வழங்கினால் மட்டுமே கப்பலையும், 25 இந்திய ஊழியர்களையும் விடுக்க முடியும் என்று எகிப்து அரசு அறிவித்துள்ளது. ஜப்பானை சேர்ந்த, ‘சோயி கிசென் கய்சா லிமிடெட்,’ என்ற நிறுவனத்துக்கு சொந்தமானது ‘எவர் கிவன்’ சரக்கு கப்பல். 400 அடி நீளமுள்ள பிரமாண்டமான கப்பலான இது, கடந்த மாதம் 23ம் தேதி எகிப்தில் உள்ள முக்கிய சர்வதேச நீர்வழிப் பாதையான சூயஸ் கால்வாயின் குறுக்கே தரை தட்டி நின்றது. இதனால், அந்த வழியாக செல்ல வேண்டிய 400க்கும் மேற்பட்ட சரக்கு கப்பல்கள் அந்த பாதையை பயன்படுத்த முடியாத நிலை உருவானது.

சூயஸ் கால்வாயில் கப்பல் போக்குவரத்து முடங்கியதால், எகிப்து அரசுக்கு தினமும் ரூ.100 கோடி முதல் ரூ.200 கோடி வரை இழப்பு ஏற்பட்டது. கப்பல் தரைதட்டி நின்ற இடத்தில் 18 மீட்டர் ஆழத்திற்கு 27 ஆயிரம் கியூபிக் மீட்டர் அளவுக்கு மணல் தோண்டி எடுக்கப்பட்டது. கரையின் மீது கப்பல் மோதி நின்றிருந்ததால், கரையும் உடைக்கப்பட்டு அகலப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, கடந்த மாதம் 29ம் தேதி கப்பல் விடுவிக்கப்பட்டது. இந்த கப்பல் பயணத்துக்கு தயாராகி விட்ட நிலையிலும், எகிப்து அரசு அதை விடுவிக்க மறுத்து விட்டது.

சூயஸ் கால்வாயின் அருகில் உள்ள ‘கிரேட் பிட்டர் ஏரி’யில் அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதில், பணியாற்றும் 25 இந்திய ஊழியர்களும் அதில் சிக்கியுள்ளனர். இந்நிலையில், எவர் கிவன் கப்பலால் ஏற்பட்ட சூயஸ் கால்வாயில் ஏற்பட்ட சேதம், வருவாய் இழப்பு போன்றவற்றுக்காக ரூ.7,500 கோடி நஷ்டஈடு வழங்கினால் மட்டுமே கப்பலை விடுவிக்க முடியும் என்று எகிப்து அரசின் சூயஸ் கால்வாய் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால், கப்பலின் உரிமையாளரான ஜப்பான் நிறுவனம், அதிர்ச்சி அடைந்துள்ளது. அதே நேரம், ‘நஷ்டஈடு கோரி எங்கள் நிறுவனத்துக்கு எகிப்து அரசிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை,’ என்று சோயி நிறுவனத்தின் தகவல் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

* இந்திய ஊழியர்களுக்கு சிக்கல்

‘எவர் கிவன்’ நஷ்டஈடு பிரச்னை எப்போது முடிவுக்கு வரும் என்பதை உறுதியாக கூற முடியாத சூழல் உள்ளது. இதில் உள்ள 25 இந்திய ஊழியர்களும், ஏற்கனவே கடந்த 20 நாட்களுக்கு மேலாக கப்பலில் சிக்கியுள்ளனர். நஷ்டஈடு பிரச்னை தீரும் வரையில் இவர்களையும் விடுவிக்க முடியாது என்று எகிப்து அரசு கூறியுள்ளது. இதற்கு சர்வதேச போக்குவரத்து ஊழியர்கள் கூட்டமைப்பின் செயலாளர் ஸ்டீபன் காட்டன்  கவலை தெரிவித்துள்ளார். அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று எகிப்து அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.